நோட்டு

நோட்டு

  • By Magazine
  • |

– பாஸ்கர் கோபால்

உப்.. உவுப்.. ஊதிக்கொண்டே ஆவி பறக்கும் கொதிக்கும் சோற்றுப் பானையை வடித்தாள் பூமாலை. தூக்கச் சட்டியில் பழைய சோறையும், சின்ன கிண்ணத்தில் பழைய வெஞ்சன குழம்பையும் எடுத்து வைத்தாள்.  “அம்மா இன்னைக்காச்சும் நோட்டு வாங்கித்தாமா” என்று செல்லமாரி சொல்லுவதை  காதில் வாங்காதவளாய்  வேலைக்கு பரபரப்பாக கிளம்பி கொண்டே இருந்தாள் பூமாலை. “அம்மா… அம்மா”… என்ற குரல் மட்டும் நிற்காமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஒல்லியான மெலிந்த தேகத்தை கசங்கிய சீலையைக் கொண்டு மறைத்திருந்தாள். பவுடர் பொட்டு என முகத்தை அழகுப்படுத்தும் எவ்வித விஷயங்களும் அவள் முகத்தில் இல்லை. நெற்றியில் திருநீறு மட்டும் இருந்தது. வெயிலில் வேலை பார்ப்பதால் தலையில் நன்றாக எண்ணெய் தேய்த்து சடை பின்னி இருந்தாள். தலைக்கு பூ வைக்கவில்லை.

“மாரி உனக்காகத் தான் அம்மா சுடு சோறு வடிச்சிருக்கேன். அம்மாவுக்கு நேரம் ஆச்சு நீயே சமத்தா சாப்பிட்டு, மதியத்துக்கு சாப்பாடை கட்டிட்டுப் போடி என் செல்லமாரி என்று சொல்லி அவளின் கன்னத்தைப் பிடித்து முத்தம் கொடுத்தாள்.

“நான் சாப்பாடு கொண்டு போக மாட்டேன். நாளைக்கு நாளைக்குன்னு நீ சொன்னதை நம்பி நான் டீச்சர்கிட்ட எத்தனை தடவை தான் சொல்றது. இன்னைக்கு நோட் இல்லாட்டி டீச்சர் கண்டிப்பா அடிப்பாங்க” அழுது கொண்டே சொன்னாள்.

“மாரி கண்டிப்பா இன்னைக்கு சாயங்காலம் அம்மா நோட்டு வாங்கிட்டு வரேன். சரி அம்மாவுக்கு டாட்டா சொல்லுடி.. டாட்டா சொல்லுடி..” என்று மாரிய பார்த்துக்கொண்டே சென்றாள் பூமாலை. 

நான் சொல்ல மாட்டேன் போ என்பது போல் அம்மாவைப் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்தாள். டம்மென்ற சத்தம் கேட்டு வேகமாக திரும்பினாள் செல்லமாரி.. ஐயோ.. அம்மா என்று பதறி ஓடிப்போய் பார்த்தாள். பூமாலை நெற்றியைப் பிடித்துக் கொண்டு வாசலில் உட்கார்ந்தாள். என்னால தாமா நீ வாசல்ல குனிஞ்சு போறத மறந்து நெலையில இடிச்சுக்கிட்ட. நா நல்ல பெண்ணே கிடையாது. கெட்ட பொண்ணு கெட்ட பொண்ணு என்று அவளையே  திட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்த பூமாலை கலங்கிய கண்களுடன் சத்தமாக  சிரித்தாள். “அம்மாவுக்கு ஒன்னும் இல்லடி அழாத” என்று சொல்லிவிட்டு எழுந்தாள். நெற்றி புடைத்திருந்தது.

அம்மாவின் கையை பிடித்து உட்கார் என்பதாக சைகை மூலம் மிரட்டி விட்டு, சொம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். தண்ணீரை குடித்துவிட்டு டாடா காட்டியவாறு வேலைக்குச் சென்றாள் பூமாலை.

கொஞ்ச நேரத்திலேயே செல்ல மாரியும் பள்ளிக்குச் செல்ல தயாரானாள். வெள்ளை சட்டை, நீல நிற பாவாடை அணிந்து, முகம் கழுவி கண்ணாடி பார்த்து, தன் நாவல்பழ நிறமுகத்திற்கு அழகு சேர்க்க முகம் முழுவதும் பவுடர் அடித்தாள். அவளுக்குத் தெரியாது, அவள் முத்துப்பல் சிரிப்பு  தான் அவளுக்கு அழகென்று. டிபன் பாக்ஸில் சாப்பாட்டை கட்டி பைக்குள் வைத்து, தோழில் மாட்டிக்கொண்டாள். செம்பருத்தி பூ வைத்திருந்த அவளது அப்பா ராசு படத்தை பார்த்து “சாமிகிட்ட போன நீ சாமியா இருந்து என்னையும் அம்மாவையும் நல்லபடியா காப்பாத்துப்பா” என்று மனதுக்குள் முனங்கியபடி சாமிகும்பிட்டாள்.  அருகில் இருந்த திருநீறு எடுத்து நெற்றியில் இட்டாள். அப்பொழுது புகைப்படத்திற்கு பின்னால் இருந்த ஒரு நோட்டை கவனித்தாள். பச்சை நிறத்தில் பைண்டிங் செய்திருந்த அந்த சிறிய நோட்டு பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அந்த நோட்டை எடுத்து உள்ளே திருப்பிப் பார்த்தாள். நோட்டில் முதல் 10 பக்கங்களில் ஏதோ ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. மீதி பக்கங்கள் எல்லாம் காலியாக இருந்தது. அந்த நோட்டை மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றாள்.

அருகில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள் செல்லமாரி. வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் செல்லமாரி செல்லமான மாரிதான். எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாக இருப்பதில் அந்த பள்ளிக்கூடத்திலேயே அவளைவிட்டால் வேறு ஆளே கிடையாது.

சந்தை கடை போல சத்தம் போட்டுக் கொண்டிருந்த 24 மாணவர்களும் காந்திமதி டீச்சர் வந்த உடனேயே, நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை போல அமைதியாகி விட்டார்கள். அதற்கு காரணம் காந்திமதி டீச்சர் கணக்கு பரிட்சை வைப்பதாக சொல்லி இருந்ததுதான். போர்டில் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் கணக்கு பத்தை  எழுதினார், நேத்து வாங்கிட்டு வர சொன்ன கணக்கு நோட்டில பதிலை 10 நிமிசத்துல எழுதி முடிக்கச் சொன்னார். அனைவரும்  நோட்டில் கணக்குகளை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சில மாணவர்கள் கணித மேதை ராமானுஜன் மாதிரி யோசிப்பைதைப் போல பாவனை காட்டிக் கொண்டு இருந்தனர்.

செல்லமாரி ஐந்தே நிமிடத்தில் கணக்கை போட்டு முடித்துவிட்டு வேகமாக நோட்டை நீட்டினாள். பத்து நிமிடத்திற்கு பிறகு அனைவரது நோட்டையும்  வாங்கி கையோடு திருத்திகொடுத்தார். விமல் மட்டும் முட்டை மதிப்பெண் எடுத்திருந்தான். வழக்கம் போலவே செல்லமாரி மட்டுமே அனைத்து கணக்குகளையும் சரியாக போட்டு இருந்தாள். மாரிக்கு எல்லாம் கிளாப் பண்ணுங்க என்று சொன்னது தான் தாமதம், அனைவரும் கைத்தட்டினார்கள் விமலை தவிர. வெட்கத்தில் செல்ல மாரியின் முகம் சிவந்தது. அந்த நோட்டை எடுத்து பத்திரமாக பைக்குள் வைத்தாள். “வீட்டுக்கு போனவுட்டி மொதல்ல இத அம்மாகிட்ட காட்டணும்” மனதுக்குள் சொல்லி கொண்டு இருந்தாள்.

மதிய உணவு இடைவேளையில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். செல்லமாரி மட்டும் சற்று தாமதமாக சாப்பிட்டு முடித்துவிட்டு டிபன் பாக்ஸை பைப்படியில் கழுவிக்கொண்டு இருந்தாள்.

தனியாக இருந்த செல்லமாரியின் அருகே வந்தார் பழனி. “என்ன மாரி இன்னைக்கும் கிளாஸ்ல கைத்தட்ற சத்தம் கேட்டுச்சு உனக்கு தானா?”

“ஆமா சார்” டிபன் பாக்ஸை கழுவிக் கொண்டே சொன்னாள் மாரி.

“சரி என் கூட வாரியா நா உனக்கு ஒரு கிப்ட் தரேன்” என்று சொல்லி மாரியை சத்துணவு அறைக்கு அழைத்து சென்றார். பழனி அந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக அவரும் பாடம் எடுப்பார். அதனால் அவரையும் அனைவரும் சார் என்றே அழைப்பார்கள்.

“இதுக்குப் போய் இம்புட்டு வெலய சொல்றீங்க, அதெல்லாம் சரிப்பட்டு வராது. நா இம்புட்டுத் தான் தருவேன்” என்று வெள்ளிக்கிழமை சந்தையில் பேரம் பேசி பேசியே அனைத்து காய்கறிகளையும் வாங்கினாள் பூமாலை. அப்படியே மாரிக்கு பிடித்த  வாழைப்பழம், கால் கிலோ சீனி காராச்சேவு, நோட்டு அனைத்தையும் வாங்கி முடித்து வீட்டுக்கு வர ராத்திரி ஆகிவிட்டது.

“மாரி அம்மா வந்துட்டேன் கதவ தொற” கதவைத் தட்டினாள். வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. ஒருவேளை மாலா இன்னும் டியூசன் விடலையே என்னவோ? வாங்கிய காய்கறியை திண்ணையிலே வைத்துவிட்டு மாலா வீட்டை நோக்கி நடந்தாள். இரவு 8 மணி என்பதை சொல்லாமல் சொல்லியது  பஞ்சுமில்லில்  ஊதிய சங்கு.  மாலாவின் வீட்டை அடைந்த பூமாலை, மாலாவிடம் மாரிய வரச் சொல்லுமா என்றாள்.

“மாரி அப்போவே போய்ட்டாளோ” என்றாள் மாலா. “மாரி வீட்டில இல்லையே… நான் சந்தைக்கு போயிட்டு இப்ப தானே வரேன்”.

“நீங்க வீட்ல இருப்பீங்கன்னு தானே நான் அனுப்புனேன். இல்லாட்டி நான் அனுப்பிருக்கமாட்டேனே” சற்று பதற்றமாக சொன்னாள் மாலா. பூமாலைக்கு இதய துடிப்பு அதிகமானது, தலை சுற்றுவது போல உணர்ந்தாள். இப்ப நான் என்ன பண்ணுவேன் எங்க போய் தேடுவேன் என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“அக்கா மாரி வயிற்று வலின்னு சொன்னா. ஒருவேளை கொள்ள காட்டு பக்கம் போயிருப்பாளோ”  அதை கேட்ட மறுகணமே கொள்ள காட்டு பக்கம் ஓடினாள் பூமாலை. அந்த ஊரில் ஒரு சில வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி இருந்தது. பெரும்பாலானவர்கள் இயற்கை உபாதைக்கு கொள்ளைக்காடு பக்கம் தான் ஒதுங்குவார்கள். தன்னிடம் இருந்த  பட்டன் போனில் இருந்து வந்த சிறிய டார்ச் லைட் வெளிச்சத்தில், வழியில கல்லு கெடக்குதா, முள்ளு கெடக்குதான்னு பாக்காம வேகமா ஓடி கொள்ளக்காட்டை அடைந்தாள்.

“மாரி மாரி.. ஏய் செல்லமாரி… எங்கத்தா இருக்க. அம்மாகிட்ட வாடி ஆத்தா” என்று எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் அளவுக்கு சத்தமாக கூப்பிட்டாள். எந்த திசையிலாவது மாரியின் குரல் கேட்டு விடாதா என்று சுற்றி முற்றியும் பார்த்துக் கொண்டே கத்தினாள். எந்த திசையில் இருந்தும் மாரியின் பதில் வரவில்லை. இருட்டில் ஆந்தையின் சத்தம் மட்டுமே கேட்டது. வெகு நேரமாக பதில் எதுவும் வராமல் மயான அமைதி நிலவியதால் மேலும் பதற்றமடைந்தாள் பூமாலை. தூரத்தில் யாரோ முனங்கும் சத்தம் கேட்டதை உணர்ந்த பூமாலை, அந்த திசையை நோக்கி ஓடினாள். காட்டுமுனி கோயில் அருகில் இருந்த பருந்து மரத்தின் கீழ் மாரி அழுது கொண்டு இருந்தாள்.

மாரியை பார்த்ததும் “ஏன் அய்யா காட்டுமுனி, எம்புட்டு புள்ளைய பத்திரமா உன்னோட காலடியில்ல வச்சிருந்தியா” கையெடுத்து  கும்பிட்டாவாறே ஓடிப்போய் மாரியை கட்டி அணைத்தாள். “ஏன்டி மாரி இந்த ராத்திரி  கோயில்ல வந்து அழுதுட்டு இருக்க?  இருட்டுல பயந்துபோய் இங்கு வந்துட்டியா? வயித்து வலின்னு மாலா சொன்னாளே, வயித்துக்கு என்னடி பண்ணுது? வயித்து வலி தாங்காம தான் சாமிகிட்ட சொல்ல வந்துட்டியா? அம்மா உன்ன எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” மாரியை எதுவும் பேசவிடாமல் அடுக்கடுக்காய்  கேள்விகளை  கேட்டாள் பூமாலை.

மாரி எதுவும் சொல்லாமல் பூமாலையை பார்த்து அழுதுக்கொண்டே இருந்தாள். “சரி சரி அழாத அதான் அம்மா வந்துட்டேன்ல வா வீட்டுக்கு போவோம் எல்லாம் சரியாயிடும்” என்று சொல்லிக்கொண்டு காட்டுமுனி கோயிலின் மண்ணை எடுத்து மாரியின் நெற்றியில் பூசினாள்.

மாரியின் முகம் அழுது அழுது வீங்கி போய் இருந்தது. கண்ணீர் வருவது நின்று விட்டது. ஆனாலும் இன்னும் அழுது கொண்டுதான் இருந்தாள். அவள் பூமாலையை பார்த்த பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்தது. அதை கவனிக்காத பூமாலை மாரியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு, சந்தைக்கு போன கதை, பொருள்களை வாங்குன கதை எல்லாத்தையும் சொல்லிக் கொண்டு வீடு வரை தூக்கி வந்தாள். வீட்டுக்குள் சென்றவுடன் பாயை விரித்து செல்லமாரியை படுக்க வைத்து, சமய கட்டருகே இருந்த காட விளக்கை ஏற்றினாள். மின்சார இணைப்பு இல்லாத காரணத்தால், இரவெல்லாம் பூமாலையின் வீட்டிற்கு வெளிச்சம் தருவது அந்த பெரிய காட விளக்கு தான். விசிறியை எடுத்து விசிறி கொண்டு இருந்தாள்.. மாலா தொலைபேசியில் மாரி கிடைத்துவிட்டாளா என்று விசாரித்தாள். மாரி கிடைத்த விஷயத்தை தெரிந்தவுடன் மாலாவும் நிம்மதி அடைந்தாள்.  வாழைப் பழத்தை சாப்பிட கொடுத்தாள். மாரி சாப்பிட மறுத்தாள்.

பூமாலையை வெறிக்க, வெறிக்க பார்த்துக் கொண்டே இருந்தாள். மாரி சோர்ந்து போயி இருந்ததை பார்த்த பூமாலை, மாரி என்னத்தா பண்ணுது சொல்லுத்தா. வாய திறந்து சொன்னா தானே அம்மாவுக்கு தெரியும். சொல்லுத்தா என்று மாரியை பிடித்து உலுக்கி கேட்டாள். அப்பொழுது தான்  அவளின் தோள்பட்டை ஓரம் சட்டை கிழிந்து இருந்ததையும், சட்டை அழுக்குபட்டு, கசங்கியதையும் கவனித்தாள். ஒரு கணம் மாரியின் முகத்தை சற்று உற்று பார்த்துவிட்டு ஐயோ.. காட்டுமுனி, அப்படி மட்டும் எதுவும்  நடந்துருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டு கதறி அழுதாள். 

மாரியை தூக்கிக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றாள். அங்கு யாரிடம்  சொல்வது, எப்படி சொல்வது என்று தெரியாமல் மருவிக்கொண்டுருந்தாள். நல்ல வேளையாக  சுப்பையா டாக்டர் வந்தார். சுப்பையா டாக்டருக்கு பூமாலையை பற்றி நன்றாக தெரியும். அவரிடம் நடந்ததை சொல்லி அழுதாள். லேடி டாக்டர் ஒருவரை அழைத்து மாரியை பரிசோதிக்க செய்தார்.

மாரியை முழுவதுமாக பரிசோதித்து விட்டு “பயப்படற மாதிரி எதுவும் நடக்கல சார். பட் அவ மெண்டலி ஏதோ டிஸ்டர்ப் ஆகி இருக்கா. நான் எப்படி பேசி பாத்தும் அவ எதுவும் சொல்ற மாதிரி தெரியல சார்”.

“சரி  நான் பார்த்துக்கிறேன். ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லிவிட்டு பூ மாலையிடம் வந்து விஷயத்தை சொன்னார். பூமாலைக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம்  மாரி ஏன் இப்படி இருக்குறா என்று தெரியாமல் குழப்பமாகவே இருந்தது. “நான் மாரி கிட்ட பேசுறேன் அவளுக்கு குடிக்க பாலும் பிரட்டும் போய் வாங்கிட்டுவாமா” என்று சொல்லி பூமாலையை கடைக்கு அனுப்பினார்.

“பெட்டில் படுத்திருந்த மாரியிடம் கொஞ்ச, கொஞ்சமாக பேச ஆரம்பித்தார். மாரியும் மெல்ல பேசத் தொடங்கினாள். சுப்பையா டாக்டர் சிறந்த ஒரு மனநல நிபுணரும்கூட. மாரி நடந்த எல்லாவற்றையும் அழுது கொண்டே சொன்னாள். டாக்டரும் தொடர்ந்து பேசினார். சரி விடு மாரி அந்த மாதிரி ஆளுங்கள நாம திருத்த முடியாது. நாமதான் அந்த மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து எப்படியாவது சமாளிச்சு வாழ்க்கையில ஜெயிக்கணும். அதை நீ பஸ்ட் நல்லா கத்துக்கோமா”.

“அப்ப கூட அவங்கள கூப்பிட்டு எப்படி நடந்துக்கனும்னு நீங்க சொல்ல மாட்டீங்க. பாதிக்கப்பட்ட எங்களுக்கு தான் எப்படி நடந்துக்கணும்னு சொல்லி தருவீங்களா” என்று மாரி  கேட்க, டாக்டர் ஒரு கணம் திகைத்துப் போனார். இந்த சின்ன பிள்ளை கிட்டருந்து, எவ்வளவு பெரிய கேள்வி என்று ஆச்சரியப்பட்டார். நாளையிலிருந்து அதுக்காக நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தார். நிறைய நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மாரி கொஞ்சம், கொஞ்சமாக சகஜ நிலையை அடைந்தாள்.

கடைக்கு போன பூமாலை வந்ததும், தனியாக அழைத்து விஷயத்தை சொன்னார் டாக்டர். “இது மாதிரி நடந்தா என்ன பண்ணணும். எப்படி நடந்துக்கணும் ஏற்கனவே நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல. பாத்து பாத்திரமாய் நான் சொன்ன மாதிரி நடந்துக்கோமா. மாரி நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். காலையில வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் சரியா”. பூமாலை அழுதுக்கொண்டே டாக்டரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.

“மாரி நான் உனக்கு ப்ராமிஸ் பண்ண மாதிரி செஞ்சுருக்கனானு, நீ செக் பண்ண மாசம் ஒரு முறை கண்டிப்பா என்ன பாக்க வந்திரு. சரியா என்று சொல்லி இருவரையும் அனுப்பிவைத்தார்.

வழி நெடுக ஒரு விதக் குழப்பத்திலே சென்று கொண்டே இருந்த பூமாலை, “நீ ஏண்டா தங்கம் அந்த நோட்டை எடுத்துட்டு போன? அம்மா அந்த மாதிரி ஆள் இல்லடா என்று சொல்லி மண்டியிட்டு அழுதாள் பூமாலை. பூமாலையை கட்டிப்பிடித்து “எனக்குத் தெரியும் என் அம்மாவை பத்தி. டாக்டர் மாமா எல்லாத்தையும் சொல்லிட்டாங்கம்மா. அப்பாவுக்கு ஆபரேசன் பண்ணப்ப, தப்பான ஆளோட ரத்தத்த அப்பாவுக்கு ஏத்திட்டாங்க. அதுனால அப்பாவு அந்த வியாதி வந்து செத்துப்போயிட்டாரு. அப்பா மூலமா உனக்கு வந்துருக்கு. அதுக்கு தானே எனக்கு தெரியாம அந்த நோட்டு போட்டு மாத்திரை சாப்புடுற. இனிமே எனக்கு தெரிஞ்சே மாத்திரை சாப்பிடுமா. நீ மட்டும் எப்படியாவது ரொம்ப நாளு என் கூட இருந்துருமா. எனக்கு அது போதும்” என்று பெரிய மனுசி மாதிரி சொன்னாள் மாரி.

சுப்பையா டாக்டர் தொலைபேசியில் சம்முகத்தை திட்டிக் கொண்டிருந்தார். ஏன்யா நீ ஆஸ்பத்திரியில மாத்திரைகள கையாடல் பண்ணப்பவே, உன்னை வேலையை விட்டு தூக்கி இருக்கணும். போனா போது குடும்பஸ்தனு விட்டது தப்பா போச்சு. உன்னோட திருட்டு புத்திய  உருச்சு வச்சுருக்கான் உன்னோட புள்ள விமலன். மாரிகிட்ட இருந்த நோட்ட திருடிட்டு வீட்டுக்கு வந்தான்ல. அந்த நோட்டு எதுக்குன்னு உனக்கு தெரியும்ல. அத போய் ஓம்புள்ளகிட்ட சொல்லிருக்க. அவன் சும்மா இருக்காம டியூசன்ல மாரிகிட்ட சொல்லி, அவுங்க அம்மாவையும் மாரியையும் தப்பானவனு திட்டி அடிச்சுருக்கான். ஸ்கூல்ல எல்லார் கிட்டயும் சொல்லிருவேன்னு மெரட்டிருக்கான். இதெல்லாம் உனக்கு தெரியுமா?. ஹெல்த் டிபார்ட்மென்ட் இருக்குற நீ இந்த  விஷயத்தை வெளியில சொன்னதுக்கு கண்டிப்பா உனக்கு ஜெயிலுதான் தெரியும்ல. “சார்.. சார்.. நா பண்ணது தப்பு தான். என் பையன்ட சொல்லி விசயம் வெளிய தெரியாம பாத்துக்கறேன் சார். இந்த ஒருதடவ மட்டும் மன்னிச்சுடுங்க சார்” என்று கெஞ்சினார் சம்முகம்.

“மாரி பேசாம நம்ம வேற எங்கயாவது ஊருக்கு போயிருவோம்மா”.

“அப்பா ஊர்ல இருந்து இங்க வந்த. இப்ப இங்க இருந்து வேற ஊருக்கு போணுமா. நாம எங்கேயும் போக வேண்டாம்மா. நாம இங்கேயே இருப்போம் நாம ஏன் பயப்படனும், படித்த தைரியமான பெண் மாதிரி சொன்னாள் மாரி.

“இல்லம்மா விமல் பையன் நேத்து உன்கிட்ட சொன்ன மாதிரி பள்ளிக்கூடம் முழுக்க சொல்லிட்டா, எல்லாரும் உன்னை கிண்டல் பண்ணி, உன்ன ஒதுக்கி வச்சுருவாங்கத்தா. உன்னால இனிமே ஸ்கூலுக்கு நிம்மதியா போக முடியாதுத்தா. அதனால தான் சொல்றேன் நாம வேற எங்காது போய்டுவோமா” அழுகையை நிறுத்தாமல் சொன்னாள் பூமாலை. “நீயும் தப்பு பண்ணல, அப்பாவும் தப்பு பண்ணல, நானும் தப்பு பண்ணல அப்புறம் ஏமா இந்த ஊரை விட்டுப் போகணும். யார் என்ன சொன்னாலும் நான் இங்க தான் இருப்பேன். இங்கேயே தான் படிப்பேன். எனக்கு தான் நீயும், டாக்டர் மாமாவும் இருக்கீங்களே அப்பறம் என்ன. நாம எங்கேயும் போக கூடாது என்றாள் செல்லமாரி. மாரியை கட்டிபிடித்து அழுதுகொண்டே முத்த மழை பொழிந்தாள் பூமாலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *