டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S)
நம் உடலில் நோய் தொற்று ஏற்படாவண்ணம் பாதுகாக்க பல அம்சங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் பெண்களின் பிறப்புறுப்பு பாதைவழியாக நோய் தொற்று உட்செல்லாமல் பாதுகாக்கும் அம்சமாக அதன் pH மதிப்பு 3.8 முதல் 4.5 ஆக அமைந்துள்ளது. இது அமிலத்தன்மை பொருந்தியதாக இருப்பதால் எளிதில் நோய்தொற்று கிருமிகள் உட்செல்ல முடிவதில்லை.
ஆனால் நமது பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள் மற்றும் பலவிதமான செயல்பாடுகள் மற்றும் பெண் பிறப்புறுப்பு சார்ந்த நோயின் காரணமாக யோனியின் வழி சில கசிவுகள் வருவதை வெண்தீட்டு என்கிறோம்.
மாதவிடாய்க்கு 2 அல்லது 3 நாட்கள் முன்னும் மாதவிடாய்க்கு 2 அல்லது 3 நாள்கள் பின்னும் மற்றும் கருமுட்டை வெளிவரும் 14-வது நாள்களிலும் சிறிது பிசுபிசுப்பான, நிறமற்ற, மணமற்ற கசிவு உண்டாவது இயல்பு. இது வெண்தீட்டு நோய் ஆகாது.
யோனி வாசல் வழியாக அனைத்து நாள்களிலும் கசிவு வருவது, உள் ஆடையை நனைக்கும் அளவிற்கு இருப்பது, பல நிறங்களில் (வெள்ளை, மஞ்சள், பச்சை, பழுப்பு, சிவப்பு) கசிவுகள் வருவது, துர்நாற்றமுடன் வருவது, நுரையுடன் வருவது, கசிவுடன் அரிப்பு உண்டாவது போன்றவற்றை வெண்தீட்டு என்று அழைக்கப்படுகிறது.
வெண்தீட்டிற்கான குறிகுணங்கள்
- வெண்தீட்டு தயிர்போன்று இருப்பதுடன் ஊரல் இருப்பின் – பூஞ்சை தொற்றாக இருக்கலாம்.
- வெண்தீட்டு மஞ்சள் மற்றும் பச்சை நிறத்துடனும், உறுத்தலுடனும், நாற்றத்துடனும் இருப்பின் அது பாக்டீரியா நுண்கிருமி தொற்றாக இருக்கலாம்.
- வெண்தீட்டுடன் இரத்தம் கலந்து வருவது மற்றும் இடுப்புவலி, அடிவயிற்று வலி இருப்பின் அது கருப்பை வாய் (Cervix) பகுதியிலுள்ள புண்ணாக இருக்கலாம்.
- வெண்ணிறத்தில் அதிக அளவில் தினம் கசிவது, உடல்மெலிவு, முதுகுவலி போன்றவை. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் வெண்தீட்டாக இருக்கலாம்.
வெண்தீட்டு வருவதற்கான காரணங்கள்
- உடல் அதிக உஷ்ணமாக இருப்பது
- பெண் பிறப்பு உறுப்பு பகுதி ஈரமுடன் இருப்பது
- பெண் பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தமாக வைக்காமல் இருப்பது
- கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது
- கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது
- மதுமேக நோயாளர்கள், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தாமல் இருப்பது.
- இரத்தசோகை மற்றும் உடல் பலகீனம்
- சோப்பு மற்றும் கடைகளில் கிடைக்கும் வாசனை திரவியங்கள் போன்றவற்றால் அடிக்கடி பிறப்புறுப்பு உள்புறமாக கழுவுவது மற்றும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது போன்ற காரணங்கள் பூஞ்சை தொற்று அல்லது பாக்டீரியாவினால் தொற்று ஏற்பட்டு வெண்தீட்டு உண்டாகலாம்.
- கருப்பை நோய்களிலும் வெண்தீட்டு உருவாகலாம்.
வெண்தீட்டு வராமல் தடுக்கும் முறைகள்
- பூஞ்சை மற்றும் நுண் கிருமி தொற்றுகளுக்கு வியர்வை ஒரு காரணமாக இருப்பதால் பருத்தியிலான உள் ஆடைகள் மற்றும் காற்றோட்டத்திற்கு வசதியாக இறுக்கமில்லாத துணிகளும் அணிவது சிறந்தது.
- சிறுநீர் கழித்தபின், தண்ணீரால் மட்டும் கழுவி, ஈரமில்லாமல் துடைத்து விடுவது நல்லது.
- பெண் பிறப்புறுப்பு பாதை இயற்கையாகவே நோய்கிருமிகளை எதிர்க்கும் அமிலத்தன்மையுடன் இருப்பதை, சோப்பு மற்றும் சில வாசனை திரவியங்களால் அடிக்கடி கழுவி அதன் அமிலத்தன்மையை மாற்றும் போது எளிதில் கிருமி தொற்று ஏற்படும். ஆகவே இதனை தவிர்க்க வேண்டும்.
- ஆரோக்கியமான, சத்தான உணவுகள் உண்ண வேண்டும்.
- பழங்கள், காய்கறிகள் அதிகம் உண்ண வேண்டும்.
- காரமான உணவுகள், இனிப்பு பண்டங்கள், பொரித்த உணவு பொருள், அசைவ உணவுகள் தவிர்ப்பது சிறந்தது.
- குளிர்ச்சியான உணவு பதார்த்தங்கள் மற்றும் குளிர்ச்சியான பானங்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.
- தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.
- நீரிழிவு நோயை கட்டுபடுத்த வேண்டும்.
- மன அமைதியை உருவாக்கி நல்ல தூக்கத்தை உண்டாக்க, யோக பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது. இதன் மூலம் உடல் உஷ்ணத்தை குறைக்கலாம்.
வெண்தீட்டை குணமாக்கும் வீட்டு வைத்தியமுறைகள்
- கற்றாழை மடலின் பச்சை நிறதோலை நீக்கி உள் இருக்கும் சதைப்பகுதியை நன்கு தண்ணீரில் கசப்பு சுவை நீங்கும் வரை கழுவி சுமார் 50 கிராம் அளவிற்கு எடுத்து அரைத்து பானமாக ஆகாரத்திற்கு முன் தினம் காலையிலேயே பருகலாம்.
- உலர்ந்த கருப்பு திராட்சை 25 கிராம் இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் அரைத்து பானமாக குடிக்கலாம்.
- ஒரு கைபிடி அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து, காலையில் வடித்து குடிக்கலாம். இதுபோன்று மல்லி அல்லது வெந்தயத்தை ஊறவைத்து காலையில் அருந்தலாம்.
- நீர் மோர், இளநீர் சிறந்தது.
- பார்லியை வேகவைத்து, அத்தண்ணீரை பருகலாம்.
- வெண்பூசணிக்காய் சாறு (தடியங்காய்), நெல்லிக்காய் சாறு, சுரைக்காய் சிறந்தது.
- பனை நொங்கு சாப்பிடலாம்.
- வாழைப்பூவை சூப்பு செய்து அல்லது சமைத்து சாப்பிடலாம்.
- நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது.
வெண்தீட்டிற்கான சித்த வைத்திய முறைகள்
1.அசோகப்பட்டை சூரணம்
அசோகப்பட்டையை பொடித்து சலித்து கொள்ளவும். இச்சூரணத்தில் ஒரு கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை வீதம் குடிக்கலாம்.
2.மருதம்பட்டை சூரணம்
மருதம் பட்டையை பொடித்து மேற்படி கூறியவாறு பயன்படுத்தலாம்.
3.திரிபலா சூரணம்
கரு கரண்டி திரிபலா சூரணத்தை 200 மில்லி தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி லேசான சூட்டில் பிறப்புறுப்பை கழுவி வருவது வெண்தீட்டு மற்றும் அதனால் உண்டான ஊரலுக்கும் சிறந்தது.
4.படிகார நீர்
4 கிராம் படிகாரத்தை ஒரு லிட்டர் கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்நீரினாலும் பிறப்புறுப்பு பகுதியை கழுவலாம்.
மேலும் குங்கிலியப்பற்பம், சிலாசத்து பற்பம், கந்தக பற்பம், வெள்வங்க பற்பம், நாகபற்பம், ஏலாதி சூரணம், அமுக்கரா சூரணம், கந்தக ரசாயனம், பறங்கிபட்டை ரசாயனம், வெண்பூசணி லேகியம், தேற்றான் கொட்டை லேகியம், தண்ணீர் விட்டான் நெய் போன்ற பல மருந்துகள் வெண்தீட்டிற்காக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இவைகளை மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.
கவனிக்க வேண்டியவைகள்
- சூட்டு உடம்புகளுக்கு அதிக அளவில் வெண்தீட்டு ஏற்படுவதால், உடலை குளிர்விக்கும் உணவு பழக்கவழக்கத்தால் சிலநேரம் சளி பிரச்சனைகள் ஏற்படலாம்.
- வெண்தீட்டு வீட்டு வைத்தியத்தால் குணமாகாமல் இருப்பின் உடனே மருத்துவரை அணுகி உரிய மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.
Leave a Reply