வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T இராஜேந்திரன்
சென்ற மாத இதழின் தொடர்ச்சி…
8. மனித இனத்தோற்ற வரலாறு
8.1 மனித இனத்தோற்ற கோட்பாடுகள்
மனித இனத்தோற்றம் பற்றி உலகியல் ஆய்வாளர்களில் பெரும்பாலோர் ஒத்த கருத்துடன் ஆப்பிரிக்காவில் தான் மனிதஇனம் தோன்றியதாக குறிப்பிடுகின்றனர். இன்னும் பலர் மனிதஇனம் லெமூரியா கண்டம் அல்லது குமரிக்கண்டத்தில் தோன்றியதாகவும், சிலர் ஐரோப்பிய நாட்டில் அட்லாண்டிஸ் எனும் பகுதியில் தோன்றியதாகவும் குறிப்பிடுகின்றனர். இக்கருத்துக்கள் அனைத்தும் வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரும் இன்னும் முடிவான ஒரு தீர்வை எட்டவில்லை என்பதே அறிவியல் கண்கூடாகும்.

8.1.1 அட்லாண்டிஸ் கருத்தாக்கம்
அட்லாண்டிஸ் எனும் இடத்தில் தான் மனிதஇனம் தோன்றியது என்ற கருத்தாக்கமானது, ஏதென்ஸ் நாட்டின் புகழ்மிக்க தத்துவ பேரறிஞர் சாக்ரட்டீஸின் (கி.மு. 470 – கி.மு. 399) சீடரான பிளாட்டோ (கி.மு. 427 – கி.மு. 347) தன்னுடைய சீடர்களான டிமியஸ், கிரிடியஸ் ஆகியோருடன் கலந்து உரையாடிய கதையிலிருந்து உருவானதாகும். அட்லாண்டிக் கடலுக்குள்ளே இருந்த அட்லாண்டிஸ் எனும் தீவினை 11,000 ஆண்டுகளுக்கு முன் பொஸ்டைன் எனும் தேவகுலத்தை சார்ந்த கடலரசன் ஆட்சிசெய்து வந்தான். அவன் கிளிடோ எனும் மனிதகுல பெண்ணிடம் காதல் கொண்டு அவளை அத்தீவின் நடுவிலிருந்த மலையில் குடி வைத்துள்ளான். அவளுக்கு ஐந்து இரட்டைக்குழந்தைகளாக பத்து குழந்தைகள் பிறந்துள்ளனர். அந்த பத்துபேரும் கடலுக்குள் இருந்த அந்த மலைநாட்டை சிறப்புடன் ஆண்டுவந்தனர். அங்குள்ள மக்கள் நீதி நேர்மையோடும், மிகுந்த அன்புநெறியோடும் வாழ்ந்து வந்துள்ளனர். நாளாவட்டத்தில் மக்கள் நெறி பிறழ்ந்து வாழ்ந்ததால் சியூஸ் என்னும் கடவுள் அவர்களை தண்டிக்கும் நோக்கில் பிற கடவுளரை கலந்து ஆலோசித்து பெரும் பிரளயத்தை உண்டுபண்ணி, அம்மக்களை அழித்துள்ளார். இப்பொழுது அங்குள்ள மனித வாழ்க்கையும் அழிந்து அந்த இடமும் அழிந்துவிட்டது இதுவே அவர் சொன்ன கதையாகும். இது அவரது காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்கு முன் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த சோலோன் (Solon) எனும் பெரும் செல்வந்தன் ஒருவன் செவிவழியாக அறிந்து உரைத்த கதையாகும். இதனை எவ்வித ஆய்வுமின்றி பிளாட்டோ முற்றிலுமாக ஏற்றுக்கொண்டதே அட்லாண்டிஸ் கருத்தாக்கத்தின் திறவுகோலாகும்.

ஏனெனில், பிளாட்டோவிற்கு என்று ஒரு தனி மதிப்பும், மரியாதையும் அக்கால சமுதாயத்தில் இருந்ததே இதற்கு காரணமாகும். இதனை விமர்சனம் செய்த ஸ்பராஜ் டி கேம்ப் (Sprage de camp) மறைந்த கண்டங்கள் பற்றி மறுப்பு கூறும் தன் நூலில் (Lost continents) இவருடைய கருத்துக்களை கூறும்போது பிளாட்டோ ஒரு தத்துவஞானி என்றும், வரலாறு மற்றும் புவியியல் சார்ந்த பலம் இல்லாதவர் என்றும் குறிப்பிடுகின்றார். ஏனெனில், வரலாற்றை முழுமையாக அறிந்திருந்தால் அதில் குறிப்பிடப்படும் கடவுளர் பலர் வந்திருக்கமாட்டார் என வாதிடுகின்றார். அதேநேரத்தில் பிளாட்டோவின் கருத்தை ஆதரித்து இக்னேஷியஸ் டோணலி (Ignatius Donnelly) எனும் அமெரிக்க எழுத்தாளர் அட்லாண்டிஸ் பிரளயத்திற்கு முற்பட்டது (Atlantis Antidiluvian world) என்ற ஒரு நூலையே எழுதி அதில் பிளாட்டோ அறிவித்த இடத்தில் அட்லாண்டிஸ் கண்டம் இருந்திருக்கவேண்டும் என்றும், அக்கண்டம் கி.மு. 8000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் அழிந்திருக்கும் என்றும் குறிப்பிட்டதோடு அங்குள்ள மக்கள் வாழ்க்கை பற்றியும், நகர அமைப்பு பற்றியும் படங்களையும் வரைந்து கற்பனை உலகு ஒன்றை ஐரோப்பியர் மத்தியிலே உலவவிட்டார். இவர் சொன்னதை ஆதாரமாகக்கொண்டு பலர் தொடர்ந்து அட்லாண்டிஸ் பற்றிய நூல்களை எழுதிக்கொண்டே வருகின்றனர்.

இக்கதையின் கருத்தாக்கமானது நாளடைவில், ஐரோப்பிய மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இது மனித இனத்தோற்றம் அட்லாண்டிஸ் தீவில் தான் நடந்தது என அவர்கள் நம்பும் அளவிற்கு உருவாகிவிட்டது. இந்த கதை ஐரோப்பிய நாட்டு எழுத்தாளர்களால் கூட அதிகமாக நம்பப்பட்டு பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்று 2000-க்கும் மேற்பட்ட நூல்கள் அட்லாண்டிஸ் பற்றி ஐரோப்பிய நாடுகளில் வலம்வருகின்றன.
அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் காணப்படும் மலைத்தொடரானது உலகிலேயே மிகப்பெரிய மலைத் தொடர்களில் ஒன்றாகும். இதில் உயரமான மலைமுகடுகளும், பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. இதன் ஆழ்ந்த அகன்ற பகுதிகள் சுமார் 30 முதல் 50கி.மீ வரை இருப்பதாக கண்டறிந்துள்ளனர். எரிமலை வெடிப்புகளும், நில அதிர்வுகளும் உருவாகி தோன்றிய பல தீவு கூட்டங்களான இவைகள் பூமியின் முதுகெலும்புபோல் கடல் தளத்திலிருந்து புடைத்து மேலெழும்பி தோற்றமளிக்கின்றன. இம்மலைத்தொடரின் உச்சிப்பகுதிகள் பல தீவு கூட்டங்களாக உள்ளன. இதனையே அட்லாண்டிஸ் மரபு காட்டும் நிலப்பரப்பாக அக் கருத்தாக்கமுடையவர்கள் கருதுகின்றனர்.

இவை அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள அட்லாண்டிக் கடலடி மலைத்தொடரில் அமைந்துள்ள அசோரியஸ் தீவு கூட்டங்களாகும். நியூயார்க்கிலிருந்து 21,000கி.மீ கிழக்கிலும், லிஸ்பனிலிருந்து 900கி.மீ மேற்கிலும் அமைந்துள்ள இவை கடலின் அடிமட்டத்திலிருந்து 3050மீ உயரத்தில் 9 பெரும் தீவுகளாக காணப்படுகின்றன. இதில் மிக உயரமானது சான் மிகுயேல் (San Miguel) எனும் தீவு ஆகும். இந்த தீவில் வாழும் மக்கள் தங்களின் பரம்பரையினர் வாழ்ந்த இடமாக இப்பகுதியினை குறிப்பிடுகின்றனர். மட்டுமன்றி, அப்பகுதியின் நாகரீகம், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்கள் வாழ்ந்த ஊர்கள், மன்னர்கள் போன்றவை பற்றிய மரபுச்செய்திகளை இன்றும் கூறி வருகின்றனர். 400 சதுரகி.மீட்டர் பரப்பு கொண்ட இத்தீவினையே கடல்கொண்ட அட்லாண்டிஸ் கண்டத்தின் எச்சமாக பெரும்பாலோர் கருதி வருகின்றனர். இவர்கள் கண்டம் என குறிப்பிடுவது இந்தப் பகுதியை ஆகும். இது அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சிறிய பகுதியாகவே உள்ளது. எனவே இஃது ஒரு தவறான கருதுகோள் எனவும் கருதப்பட வேண்டியுள்ளது. இங்கு நடத்தப்பட்ட கடலடி ஆய்வுகளின்படி, ஒரு கண்டம் மூழ்கியதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என்றே தெளிவாகி உள்ளது.

அட்லாண்டிக் கடலடி மலைத்தொடர் பகுதியில் 5,500மீ ஆழம் வரை ஆழ்கடல் புகைப்படம் எடுத்து ஆராய்ச்சி நடத்திய மௌரிஸ் ஈவிங் (Maurice Eweing) என்ற ஆழ்கடல் ஆய்வறிஞர் அப்படிப்பட்ட நகரங்கள் அங்கு இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதனை “ஒரு புனைக்கதை கண்டமாகிறது (Myth called lost Continent)” என்று தன் ஆய்வுக்கட்டுரை மூலம் 1949-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சயின்ஸ் டைஜஸ்ட் (Science Digest) என்ற பத்திரிகையில் தெளிவுபடுத்தியுள்ளார். இதுபோலவே ரஷ்ய விஞ்ஞானிகள் சிலரும் அட்லாண்டிஸ் கண்ட தேடலில் அதிகமான அக்கரை காட்டினர். 1978-ம் ஆண்டு ரஷ்ய ஆய்வாளர் ஒருவர் தான் அட்லாண்டிஸ்-ன் பல பகுதிகளை கண்டுபிடித்ததாக பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார். ஓலெக் ஸல்கின் (Oleg Sulkin) என்ற ரஷ்ய ஆய்வாளர் மோஸ்கோவ்ஸ்கி யூனிவர்ஸிடி (Moskovsky university) எனும் ஆய்வுக்கப்பல் மூலம் ஆம்பியர் சீ மவுண்ட் (Ampere Sea Mount) பகுதியில் எடுத்த ஆழ்கடல் புகைப்படங்களில் தெரிந்த பிம்பங்கள் இராட்சதப் படிக்கட்டுகளின் பிம்பங்களாக இருக்கலாம் என 1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட “சோவியத் லைப்” எனும் இதழில் குறிப்பிட்டுள்ளார்.

எரிமலைப் பாறைகளில் இவ்விதமான படிக்கட்டுகள் போன்ற அமைப்பு இயற்கையாகவே உருவாவது உண்டு. தக்காணப் பீடபூமியில் உள்ள பாஸால்ட் (Basalt) எனும் எரிமலைப் பாறைகளை டெக்கான் ட்ரேப்ஸ் (Deccan Traps) என்பர். ட்ரேப்ஸ் எனும் ஸ்காண்டிநேவிய வார்த்தைக்கு “படிக்கட்டு” என்று பொருள். 1981-இல் ஷிர்சோவ் கடலியல் ஆய்வுக்கூடத்தில் (Shirsov Institute of Oceanography) பணிபுரிந்த ஆந்திரே அக்ஸியோநோவ் (Andre Aksyonov) என்ற விஞ்ஞானி, இப்பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள், இயற்கையில் ஏற்பட்ட அமைப்புகளைத்தான் காட்டுகின்றன என தெளிவாக எடுத்துரைத்த பின்னர் தான் இப்பகுதியில் அட்லாண்டிஸ் கண்டத்தை தேடும் படலம் முடிவுற்றது1.
1. குமரி நிலநீட்சி, சு.கி. ஜெயகரன், பக். 68-70
Leave a Reply