வர்மம் எனும் மர்மக்கலை!

வர்மம் எனும் மர்மக்கலை!

  • By Magazine
  • |

– முனைவர் முல்லைத்தமிழ்

பட வர்மம்

உள்ளங்காலின் நேர் எதிர்புறம் மேற்புறத்தில் படங்காலில் படவர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மத்திற்கு பாதச்சக்கர வர்மம், படங்கால்வர்மம், நடுபடங்கால் வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு.

சென்ற மாத இதழில் காலில் உள்ள வர்மங்களில் ஒன்றான விருதிவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் படவர்மம் பற்றி அறிவோம்.

“மன்றான படமதிலே  படவர்மந்தான்”.

                                                                                – வர்மக்கண்ணாடி

 “பிறந்தாள் உள்ளங்காலின் நேர் பின்னே

அவதியுறும் நடுப்படங்கால் படவர்மம்”.

                                                                                                 – வர்ம குருநூல்

எனவும்

வாறான காலில் படவற்மம் கொண்டால் கேளு

                                                வரும் குறிகள் சிந்தை கெட்டிருக்குமய்யா

                                கூறான நரம்புவலி உளைச்சல் வீக்கம்

                                                குறியான கண்ரோகம் கூடும் பின்னே

                                வீறான முறிவுகொண்டால் யிந்த காயம்

                                                விற்ணமது ஆறாமல் விரைந்து நிற்கும்

                                முறையான ஔஷதங்கள் செய்தால்

                                                முற்றாமல் தீருமிது முகிந்துச் சொல்.

                                                                                                                –வர்ம கருவிநூல்-500

                “சாவாமல் சாகுமந்த படவர்மம் பட்டவுடனிளக்கு

                                பரிசுமெத்தச் செய்முறைகள் பலதுமுண்டு

                ஆகாமல் போகாது அளவறிந்து அனுக்கிவிட

                                சென்னிசெவிக்குற்றி மண்ணைக் கால்குழியும்

                வேகாமல் வேகும் வியர்வைபனிசுரமும் படபடப்பு

                                தீருதற்காய் கீரடங்கல் அமத்துக்கவளிவெள்ளை

                நோகாமலிருப்பதற்காயவுசதம் செய்நொந்துபிணி

                                தொடர்ந்துடனே விரணமதால் தினமும் சாவாம்”.

                                                                                                                                – வர்ம குருநூல்

எனவும் குறிப்பிடுகிறது.

                நடக்குங்கால் அடி மேலொருபடமாம் அஃதரவன்னவாம்

                கிடக்கும் காலதன் நடுமேலொரு படமாமஃது சக்கரமாம்

                ஒடுக்குமுடன்காலமதில்கொள்ளில்விடமீறிக்குத்துழையும்

                அடைக்கும் கண்மயக்கமுடன் தளர்ச்சையசதியாயுறும்.

                                                                                                – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                நம் உடலை நடத்துகின்ற காலின் அடிப்பக்கம் பாம்பின் படம் போல் நிலைக்கின்ற இடத்தில் ஒரு படவர்மம் உள்ளது. அதுபோல் கால் அடியின் நடுவின் நேர் மேல் ஒரு பட வர்மம் உள்ளது. அதனை பாதச்சக்கரம் என்றும் அழைப்பார்கள். இந்த வர்மத்தில் விசநிலையான காலத்தில் கொண்டால் தாங்கொணா குத்துழைவு உண்டாகி உடல் ஒடுக்கமடையும், கண்கள் அடைத்து மயக்கமும் தளர்வும் அசதியும் உண்டாகும் என்பதாம்.

                உண்டுறும் வியர்வையாம் வலியது மிஞ்சுறலால்

                கொண்டுறும் படபடப்பும்பரபரக்கும் மேனியஃதுற

                தொண்டறும் தொடர்ந்துறும் வலியால் மிஞ்சுறும்

                விண்டுறாகுணமிஃதுரைப்பதற்குமரிதாம்மென்னே.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                இந்த வர்மத்தின் தாக்கத்தால் வலி மிஞ்சிக்கொண்டேப் போவதால் வியர்வையும் அதிகமாகி படபடப்பும் ஒருவித பரபரப்பும் தோன்றும். அதனால் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் எனப் புரியாமல் எளிதில் புரிந்துகொள்ள முடியாத பலபல குறிகுணங்களும் உண்டாகும் என்பதாம்.

                என்னுறுமித்தலம் எழிலுறத் தொட்டுறில் மட்டுறவாம்

                பன்னுறும் பலகுறிகுணமுறத் தெளிந்துறும்இஃதென

                இன்னுறும் பிணி பலதுக்குமாமித்தலம்பதமுறபதித்துற

                நன்னுறும் நல்லுடல் என்னுறலிஃததன் தெளிவே.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                இந்த தலத்தை நலமுறத் தொட்டுத் தூண்டிவர பல குறிகுணங்களைக் கொண்டு பின்னிப் பிணைந்துள்ள பல நாள்பட்ட நோய்களும் மாறி உடல் நலமும் உண்டாகும் என்பதாம்.

                தெளிவுறும் அனல்புனல் காலவழியுறும் பிணிகளும்

                அழிவுறும் விண்ணகமுறும் குளப்பமும் குணங்கெட

                பழியுறும்மண்வழியாயுறும் சன்னிவலிகளும் பலவழி

                உழியுறும் உச்சிக்குத்துடன் உறக்கமின்மையுமாமே.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                இந்த வர்மத்தை தூண்டி இயக்கும் போது அனல் எனும் அக்கினி பூத பிணிகளும், புனல் எனும் நீர் பூத பிணிகளும், கால் எனும் காற்றுப்பூத பிணிகளும் நம்மையே அலைக்கழித்துவிடும். விண் பூதமாகிய அறிவு மனக்குளப்பமும், பழிகளை உண்டாக்கும் மண்பூதம் வழியுறும் சன்னி வலிகளும் உழ்வழியாய் அடிக்கடி வரும் உச்சிக்குத்தும், உறக்கமின்மையும் மாறி நலம்படும் என்பதாம்.

                கால்புற நடுவுறும்சக்கரப்படமுற்றில்சகடறும்

                மாலுறும் கண்ணுமடைந்துறும் திறனுமிஃது

                சேலுறு செவ்வழிப் பேணலும் தடைந்துறும்

                ஏலறும்என்னுறல்முன்னவர்முனைந்துரையானே.

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                புறங்காலின் நடுவில் அமைந்த சக்கரம் எனும் வர்மத்தில் தாக்கம் கொண்டால் கண்களில் எளிதில் இருள் தோன்றும். அதாவது பார்வை மந்தமாகும். எதையும் பகுத்தறிந்து வேகமாக உணர்ந்துகொள்ளும் திறன் குறைவடையும். தன்னையும் தன் உடலையும் பேணுதல் குறைவடையும் அல்லது இல்லாமலே போய்விடும். மட்டுமில்லாமல் ஏல் – எனப்படும் உடல் வலிமையும் குறைந்துவிடும் என்பது முன்னுணர்ந்த வல்லுநர்களின் தெளிவாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.

                இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், காலில் வீக்கமும், தாங்கமுடியாத வலியும், உளைச்சலும் ஏற்படும். தாங்கொணா வலி உண்டாவதால் வேறு எந்தவித சிந்தையும் தோன்றாமல் கவனம் முழுவதும் இந்த வேதனையை குறித்தே இருக்கும். கைகால் அசதி தோன்றி படபடப்பு, தளர்ச்சையுடன் வியர்வை தோன்றி கண்மயக்கம், மயக்கமோடு ஜன்னி, சீதம் உண்டாகும். இவ்வர்மத்தில் புண்புரைகள் ஏற்பட்டால் நெடுநாட்கள் ஆறாமல் இருக்கும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இவ்வர்மத்தை இளக்குவதற்கு கீழ்முதுகுப்பகுதியிலிருந்து அடித்தொடை வழியாக கீழ்நோக்கி தடவி, உள்ளங்காலில் விரல் பதித்து, நடுவிரலை இழுத்து விடவும். இதைப்போன்று மேல்தொடை, உள்தொடை, கீழ்தொடை இவைகளை கையணைத்து கீழ்நோக்கி தடவி, விரல்களை மெதுவாக இழுத்து நீட்டவும். இவ்வர்மத்தில் தடவும்போது பாதிக்கப்பட்ட இடத்தில் கைபடவோ, அழுத்தம் கொடுக்கவோ கூடாது. முறிவு ஏற்படாமல் இருந்தால், உள்ளங்கையினால் இதமாக தடவி, பற்றிட்டு கட்டவும். மேலும் இவ்வர்த்தின் பாதிப்புகள் தீர சென்னி அடங்கல், செவிக்குற்றி அடங்கல், மணை அடங்கல், கால்குழி அடங்கல், கீரடங்கல், கவளி அடங்கல், வெள்ளை அடங்கல், அமத்தடங்கல் போன்றவைகளை தூண்டி, அகமருந்தும் புறமருந்தும் செய்துவர சுகம் உண்டாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு கண்ரோகம், வயிற்றுப்புண், தளர்ச்சை, கால் சுழுக்கு, ஜன்னி, மயக்கம், அசதி, தூக்கமின்மை, உச்சிக்குத்து போன்ற பின்விளைவுகள் உண்டாகும் என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வர்மத்தை சூண்டுவிரல், பெருவிரல், மொழி, உள்ளங்கை போன்றவைகளாலான தூண்டுமுறை நுட்பங்களைக் கொண்டு தூண்டிவர, தூக்கமின்மை, நரம்புவலிகள், அடிக்கடி தோன்றும் மயக்கம், உச்சிக்குத்து, நாபியில் தோன்றும் வலி போன்றவைகள் குணமாகும். நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கவும் இவ்வர்மத்தில் தூண்டிக்கொடுப்பது வல்லுநர்களின் வழக்காகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *