நோபல் பரிசுபெற்ற இனப்பெண் வழக்கறிஞர்

நோபல் பரிசுபெற்ற இனப்பெண் வழக்கறிஞர்

  • By Magazine
  • |

– பழனி அரங்கசாமி

விடாமுயற்சியும், அறிவுக்கூர்மையும், சலியாத உழைப்பும் கொண்ட தென்னாப்பிரிக்கத் தமிழ் இன வழக்கறிஞர் நவநீதம் பிள்ளை 2026- ஆம் ஆண்டின் அமைதிக்கான் நோபல்  பரிசினைப் பெற்றுள்ளார் என்பது உலக முழுதும் உள்ள தமிழ்மக்கள் பெருமைப்படத்தக்க நிகழ்ச்சியாகும். டர்பன் நகரில் எளிய மக்கள் வசிக்கும் கிளேர்வுட் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே சுயமாகக் கட்டுரை எழுதிப் பரிசுகள் பெற்றிருந்தார். செய்த குற்றம் ஒன்றேயாயினும் கறுப்பர் இனமக்களுக்குக் கூடுதல் தண்டனையும் வெள்ளையருக்கு குறைவாகவும் கொடுப்பதை நன்கு அறிந்த நவநீதம் பிள்ளை அத்தகைய தென்னாப்பிரிக்க நிறவெறிக் கொள்கையினை எதிர்த்துப் போராடியுள்ளார்.

நவிபிள்ளை என்றும் குறிப்பிடப் பெறும் இவர் டர்பன் நகரில் ஒரு இந்திய வம்சாவளியின் தமிழ்க் கும்பத்தில் 1941- செப்டம்பர் மாதம் 23-ஆம் நாள் நாராயணசாமி- சாந்தம்மா தம்பதியருக்கு பிறந்தார். இத்தம்பதியர் இளமைக் காலத்திலேயே திருமணம் செய்து கொண்டவர்கள். ஆணும் பெண்ணுமாக அவர்கட்கு பிறந்த எட்டுக் குழந்தைகளில் ஐந்தாவதாக பிறந்தவர் தான் நவநீதம். இவரது பாட்டனும் பாட்டியும் 1890- ஆம் ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்ட வத்தலக்குண்டு எனும் கிராமத்திலிருந்து தென்னாப்பிரிக்கக் கரும்புத் தோட்டங்களில் ஒப்பந்தக் கூலியராக பணிபுரியச் சென்றவர்கள். கரும்பாலையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் அவரது பாட்டனார் இரு கைகளையும் இழந்து விட்டார். மகன் நாராயணசாமியே பெற்றோரோடு தனது குடும்பப் பொறுப்பினையும் ஏற்று நடத்த வேண்டியிருந்தது.

கார் ஓட்டுநராக பணிபுரிந்த நாராயணசாமி கூடுதல் வருமானத்துக்கு சிறுவாணிகமும், மீன்பிடித் தொழிலும் செய்து தனது அனைத்துப் பிள்ளைகளையும் கல்வி பயிலச் செய்தார்.

டர்பனில் அவர்கள் வசித்த கிளேர்வுட் பகுதி மக்களின் உதவிபெற்று நேட்டால் பல்கலைக்கழகத்தில் நவிபிள்ளை 1963- ஆம் ஆண்டு பி.ஏ.பட்டமும், 1965- இல் வழக்கறிஞர் பட்டமும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கறுப்பர்களுக்கும் வெள்ளையருக்கும் தனித்தனி வகுப்புகள். வெள்ளையருக்கான நூலகத்தில் இந்தியரை உள்ளிட்ட கறுப்பர்கள் நுழையக் கூடாது. கறுப்பருக்கென்று இருந்த சிறிய நூலகத்தில் ஒரே ஒரு பாடநூலை 20 மாணவர்கள் மாற்றி மாற்றி படிக்க நேர்ந்த கசப்பான அனுபவத்தை நவநீதம் இன்றும் நினைவு கூர்கிறார். இத்தகைய நிறவெறியின் துன்பங்களையும் சகித்துக் கொண்டே நவநீதம் தனது சட்டப்படிப்பை முடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கான உதவித்தொகை பெற்று அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலையில் சட்ட மேற்படிப்பில் டாக்டர் பட்டமும் பெற்றார். டர்பன் நகரத்தில் வழக்காட வருகின்ற பொதுமக்களுக்கு வழக்கறிஞர்களை அமர்த்திக் கொடுக்கும் சட்ட நிறுவனங்கள் நவநீதம் அவர்களை தத்தமது நிறுவனங்களில் அமர்த்திக் கொள்ளவில்லை. இவரை பணியமர்த்தினால் வெள்ளை வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்பதுவே காரணம். எனவே தானே ஒரு சட்ட நிறுவனத்தை அமைத்து நிறவெறியின் கொடுமைக்கு ஆளாகும் கறுப்பினத்தவருக்கும் பிறருக்கு அட்டர்னியாக பேருதவி புரிந்துள்ளார்.

கடுமையான வெப்பமும், சுண்ணாம்புக் காளவாய்களும் நிறைந்த ராப்பென் தீவில் தனிச்சிறையில் வாடிய நெல்சன் மாண்டலேயின் விடுதலைக்காக வழக்கு மன்றத்தில் வாதாடியுள்ளார்.

அவருடைய கணவரே 1971- ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்ட அரசியல் கைதியாகச் சிறைபட்ட போது அவரிடம் சட்டத்துக்குப் புறம்பான கேள்விகளைக் கேட்டு துன்புறுத்தக் கூடாது என வாதிட்டு வெற்றி பெற்றார்.

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்க நாட்டின் தலைவராக இருந்த நெல்சன் மண்டேலா நவநீதம் பிள்ளை அவர்களை 1995-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க உச்சநீதிபதியாக நியமித்தார். நீதிபதியின் அறைக்குள் வெள்ளையரைத் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது. நானே நீதிபதியாகிய பின்னர் தான் நீதிபதிக்கான தனி அறையில் நுழைய முடிந்தது என்கிறார் நவிபிள்ளை.

ருவாண்டா என்றும் ஆப்பிரிக்க நாட்டின் குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தின் தலைமையராகவும் நவி பிள்ளையை மண்டேலா பரிந்துரை செய்தார். 1999- ஆம் ஆண்டு முதல் நான்காண்டுகளுக்கு மேலாக அப்பணியினை நிறைவு செய்தார். ருவாண்டாவில் துட்சி இனப்பெண்களை ராணுவம் ஆளும் கட்சியின் ஆதரவோடு கற்பழித்த வழக்கில் வன்புணர்ச்சியும் படுகொலைக்குச் சமமாகத் தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றம் என்று தீர்ப்பளித்தார். அதன் பின்னர் ஹேக் நகரின் உலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் 2008- ஆம் ஆண்டு வரை மேல் முறையீட்டு பிரிவின் தலைமை நிதிபதியாகவும் இருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுமன்றத் தலைவராக இருந்த பான்-கி-மூன் நவி பிள்ளையை உலக மனித உரிமைக் கழகத்தின் கமிஷனராக (2009-2014) நியமித்தார். சாதீய வேற்றுமைகளும், நிறவெறிக் கொடுமைகளும் உலகளாவிய அளவில் தடுக்கப்பட்டு மனிதகுலம் ஒன்றே என்கிற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். பொதுமக்கள் அமைதியாக நடத்தும் போராட்டங்களை அனுமதிக்க வேண்டும். அதனைத் தடுப்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்கிற கருத்தையும் வலியுறுத்தினார். 2013-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போருக்கு பின்னர் இலங்கைக்கு வந்து பார்த்து அங்கு நடந்த மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும் மிகவும் கண்டிக்கத்தக்கவை என்று குறிப்பிட்டார். இவர் தமிழராக இருப்பதனால், இலங்கைக்கு எதிராகக் கூறுகிறார் என்கிற இலங்கை அரசின் கருத்தை முற்றுமாக மறுத்து பதிலளித்தார். சிரியா நாட்டின் மூன்று வருட உள்நாட்டுப் போரில் (20.11.2024) ஏறத்தாழ இரண்டு லட்சம் பொதுமக்களும், குழந்தைகளும் அநியாயமாகக் கொல்லப்பட்டிருப்பது உலகளாவிய மனித குலத்தின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது என்று சுட்டிக்காட்டினார். அதே போன்று ரோகிங்கா அகதிகளை பர்மிய ராணுவம் மனிதாபிமானம் அற்ற முறையில் நடத்துவதையும், வெளியேற்றுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். காஜா போரில் இஸ்ரேல் ராணுவம் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களைக் குண்டுப் போட்டுக் கொல்வது மனித உரிமைக்கு மீறிய கொடுஞ்செயல் என்று கண்டித்தார்.

குற்ற இயல் வழக்கறிஞரும், தனது நண்பருமாகிய மேடம் அன்சு படையாச்சியோடு சேர்ந்து டர்பன் நகரில், குழந்தைக்கல்வி, பெண்டிர் நலன், சமூக தொண்டு பற்றிய ஒரு அமைப்பினைத் தோற்றுவித்து சாதி மதபேதமின்றி ஆயிரக்கணக்கான பெண்டிருக்கு உதவி புரிந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் தொடங்கப் பெற்ற உலகளாவிய மரணதண்டனை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராகவும், ஆலோசகராகவும் நவிப்பிள்ளை பணிபுரிந்துள்ளார்.

2026-ஆம் ஆண்டில் அவர்பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு அவரை உலகப்புகழ் பெற்ற மாமனிதராக உயர்த்தி உள்ளது. அதற்கு முன்னர் அமைதிக்கான பற்பல நோபல் பரிசுகளை தகுதியுள்ள இரண்டு பேருக்கு பிரித்துக் கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு நவிபிள்ளைக்கு மட்டுமே உலக அமைதிக்கான இப்பரிசு வழங்கப்பெற்றுள்ளது. இதற்கு முன்னமேயே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளன.

நேட்டால் பகுதியைச் சார்ந்த வழக்கறிஞர் பரஞ்சோதி என்னும் அந்தோணிப் பிள்ளையை 1965-ஆம் ஆண்டில் நவநீதம் பிள்ளை மணந்து கொண்டார். பல வருடங்களாகக் குழந்தைப் பேறின்மையால் அவர்கள் இரண்டு குழந்தைகளைத் தத்து எடுத்து கொண்டனர். முப்பது ஆண்டுகள் கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ்ந்தனர். குவாண்டா, டான்சானியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் நவிபிள்ளை பணிநிமித்தம் தனது கணவரை பிரிந்திருக்க வேண்டியிருந்தது. நிறவெறியை எதிர்த்து நடத்தப்பெற்ற பற்பல போராட்டங்களில் கலந்து கொண்ட அவரது கணவர் பல ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிட்டது. எளிய குடும்பத்தில் பிறந்து நிறவெறி மிகுந்த தென்னாப்பிரிக்க நாட்டில் தடை பல கடந்து வழக்கறிஞர் பட்டம் பெற்று உலகளாவிய பேரும் புகழும் பெற்றுள்ள நவி பிள்ளைக்கு நோபல் பரிசு கிடைத்தது முற்றும் பொருத்தமேயாகும். இப்போதைய 86-ஆவது வயதிலும் நலமுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, அவரைக் தொடர்பு கொள்ள முடியாமல், நோபல் கமிட்டியின் தலைவரே ஜெர்மனி நாட்டின் நூரெம்பர்க் நகரில் ஒரு மாநாட்டில் இருந்த நவி பிள்ளையை நேரில் சந்தித்து செய்தியினையும் கூறி அவரை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *