உதிரும் வண்ணங்கள் – கவிதைநூல் அறிமுகம்
– பொன்குமார்
“பார்வைக்கும் புரிதலுக்கும் இடையில் எப்போதும் ஒரு இருண்ட வெளி இருக்கிறது. அந்த வெளியில்தான் இக்கவிதைகள் தங்கள் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. விஜயபாரதி வாழ்வின் நுண்ணிய அதிர்வுகளையும் சமூகத்தின் ஆழ்மனக்காயங்களையும் ஒரே நேரத்தில் மொழியாக்குகிறார்.
அன்றாடத்தின் எளிய காட்சிகள் இங்கு புதிய அர்த்தங்களை உற்பத்தி செய்யும் பன்முகப்பிரதிகளாக மாறுகின்றன. சாதி சாம்பலாக உதிர்கிறது. வன்முறை நிழலாக நகர்கிறது. அன்பு ஒரு ஒளிக்கீற்றாய் இருளைத் துளைக்கிறது. சொல்லப்படாதவற்றின் சத்தத்தையும் மறைக்கப்பட்டவர்களின் வரலாறுகளையும் கண்ணீரின் உப்புச்சுவையையும் இக்கவிதைகள் தன்னகத்தே சுமக்கின்றது. இவை வெறும் கவிதைகள் அல்ல காலத்தின் விளிம்பில் எழுதப்பட்ட மனித இருப்பின் சாட்சியங்கள்.
உதிர்வதன் வழியே நிலைத்திருக்கும் வண்ணங்களைப் போல இந்தக் கவிதைகளும் வாசிப்பின் பின்னரும் நீண்டநேரம் மனதில் ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன” என்னும் கவிஞர் லார்க் பாஸ்கரன் அவர்களின் பதிப்புரையுடன் வந்திருக்கும் கவிதைத் தொகுப்பு தொடுவானத்தின் கீழ் உதிரும் வண்ணங்கள், கவிஞர் விஜய பாரதி. வெள்ளை காக்கா மல்லாக்கப் பறக்குது, நெடுபனையில் தொங்கும் கூடுகள், காலாதி காலத் தீட்டு, திருமாமழைப் போற்றுதும் என்னும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இது கவிஞரின் ஐந்தாம் தொகுப்பு.
தீரா ஆசையுடன்
தொட்டுத் தேம்பியழுது தூங்கிப்போன
நிகரனின் கனவில்
ஓடும் ரயிலுக்கு
நிறுத்தம் என்பதேயில்லை
என்று ஆசையாய் வாங்கிய ரயில் வண்டியுடன் தொடங்குகிறது தொகுப்பு. ரயிலுக்கு பேட்டரி தீர்ந்து நின்று போனாலும் நிகரனின் கனவில் ரயில் ஓடிக்கொண்டேயிருக்கும் என்கிறார். நிகரனின் கனவில் ரயில் ஓடுவதைப் போல கவிஞரிடமும் கவிதை குறித்த சிந்தனைக்கு நிறுத்தம் என்பதேயில்லை. இக்கவிதையில் ஒரு சிறுவனின் மனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நாங்கள் உறங்குவதாய்ப் படுத்திருக்கும் இரவுகளில்
நீளும் வறுமைப் பட்டியலை
அம்மாவின் காதுகளுக்குச் சொல்லும் அவர்
ஒரு நாளும் விட்டுச் சொன்னதில்லை எங்களுக்கு
என்று முடியும் கவிதையின் தலைப்பு பெருமை மின்னும் ராசா. அப்பாவைப் பெருமைப் படுத்தியுள்ளார். அப்பாவின் அன்பை, அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். அப்பாவின் தோற்றத்தை அழகாகக் காட்டியுள்ளார். வறுமையில் வாழ்ந்தாலும் வறுமை வாழவிடவில்லை என்றாலும் பிள்ளைகளிடம் வறுமையைக் காட்டிக் கொள்ளாதவர், வெளியில் சொல்லாதவர் அப்பா என்கிறார்.
எளியவன் நான்
முகவரி ஊர் எனினும்
சேரியில்தான் என் வீடு
சோத்துக்கே வக்கற்ற
அன்றாடத்திற்குப்
பட்டுமில்லை பகட்டுமில்லை
படுத்தால்
நன்றாய்த் தெரியும்
நட்சத்திரங்கள் பூத்த கூரை
என் வியர்வை வளர்த்த
கனவுகளில்தான்
பிள்ளைகள் காண்கின்றன
தம் கல்விக் கனவை
பற்றி எரியும்
பட்டினி இரவுகளில்
இரைப்பையின் தீயைத்
தண்ணீர் ஊற்றித்தான் தணித்துக் கொள்வோம்
அதில்தான் கரைத்து வைத்திருக்கிறாய்
உன் சாதியப் பீயை
என்னும் கவிதையின் தலைப்பு இரைப்பையின் தீ. தாழ்த்தப்பட்டவர்களின் நிலையைக் கூறியதுடன் தாழ்த்தப்பட்டவர்களின் குரலாகவும் ஒலித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டி நீரில் மலம் கரைக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட கவிதையாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே உள்ளது பித்தனைப் போல கவிதை. அதில் மலம் கலந்த நீரைக் குடித்து பாதிப்புக்குள்ளான மகளைப் பார்த்து
கனக்கும் இதயத்தின் வலிபொறுத்த
வார்த்தைகளை உதிர்க்கிறேன்
மகளே எழு
சாதிய நோய்க்கு மருந்தாகு
என்று வேண்டியுள்ளார். மகளை சாதிய நோய்க்கு மருந்தாக மாற அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் தலைமுறையாவது சாதியம் இல்லாமல் சாதிய மோதல் இல்லாமல் வாழவேண்டும் என்று விரும்பியுள்ளார். ஒரு மாயக்கோட்டை உருவாக்கி பாதுகாப்பு என்று சொல்கிறார்கள் என மகளிடம் தெரிவித்து
வட்டத்தை உடை
புறப்படு
என கற்பிதங்கள் கவிதையில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்
மீறச் சொல்கிறார்.
வெள்ளாமையை வீடு சேர்த்த களைப்பின் தாகத்திற்கு
நீங்கள் பருகத் தந்ததென்னவோ ஒரு குவளை பீத்தண்ணீர்
என்று முடியும் கவிதையின் தலைப்பு இரவின் கிளையில். வயலை உழுது பயிரை விதைத்து இரவில் காத்து வெயிலில் அறுவடை செய்து வெள்ளாமையை வீடு சேர்த்தவருக்கு பருக ஒரு குவளை தேத்தண்ணீர் தராமல் ஒரு குவளை பீத்தண்ணீர் தந்தவர்களைச் சாடியுள்ளார். ஆண்டைகளின் புத்தியை விமர்சித்துள்ளார். திரைச்சீலை கவிதையிலும் நீரில் மலம் கலந்தது பற்றியே பேசினாலும் அதிகாரத்தின் பிம்பங்கள் அடையாளம் காணப்பட்டன என்கிறார்.
தத்தி நடை பழகும்
சிறுமியின் நிர்வாணத்தை நீர் வடியத் தொங்கும்
நாவில் வெறித்துக் கொண்டிருந்தது சாதி மதமெனும்
இரண்டு கால் கொண்ட மிருகம்
எதிலும் ஒட்டிக்கொள்ளும் தீட்டு
இதில் மட்டும் பார்ப்பதில்லை
என இறகு உதிர்ந்த ஈசல் கவிதையில் சாடியுள்ளார். ஆதிக்க நாய்கள் காம வெறியில் சிறுமியென்றும் பார்ப்பதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். கடுமையாக சாடியுள்ளார். எனினும் கொல்லப்பட்ட சிறுமியின் உடலிலிருந்து எழும் மரணவாடையில் சாதீய உடல்கள் கருகும் என்று சாபமிட்டுள்ளார். இதுவும் கோபத்தின் வெளிப்பாடே. இன்னாருடைய இன்னார் கவிதையிலும் மனிதர்கள் செத்தும் சாதியை விடவில்லை என்கிறார். சுடுகாடு வரையிலும் சாதி நீள்கிறது என்பது கவிஞரின் குற்றச்சாட்டு.
வியூகம் வகுக்கிறார்கள் விருந்துண்டு
வெறும் வயிற்றில் விக்கிக்கொண்டிருக்கிறது சமூக நீதி
என்று விருந்துண்டு வியூகம் வகுப்பவர்களுக்கு சமூகநீதி சம்பந்தமில்லை என்கிறார். பசிப்பவர்களுக்கே சமூக நீதி தேவைப்படுகிறது என்கிறார்.
தேவாலயத்தில் ஒரு சிறுமி கூட்டாக கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வை உண்டாக்கியது. அது குறித்து எழுதப்பட்ட கவிதை தேவாலய மணி.
விடியாத வாழ்வின் கருமையைச் சூடி
புழுக்கத்தோடு நீள்கிற இவ்விரவில்
சாதிப்பித்தம் தலைக்கேறியவர்களின்
கண்களைக் காமம் திரையிட
கூட்டாகச் சிதிலமாக்கும்போது
இவர்களின் குறிகள் அழுக்காவதுமில்லை
தீட்டாவதுமில்லை
என கற்பழித்து கொன்றவர்களை குற்றம்சாட்டியுள்ளார். தீண்டும் போது தீட்டுப் பார்க்காதவர்கள் என்கிறார்.
கைகளை அகல விரித்து நிற்கிறேன்
வந்து வந்து மோதி மோதி
அமிழ்ந்து விடுகின்றன
அலைகள்
என்பது அனுபவ கவிதையாக உள்ளது. கரைக்கு வரும் அலைகள் கால்களில் மோதி கரைந்துவிடும். காணாமல் போய்விடும். கவிஞர் அமிழ்ந்து விடுகின்றன என்கிறார்.
பக்கத்து வீட்டில்
செத்தவர்கள் நடமாடுகிறார்கள்
நகரத்துக் குடியிருப்பு
என நகரத்து மனிதர்களின் வாழ்நிலையைக் குறித்து பேசியுள்ளார். நகரத்துக் குடியிருப்புகளில் பக்கத்து வீட்டுக்காரர் யார் என தெரியாது, எதிர் வீட்டுக்காரர் யார் என தெரியாது. உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாது. நகரத்துக் குடியிருப்பில் வசிப்போரிடையே ஓர் ஒட்டும் இருக்காது, உறவும் இருக்காது. இதயங்களை கழட்டி வைத்துவிட்டு இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்பவர்கள் நகரத்துவாசிகள்.
எரிந்து அடங்கியது குடிசை
மிச்சமிருக்கிறது
சாதிச்சாம்பல்
என்னும் கவிதை வெண்மணி சம்பவத்தை நினைவுப்படுத்தினாலும் கவிஞரின் கோபம் இன்னும் அணையாமல் இருப்பதைக் காட்டுகிறது. சாதி மக்களை சாம்பலாக்கும் என்கிறார்.
குழந்தைகள் தாயாகி, தந்தையாகி, அக்காவாகி, அண்ணனாகி, ஆயாவாகி, தாத்தாவாகி என எல்லோருமாகி பொம்மைகளை கொஞ்சுகின்றன. குலாவுகின்றன. பொம்மைகளை கொஞ்சும் குழந்தைகள் அன்புக்கு ஏங்குவதை எவரும் புரிந்து கொள்வதில்லை.
யாருக்கும் நேரம்தான் இல்லை
இக்குழந்தைகளைக் கொஞ்சவும் பேசவும்
என்று பிங்க் நிற டோலி கவிதையில் கவிஞர் குழந்தைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். குழந்தைகளைக் கொஞ்சவும் குழந்தைகளிடம் விளையாடவும் குடும்பத்தார் நேரம் ஒதுக்க வேண்டும் என்கிறார்.
தனிமை தின்னும் குழந்தைகள்
எந்திரத்தைப் பார்த்து எந்திரத்தில் விளையாடி
எந்திர வாழ்வையே பழகியிருக்கிறார்கள்
விளையாட்டாய்த் தொடர்கிற இப்பயணத்தில்
ஆட்டிசத்தில் சிக்கி நினைவை இழந்து
ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் சுருக்கிட்டு
முடித்துக் கொள்கின்றனர்
என்று கார்ட்டூன் தேசத்துப் பொன்வண்டுகள் கவிதையிலும் குழந்தைகள் குறித்து கவலைப்பட்டுள்ளார். ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல; இது மூளையின் வளர்ச்சியில் ஏற்படும் ஒரு நரம்பியல் வளர்ச்சிக்குறைபாடு ஆகும். இது மருத்துவ ரீதியில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு என்று அழைக்கப்படுகிறது. இந்நோயிலும் குழந்தைகள் சிக்கியுள்ளனர் என்கிறார்.
ஃப்ரீ ஃபயர் என்பது மொபைல் போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரபலமான பேட்டில் ராயல் அதிரடி விளையாட்டு ஆகும். ஒரு போட்டியில் மொத்தம் 50 வீரர்கள் ஒரு தீவில் பாராசூட் மூலம் இறக்கி விடப்படுவார்கள். அங்குள்ள ஆயுதங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைத் தேடி எடுத்துக்கொண்டு, மற்ற வீரர்களை வீழ்த்தி இறுதிவரை உயிர்வாழ வேண்டும். 50 பேரில் இறுதிவரை உயிரோடு இருக்கும் ஒரு நபர் அல்லது ஒரு குழு வெற்றியாளராக அறிவிக்கப்படும். இந்த வெற்றி பூயா என்று அழைக்கப்படுகிறது. இவ்விளையாட்டிலும் குழந்தைகள் சிக்கியுள்ளார்கள் என்கிறார்.
லாவகமாய் எடுத்து வீசுகிறது கடல்
விழுந்து துள்ளும் மீனின் கண்களில்
யாசகத்தின் வலி
என ஒரு மீனின் பசிக்கு வழி கோரியுள்ளார். கடலில் இருந்து கரைக்கு வீசப்பட்ட மீனின் நிலையைத் தெரிவித்துள்ளார். கடல் வீசியெறிந்தது என்கிறார். மீன் தானே துள்ளி வெளியேறும் எனினும் மீனுக்கே பாதிப்பு.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் மக்களவை மற்றும் அனைத்து மாநிலச் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்தல்களை நடத்தும் ஒரு திட்டமாகும். மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால டிசம்பர் 17 2024 அன்று மக்களவையில் அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேர்தல் செலவுகளைக் குறைப்பது, அடிக்கடி தேர்தல் நடப்பதால் ஏற்படும் நிர்வாகத்தாமதங்கள் மற்றும் கல்வி, பொருளாதாரத்தின் மீது ஏற்படும் தாக்கங்களைத் தவிர்ப்பது. முழுமையான அமலாக்கம் 2034க்குள் படிப்படியாக கொண்டு வரப்படலாம் என எதிர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 2029-இல் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஊரில் தலித்துகளுக்கு என்று ஒரு சுடுகாடும் தலித்தல்லாதவர்களுக்கு என்று ஒரு சுடுகாடும் இருக்கின்றன. இவையிரண்டையும் வைத்து கவிஞர்
ஒரே நாடு
ஒரே தேர்தல்
ரெண்டு சுடுகாடு
என்று எழுதியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இரண்டு சுடுகாடுகள் எதற்கு? ஊருக்கு ஒரு சுடுகாடு இருக்க செய்யலாமே?
இழப்பதற்கு இனி
எதுவுமில்லை என்றான பிறகு
எதன் நிமித்தம் வாழ்தல்
எனும் கேள்விதான்
கயிறாய் நீண்டு
கழுத்தை இறுக்குகிறது
வலி வலி வலிகள் மட்டும்
கூடிக்கொண்டே இருக்க
விழிகள் வெறித்திருக்கிறது
முளைவிட்ட தளிர்களின்
பச்சையம் மட்டும்
மனச்சுவர்களில் அப்பியிருக்கிறது
என்னும் கவிதையின் தலைப்பு இழப்பதற்கு. இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்னும் ஏற்பட்டாலும் நம்பிக்கை மட்டும் மனத்தில் முளைவிட்டுள்ளது என்கிறார். வாழ்வதற்கும் ஒரு காரணம் உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
உன்னை விட
யாரும் எதுவும் எப்பவும்
உயர்ந்தவை என
மலைத்து நிற்காதே
அவைகளின் மீது
ஏறி நின்று பார்
எல்லாமே உனக்குக் கீழ்தான்
என்னும் நிதர்சனம் தொகுப்பின் நோக்காக உள்ளது. கவிஞரின் இலக்காக உள்ளது. தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்துள்ளார்.
நவீன வேளாண்மை என்பது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலையும் லாபத்தையும் பெறக்கூடிய ஒரு வேளாண் முறையாகும். நவீன வேளாண்மையால் நச்சு கலந்த உணவே கிடைக்கிறது. நல்ல உணவு கிடைப்பதில்லை. அறுவடை முடிந்த வயல் கவிதையில்
பாஸ்ட் புட் விலக்கி
பழங்களின் தோலுரித்துச் சுவைக்கும்
நானொரு பழைமைவாதி
நஞ்சில்லா பயிர்களைத்தான்
காணவில்லை
என்று வருந்தியுள்ளார். பழைமைவாதியாக இருந்தாலும் பழையதை விரும்பினாலும் நவீன வேளாண்மையால் நல்ல உணவு கிடைப்பதில்லை என்று கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானில் ஏற்பட்ட உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் பிராந்திய இராணுவ மோதல்கள் காரணமாக பள்ளிக்குழந்தைகள் பலர் கொல்லப்பட்டனர். ஈரானில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டதால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. உலகில் வாழும் பொதுமக்களுக்கு எரிவாயு குறித்தே கவலை. கவிஞருக்கோ கொல்லப்பட்ட குழந்தைகள் குறித்த கவலை.
யாருக்கும் தெரியவேயில்லை
ஈரான் தேசமே பற்றி எரிவதும்
பள்ளிக் குழந்தைகள்
வெள்ளைத் துணியில் கட்டப்பட்டு
அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும்
என்று சூயிங்கம் சுவைப்பவர்கள் கவிதையில் பொதுமக்கள் மீது புகார் கூறியுள்ளார். சுயநலவாதிகளாக வாழும் மனிதர்களை சூயிங்கம் சுவைப்பவர்கள் என்கிறார்.
தொடுவானத்தின் கீழ் உதிரும் வண்ணங்கள் என்னும் தொகுப்பிலுள்ள கவிதைகள் கவிஞர் விஜயபாரதியின் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து வெளிப்பட்டவையாக உள்ளன. சமூகத்தின் மீது பெரும் அக்கறையுள்ளவராக கவிஞர் விளங்குகிறார். மக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்து பெரும்பாலான கவிதைகளில் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளார். அவர்களுக்காக நியாயம் கோரியுள்ளார். பெண்கள் குறிப்பாக சிறுமிகள் வன்கொடுமைக்குள்ளாவதைக் கவிதைகள் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். தொட்டால் தீட்டு… பார்ப்பவர்கள் தொட்டு வன்புணர்வில் ஈடுபவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அன்னை நாட்டில் நடப்பவையும் தாண்டி அன்னியநாட்டில் நடப்பவை குறித்தும் பேசியுள்ளார். ஆக மனிதகுலம் எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும் கவிஞரிடமிருந்து வெளிப்படும் கோபங்கள், கண்டனங்கள் கவிதைகளாக உருப்பெற்று ஏவுகணைகளாக பாய்கின்றன. கவிதைகளில் கவிஞர் விஜயபாரதியின் அடையாளம் காணப்படுகின்றன. நல்லதொரு கவிதைத்தொகுப்பின் மூலம் கவிஞர் கவனத்தை ஈர்த்துள்ளார்.
“விஜயபாரதியின் தொடுவானத்தின் கீழ் உதிரும் வண்ணங்கள் எனும் இத்தொகுப்பு கொஞ்சம் வலி, கொஞ்சம் பாசம், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் அழகியல் எனக் கொத்துக் கிண்ணத்தில் பகிரப்படும் சுவை வேறுவேறான சூட்சுமக்கவிதைகள். வாசகருக்குக் காத்திருக்கிறது வகை வகையான தரிசனங்கள்” என்று அணிந்துரையில் அழைப்பு விடுத்துள்ளார் எழுத்தாளர் அன்பாதவன். வாசித்து தரிசிக்க வேண்டும்.
வெளியீடு வேரல் புகஸ் சென்னை
9578764322 கவிஞர் விஜயபாரதி 9788634522
Leave a Reply