சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  • By Magazine
  • |

– வழக்கறிஞர் பி. விஜயகுமார்

இந்தி திணிப்பு வெறுக்கப்படுகிறது

இந்தி படிப்பு அல்ல- உச்சநீதிமன்றம்

நீண்ட காலமாக தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி நிறுவுவது குறித்து ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இப்பள்ளி நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இல்லை. காரணம் இந்தி எதிர்ப்பு, அல்லது இந்தி திணிப்பு என்ற வாதம் வைக்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் பெருவாரியான தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. மேலும் மத்திய அரசும் இந்தி பிரச்சார சபை  மூலம் தனி நபர்களுக்கு இந்தி பயிற்றுவித்து அதற்குரிய சான்றிதழ்களும் கொடுத்து வருகிறது.

இந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று இங்குள்ள திராவிட கட்சிகளும், த.வெ.கவும் கூறி வருகிறது. அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் குடி பெயர்ந்துள்ள வட நாட்டவர், குறிப்பாக ராஜஸ்தானி மார்வாடிகள் தமிழை நன்கு படிக்கவும், பேசவும், எழுதவும் செய்கிறார்கள். அவர்கள் குழந்தைகளும் பள்ளியில் தமிழ் கற்று வருகின்றனர். வடநாட்டிலிருந்து பிழைப்பிற்காக தமிழகம் வந்துள்ள கூலித் தொழிலாளிகளும் தமிழ் பேசுகிறார்கள். ஆதலால் இந்திக்காரர்களால் தமிழ் வளர்ச்சி பெறுகிறது என்று சொல்லலாம்.

இந்த டிஜிட்டல் உலகில் தற்போது மொழி ஒரு பிரச்சனையாகவே இல்லை. இத்தாலி சென்று தமிழர் ஒருவர் இத்தாலிக்காரர் கடையில் ஒரு பொருளை வாங்குவதற்கு தமிழில் பேசினால் போதும், அவருடைய கைபேசி கடைகாரருக்கு இத்தாலியில் மொழிபெயர்த்து கொடுக்கும். அனைத்து மத்திய அரசு தேர்வுகளிலும் தமிழ் இப்போது பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசோ தேவைப்பட்டால் மத்தியிலிருந்து தமிழக அரசுக்கு அனுப்பப்படும் அனைத்து அலுவலக தகவல்களையும் ஆங்கிலம், இந்தி இல்லாமல் தமிழிலே அனுப்பி வைக்கலாம் என்கிறது.

கூடுதல் ஒரு மொழி பேசுவதால் ஒருவர் இரு மனிதருக்கு சமம் என்று சொல்லுவார்கள். பாரதியார் பத்து மொழிகள் தெரிந்தவர் என்று சொல்லுவார்கள். கூடுதல் மொழி தெரிவது ஒருவருக்கு கூடுதல் பலம்தான். இந்தி தெரிவதால் நேபாள், பாகிஸ்தான், பங்காளதேஷ், அப்கானிஸ்தான் என அத்தனை நாடுகளுக்கும் சென்றால் மொழி பிரச்சனை இருக்காது. அந்நாட்டு மொழிகள் கிட்டதட்ட இந்தியுடன் ஒத்து போகும். நேபாளியும் இந்தியும், உருதும் இந்தியும் தமிழும், மலையாளமும் போன்று கிட்டதட்ட ஒத்து இருக்கும்.

தமிழகத்தில் நவோதயா பள்ளி நிறுவுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதை விசாரிக்கும் இரு நீதிபதிகளில் ஒருவர் மாண்புமிகு நீதிபதி மஹாதேவன் ஆவார். இவர் பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருப்பதிசாரம் ஆகும். இன்னுமொரு உச்சநீதிமன்ற சீனியர் பெண் வழக்கறிஞர் திருமதி.மோகனா தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் இவர் இந்த அமர்வில் இல்லை.

மஹாதேவன் இன்னுதொரு வடநாட்டவர் நீதிபதிகள் அமர்வுதான் நவோதயா வழக்கை விசாரித்து வருகின்றனர். இவர்கள் தான் தமிழக அரசுக்கு இன்னும் ஒரிரு மாத காலத்திற்குள் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளி அமைப்பதற்குரிய இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி தான், இது தனி நாடு  என்று ஒன்றும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நீதிபதிகள் தான் இவ்வழக்கில் தமிழர்கள் இந்தி திணிப்பை வெறுக்கிறார்களோத் தவிர இந்தி படிப்பை அல்ல என்ற வாசகத்தை வைத்துள்ளனர். தமிழகத்தில் பெருபான்மையான மக்கள் இந்தி படிப்பதில் ஆர்வமாக உள்ளனர் என்பது உண்மை தான். ஆனால் என்ன செய்வது? உச்சநீதிமன்ற பரிந்துரைக்கு எதிராகவும், திராவிட கொள்கையாளர்கள் தங்கள் எதிர்ப்பை உயர்த்தி பிடிக்க ஆரம்பித்து விட்டனர். பி.ஜே.பி, காங்கிரஸ், இடது, வலது சாரி கட்சிகள் தமிழகத்தில் இந்தியை எதிர்க்க மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் தலைமை டில்லியில் உள்ளது. மேலும் இவை தேசிய கட்சிகள் காங்கிரஸ் கட்சித்தான். ஆங்கிலம் இருந்த இடத்தில் அதிகமாக இந்தியை கொண்டு வந்தது. பி.எஸ்.என்.எல் என்ற பாரத சன்ச்சார் நிகம் லிமிடெட் என்ற சொல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியில் கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *