– வெ.சின்னசாமி
பழமொழி என்றால் என்ன என்பதற்கு அந்தச் சொல்லிலேயே விளக்கம் இருக்கிறது. பழையமொழி பழமொழி. பழகிப் போன மொழி பழமொழி.
பழமொழிகள் ஒரு நாட்டின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தும் கருவிகளாக உள்ளன. நிகழ்ச்சிகளையும், அனுபவங்களையும் அடிப்படையாக வைத்து எழுந்தது தான் பழமொழிகள். பையிலே போட்டு வைத்திருக்கும் சில்லறைக் காசுகள் நமக்கு எப்படி உடனுக்குடன் உதவுகின்றனவோ அதுபோன்று நாம் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கூடவே வந்து உதவக் கூடியது பழமொழிகள்.
‘நாலுபேர் போன வழியே போவோம்பா’
என் வழி தனிவழி என்பதெல்லாம் தற்காலத்தில் பெருமைமிகு சொல்லாக இருக்கலாம். அந்த வழியும் நாலு பேர் போன வழியே போவோம்… என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். யார் அந்த நாலு பேர் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்போர். முதன்மை பெற்ற இறைத்தொண்டர்கள். அவர்கள் காட்டிய வாழ்க்கை முறை ஏற்றமுடையது. ஏற்புமுடையதாகும்.
‘அய்ந்து பெற்றால் அரசனும் ஆண்டி’
அய்ந்து பெண்மக்களைப் பெற்றவர்களின் நிலையைக் குறிப்பிடுவதாக தற்காலத்தில் அர்த்தம் கொள்கின்றனர். அதுவல்ல சரியான பொருள். ஆடம்பரமாய் வாழும் தாய், பொறுப்பில்லாமல் வாழும் தந்தை. ஒழுக்கமற்ற மனைவி, ஏமாற்றுவதும், துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தார், சொல் பேச்சு கேளாத பிள்ளைகள் ஆகிய அய்ந்தும் அரசனே ஆனாலும் ஆண்டியாக்கி விடும் என்பது தான் உண்மைப் பொருள்.
‘ஆடிகாற்றில் அம்மையும் பறக்கும்’
கோடைக்காலமான பங்குனி முதல் ஆனிவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தக் கடுமையான வெப்பத்தினாலும், உண்ணும் உணவின் சுகாதாரமற்ற தன்மையாலும் அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த நோயை போக்கும் சக்தி ஆடிமாதம் வீசும் காற்றுக்கு உண்டு. ‘ஆடிக்காற்றில் அம்மைநோயும் பறக்கும்’ என்ற பழமொழியை ‘ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’ என்றாக்கி விட்டனர் மக்கள்.
இருளில் தீவர்த்திகள் போன்றவை பேச்சில் பழமொழிகள் என்கிறது அமெரிக்கா. உணவுக்கு உப்பு எப்படியோ அப்படியே பேச்சுக்கு பழமொழி என்கிறது. அரேபியா பழமொழி பொருள் செறிவுள்ள வாக்கியம். அனுபவ உண்மையை மிகச் சுருக்கமாகத் தெரிவிப்பது பழமொழி.
சில பழமொழிகள் நேரடி பொருளைத் தருகிறது. சில பழமொழிகளுக்கு சுற்றி வளைத்து அர்த்தம் காண முடிகிறது. சில பழமொழிகளோ சொல் வழக்கில் மருவி அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டது. தமிழர் வாழ்வு எனும் கடலிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட நல் முத்துக்களே பழமொழிகள். அந்த முத்துக்களின் தரம் அறிந்து பயன்படுத்தி வாழ்வினை சிறப்பாக்குவோம்.
நீ அனுபவி – அதுதான் ஞானம்
பிறரை அனுபவிக்க – அதுதான் தர்மம்
– பெர்சின் பழமொழி
Leave a Reply