கோலங்கள்

கோலங்கள்

  • By Magazine
  • |

– கை.செல்லதங்கம்

வண்ணக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட மைதானம். ஒலிபெருக்கியில் பழைய பாடல்கள். எங்கு பார்த்தாலும் சிறுவர் சிறுமியர் புத்தாடைகளில். மைதானத்தில் வண்ணக் கோலங்கள் கண்ணைக் கவர்கின்றன. ரங்கோலி, புள்ளிக்கோலம் என கலர் கலரா கோலங்கள். மேடையிலே கோலப் போட்டியில் பரிசு பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படுகிறது. கோலப் போட்டியில் முதல் பரிசு வசந்தி. இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தாள் வசந்தி. எனக்கு முதல் பரிசு. எனக்குத்தான் முதல் பரிசு. அம்மா.. அம்மா.. யாருக்கு முதல் பரிசு… என்னம்மா சொல்றீங்க என்று மகள் கேட்க அவளது கணவன் கேசவன் அம்மா கனவு கண்டு இருப்பாள் போல… அப்படியாம்மா… கனவா… மகளும் சேர்ந்து சிரித்தனர். ஆம் வசந்தி கண்டது பகல் கனவு. தலைவலிக்குது என்று படுத்தவள் கண்ணயர்ந்த போதில் கண்ட கனவு.

வசந்தி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அழகாக கோலம் போடுவாள். நன்றாகப் படிப்பாள். அழகான கையெழுத்துக்கு சொந்தக்காரி. சிறப்பாக ஓவியம் வரைவாள். அவளது அப்பா சிறு வயதிலேயே மாக்கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகளை சொல்லிக் கொடுத்து வளர்த்தார். கோலம் போடுவதால் ஞாபகத் தன்மை வளரும். மனம் ஒருநிலைப்படும்… சிறப்பாக ஓவியம் வரைய முடியும். உளவியல் சிக்கல்களை தீர்க்க முடியும். ஆம் சிக்கலான கோலங்கள் போடுபவர்கள் குடும்ப சிக்கல்களை எளிதில் சமாளித்து விடுவார்களாம். வசந்தி படிக்கும் காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் விழா என்றால் அவள் தான் கோலம் போடுவாள். ஊரில் நடக்கும் பொங்கல் விழா, சுதந்திர தினவிழா எந்த விழாவானாலும் நடக்கும் கோலப்போட்டியில் வசந்திக்கு தான் முதல் பரிசு. பண்டிகை காலங்களில் வசந்தி வீட்டின் முன் போடும் கோலத்தை தெருவே பாராட்டும். திருமணம் முடிந்து பட்டணத்திற்கு வந்த பின்னும் விசேச நாட்களில் வீட்டின் முன் வண்ணக் கோலங்கள் போடுவதுண்டு. அவள் கணவனும் குழந்தைகளும் கூட பாராட்டுவதுண்டு.

அவள் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்கள் சமீப காலமாக பொங்கல் விழா நடத்தி வருகிறார்கள். சமத்துவப் பொங்கலாக அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விதத்தில் நடத்தும் விழாவில் விளையாட்டுப் போட்டிகள், பேச்சு போட்டிகள், பாடல் போட்டிகள் சிறுவர்களுக்கு நடக்கும். பெரியவர்களுக்கு என்றால் வடம் இழுக்கும் போட்டித்தான். இவ்வருடம் பெண்களுக்கான கோலப்போட்டியை அறிவித்துள்ளார்கள். பிள்ளைகள் கோலப்போட்டியில் என் பெயரையும் கொடுத்துள்ளார்கள். அதைப் பற்றிய நினைவால் வந்தது தான் இந்தக்கனவு. அப்படியே படுத்திருந்தவளின் நினைவு பின்னோக்கி சென்றது. கல்லூரியில் படிக்கும் நாட்கள் அவளோடு கல்லூரியில் படித்த மூத்த மாணவன் முகுந்தன். பக்கத்து ஊர் இவர்கள் ஊரில் படிக்கும் மாணவர்களைப் பார்க்க வருவான். விழாக்களுக்கு வருவான். வசந்தியின் கோலத்தைப் ஒரு தடவை பாராட்டி சூப்பர். கைவிரல்கள் என்ன மாயம் செய்கிறது ஒரு விரலின் இரட்டை வரிகளா ரங்கோலி என்றான். அப்படியே பேசி பேசி அடிக்கடி ஊர் பக்கம் வருவான். ஒரு தடவை மார்கழி மாதம் அதிகாலையில் முற்றத்தில் கோலமிட்டு நிமிர்ந்தாள். பக்கத்தில் ஏதோ நிழலாட்டம் முகுந்தன் சூப்பர் பெண்டாஸ்டிக் என்றான். அதிகாலையில் இந்த பக்கம் ஏன்? என்றாள். உன்னையும் உன் கோலத்தையும் பார்க்கத்தான் என்றான். இவள் வெட்கப்பட்டாள். வசந்தி நான் எல்லைக்குச் செல்கிறேன் ராணுவ பணி நிமித்தம்… வர ஓராண்டு ஆகும். என் மனதில் நீ  இடம் பிடித்து விட்டாய் காத்திரு. வந்து கல்யாணம் செய்கிறேன் என்றான். கடிதமும் வந்தது தோழியின் பெயரில். ஒரு வருடம் கழித்து ஊருக்கு வந்தான். நேரே வீட்டிற்கு வந்தான். என் பெற்றோருடன் கசஜமாக பேசினான். அவன் சென்ற பிறகு அப்பா கேட்டார். இவனிடம் உனக்கு என்ன பேச்சு, பழக்கம் என்று. கல்லூரியில் சீனியர் மாணவன் என்றாள். பக்கத்து ஊர் என்றாள். இனி வீட்டின் பக்கம் வரக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார். தெரிந்தவர்கள் மூலம் பெண் கேட்டான் முகுந்தன். மறுத்து விட்டார் தந்தை. காரணம் ஜாதி வேறு. வசந்தி கண்காணிக்கப்பட்டாள்… முகுந்தன் பயமுறுத்தப்பட்டான். தொடர்புகள் இல்லை. தகவல்கள் பரிமாறப்பட முகுந்தனுக்கு வாய்ப்புகள் அடைக்கப்பட்டன. அவன் ஊருக்கு சென்று விட்டான். வருடம் ஒன்று ஓடியது. ஒன்று இரண்டானது. வசந்திக்கு வரன் பார்த்தார்கள். மறுத்தாள் தந்தை வற்புறுத்தினார். முகுந்தனோடு எந்த தொடர்பும் தகவலும் பரிமாறப்படாத நிலையில் என்ன செய்வாள். தந்தையின் பிடிவாதமும், பயமுறுத்தலும் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது. கேசவன் வெளியூர். நல்ல வேலை… நல்ல பையன். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள். வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. எப்போதாவது முகுந்தன் ஞாபகம் வரும். எங்கிருக்கிறானோ தெரியாது. குறிப்பாக கோலம் போட்டால் நினைப்பதுண்டு. அவள் போடும் கோலங்கள் அழிந்து போகும். ஆனால் முகுந்தனின் நினைவுகள் அவளது அடிமனதில் அழியாத கோலமாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *