நீரிழிவை நீக்கு!

  • By Magazine
  • |

கே.பி.பதமநாபன்

நீரிழிவு நோயிந்த நீணிலத்தில்

நிறையத்தான் பேர்க்கிங்கே இருத்தல் உண்மை ;

பேரிழிவு இஃதென்றே எண்ண வேண்டாம் ;

பெருங்கவலை என்றிதனைக் கொள்ள வேண்டாம் ;

சீரியநல் உணவோடே உடற்பயிற்சி

சீராக இல்லாத இந்நாள் வாழ்வே

பாரிலிந்த பிணிக்கிங்கே காரணம் காண்;

படைப்பியற்கை யோடொத்து வாழ்ந்தால் தீரும் !

மாரியின் பின் உழுகின்ற உழவன் நாளும்

மண்பானைக் கூழருந்தி விடியல் வேளை

சூரியனும் உதிக்கும் முன் தானெழுந்து

சுறுசுறுப்பாய் உழைப்பதனால் அவன்தன் மேனி

நீரிழிவால் துயர்கண்ட வரலாறில்லை;

நிதம் நீராகாரத்தை அருந்தி நல்ல

வீரியத்தோ டுழைக்கின்ற பாட்டாளிக்கும்

வியாதியிது வந்ததெனக் கேட்டதுண்டோ?

பூரிமசால் படியரிசி சோற்றோ டிங்கே

புலாலினையும் அள்ளியள்ளி உண்ட பின்னர்

காரினிலே செல்வதுவும் கண்ட நேரம்

கட்டிலிலே உறங்குவதும் மதுவை நாளும்

வாரியென அருந்துவது மாகத் தொப்பை

வயிற்றினையே வளர்க்கின்ற நகர மாந்தர்

நீரிழிவு நோயினிலே வீழ்வா ரன்றி

நிலையான சீருடல் தான் அவர்க்கிங் கேது?

காரிருள் தான் நீங்குகிற விடியல் நேரம்

காலாறச் சிலகாதம் நடப்பதோடு

சீரியநல் தானியங்கள் காய் பருப்பு

சித்தருரை செய்திட்ட யோகாவோடு

நீரினையும் அளவாக அருந்தி நித்தம்

நித்திரையை சீராகக் கொண்டு வாழ்ந்தால்

நீரிழிவு நோயெல்லாம் காணா தாகும்;

நிம்மதியுன் வாழிவினிலே வந்து சேரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *