மாறுமிந்த மானிடமே!

மாறுமிந்த மானிடமே!

  • By Magazine
  • |

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…

சேற்றுக்குள் கால் பதித்து

சோற்றுக்கு வழிவகுத்த

வீட்டுக்குள் தென்றல்

வீசும் என்று காத்திருந்தால்

சூறாவளி மழையாய்

சுட்டதடா… வட்டிக்கடன்

வங்கியின் வேட்டைக்குள்

வெட்கித் தலைகுனிந்து

வேதனையில் தொங்கிய

தலை இன்னும்

நிமிரவில்லை…

தோள்தட்டிக்

கொடுக்கின்றார்

கோடிகளை

கொள்ளை செய்தார்

தமை கையசைத்து

வெளிநாடு போவதற்கு

வழிசெய்து விடுகின்றார்

இந்நாட்டுக்குழைத்தார்க்குப்

போட்டு வைத்த

விதிபோலே…

தனித்தனியாய்

சட்டங்கள்…

அணியணியாய் அவலங்கள்…

பல்லாண்டு சென்றாலும்

பலன் கிடைக்குமென்றெண்ணி

காத்திருந்த மக்களுக்கு

அரசாலே வந்ததெல்லாம்

இடிபோன்ற சட்டங்கள்…

நெஞ்சங்கள் உடைபட்டு

நெருக்கடிக்குள் பிடிபட்டு

தஞ்சமடைய வழியின்றி

தடுமாறும் மக்களுக்கு

தடம் ஒன்றும் பிறக்கவில்லை

தனியாக பெற்ற கடன்

தனிக்கோடி ஆனாலும்

தணிக்கைகளால்

கைகாட்டி விடுகின்றார்

இதென்ன நீதி என்று

யார் நின்று கேட்டாலும்

வழி ஒன்றும் பிறக்கவில்லை

வடிகாலும் திறக்கவில்லை

குடிமக்கள் வாழ்க்கையிங்கு

கொடிமேலே நடப்பதுபோல்

தள்ளாட்டம்… தள்ளாட்டம்…

அரசுக்கும் புரியவில்லை

அமைச்சருக்கும் புரியவில்லை

வரிமேலே வரிபோட்டு

வாடியிங்கு போவதற்கு

வழிதனையுமாக்கி விட்டார்

அடிவாரம் இல்லாமல்

அமைகின்ற கட்டிடம்போல்

விவசாயி இல்லாமல்

நாடிங்கு செழித்திடுமோ?

நன்னெறியை அறியாமல்

தன்னறிவு இல்லாதார்

ஏங்கியோர் நெஞ்சினுக்கு

அரசியல் சூழ்ச்சிகளால்

அதிகாரம் செய்கின்றார்

ஊருக்காய் உழைத்துழைத்து

உருக்குலைந்து போன

நம் வாழ்வு

உருமாறும் என்றெண்ணி

உள்ளுடைந்து போகாமல்

குமுறும் எரிமலை போல்

கொதித்தங்கு எழுந்துவிட்டால்

மாறுமிந்த சமுதாயம்

மானிடரே அறிந்திடுவீர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *