வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன்
சென்ற மாத இதழின் தொடர்ச்சி…
7.5 ஆன்டன்வான் லூவன் ஹுக் உயிரினத் தோற்றத்தின் ஆய்வுகள்
7.5.1 அமீபா முதல் குரங்கு வரை ஓர் உலகம்
ஆன்டன்வான் லூவன் ஹுக் என்பவர் கண்களுக்கே புலப்படாத ஒற்றை செல் உயிரியான புரோட்டோசோவாவைக் கண்டுபிடித்தார். இந்த புரோட்டோசோவாவில் சுமார் 30,000 வகைகளை கண்டறிந்துள்ளனர். இவை கடலின் மேல், கீழ், நடு என மட்டுமின்றி எல்லாவகை நீர்நிலைகளிலும், மண், அழுகிய பொருட்கள் என அனைத்திலும் வாழும் தன்மை கொண்டவை. “அமீபா” எனும் ஒளிபுகும் புரோட்டோபிளாசத்தினாலான உயிரியானது ஒற்றை செல்பிரிவை சேர்ந்ததாகும். எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் எனப் பொருள்படும் கிரேக்கச்சொல்லே “அமீபா” என பெயர் பெறுவதற்கு காரணமாயிற்று. இதனைத் தொடர்ந்து யூக்ளினா எனும் கசை இழை உயிரிகள், பாரமேசியம் போன்ற குற்றிழை உயிரிகள் தோன்றலாயின. 150 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இவ்வகை உயிரினங்களில் சுமார் 50,000 முதல் 80,000 இனங்கள் வரை கண்டறிந்துள்ளனர்.
அடுத்து தோன்றியவை ஒரு செல் உயிரிகள் இணைந்த பல செல் உயிரிகள் ஆகும். இவ்வகை உயிரிகள் பார்ப்பதற்கு தாவரங்கள் போல் காணப்படும். இதனை “வைவாக்ஸ்” என அழைப்பர். இதில், இரு கசை இழைகளும், பச்சையமும் காணப்படும். இஃது சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய உயிரினமாகக் கருதப்படுகிறது. கடற்பஞ்சு மற்றும் பல தாழ்நிலை பிராணிகள் இவ்வகைப் பிரிவை சார்ந்தவைகளாகும். கடற்பஞ்சு இனத்தைத் தொடர்ந்து தோன்றியவைகள் ஹைட்ரா (Hydro) எனப்படும் வெட்ட வெட்ட முளைக்கும் ஒருவகை தாவர இனமாகும். இஃது தன் உடலின் எந்த பகுதி வெட்டுண்டாலும் தானாக முளைக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. இது நீரில் காணப்படும் பாக்டீரியாக்களை உண்டு உயிர்வாழும் தன்மை படைத்தது. இதுபோல இக்காலகட்டத்தில் தோன்றியதே இன்று சொறிமீன் என சாதாரண மக்களால் அழைக்கப்படும் “ஜெல்லி” மீன் வகைகளும் ஆகும்.
இதனைத் தொடர்ந்து தோன்றிய உயிரினங்களே எழில்மிகு பவளப்பாலிப்புகள். இவை கடலுக்கடியில் கூட்டாக வாழும் தொகுப்புயிரிகள் ஆகும். இவைகள் இணைந்து உருவாவதே பவளப்பாறைகள் ஆகும். கற்பவளம், மூளைப்பவளம், தேன்கூட்டுப்பவளம், முட்பவளம், குழாய்ப்பவளம், விசிறிப்பவளம் மற்றும் விலைமதிப்புள்ள செம்பவளம் போன்றவைகள் இவ்வகை பிரிவுகளாகக் காணப்படுகின்றன. இத்தகைய உயிரிகளைத் தொடர்ந்து புழுக்கள், அட்டைகள் போன்ற உயிரினங்கள் தோன்றலாயின. இவைகளைத் தொடர்ந்து சுமார் 60கோடி ஆண்டுகால அளவில் மெல்லுடலிகள் தோன்றலாயின. இவைகளில் 80,000 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிப்பி, முத்துச்சிப்பி, சங்கு, சோழி, ஆளி, கணவாய், பேய் கணவாய், ஓட்டுக்கணவாய், நத்தை, ஓட்டுநத்தை, பெருநத்தை, கிளிஞ்சல்கள், கடல் சீப்புகள், மெல்லுடலிகளோடு, இருவோட்டுடலிகள், நண்டுகள், இறால்கள், நட்சத்திர மீன்கள், கடல் அல்லிகள், கடல்வெள்ளரி, கடல் முள்ளெலிகள் போல்வன தோன்றலாயின. இத்தனை வகை உயிரினங்களின் தோற்றத்திற்கு பின்னர், பல்வேறு உயிரின மறுமலர்ச்சியின் வடிவான முதுகெலும்புள்ள உயிரிகள் தோற்றமாயின. அவற்றுள் முதலிடம் வகிப்பவை மீன்கள் ஆகும். சுமார் 40 கோடி ஆண்டுகளில் தான் மீனினங்கள் தோன்றி உள்ளன. இவைகளில் பாலூட்டிகளாக விளங்கும் திமிங்கலம், கடற்பசு, கடற்பன்றி போன்ற பாலூட்டி இனங்கள் பெரும்பாலும் கடலின் மேற்பரப்பில் வாழ்வனவாயினும் கடலின் ஆழத்திற்கும் சென்று வரும் உடலமைப்பை பெற்ற உயிரினங்கள் ஆகும். நிலத்திலும் ஏராளமான மரங்கள், செடிகொடிகள் என அடர்ந்து பெருகி வளரத் தொடங்கின. புழு உடலிகளைத் தொடர்ந்து அட்டைகள் தோன்றின. அவைகளைத் தொடர்ந்து சுமார் 22.5 கோடி ஆண்டுகால அளவில் ஏராளமான ஊரும் உயிரினங்கள் பெருகலாயின. இந்த ஊரும் இனங்களில் பல தங்களை பிற உயிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள மரங்களில் தாவத்தொடங்கின. அவ்வாறு தாவத்தொடங்கிய உயிரிகளின் முன்னங்கால்களுக்கும் பின்னங்கால்களுக்கும் இடைப்பட்ட மென்சவ்வுப் படலங்கள் விரியத் தொடங்கின. இந்த விரிசலே நாளடைவில் சிறகுகள் தோன்ற காரணமாக இருந்திருக்கலாம் என கருதுகின்றனர். ஊர்வன, நடப்பனவாகி அவற்றிலிருந்தே பறக்கும் பறவைகள் தோன்றி உள்ளன. அங்ஙனம் தோன்றிய பறக்கும் உயிரினங்கள் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றலாயின. இந்த பறவை இனங்களில் 8,948 இனங்கள் இதுவரையிலும் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் ஊர்வன 6000, பாலூட்டிகள் 4200. பறக்கும் பாலூட்டியான வவ்வால்களில் மட்டுமே 1000 இனங்கள் உள்ளன. பாலூட்டிகளில் முதனிலை அடைந்தவைகளை “பிரைமேட்ஸ் (Primates) எனக் குறிப்பிடுவர். அவைகளில் முதலில் தோன்றியவை மூஞ்சுறு போன்ற ஒரு விலங்கினமாகும். இவை மரத்தில் வசிப்பவையாகும். பபூன் குரங்கு, மனிதன் போன்ற பாலூட்டிகளே மரத்தை விட்டு தரையில் வாழும் பாலூட்டிகளாகும். முதல்நிலை பாலூட்டிகளை புரோசிமியான் (Prosimians) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். புரோசிமியான் என்பது லத்தீன் சொல்லாகும். இதற்கு “குரங்கிற்கு முந்தைய” என்று பொருள். இதேப்போன்று “ஆந்த்ராய்டு” என்ற லத்தீன் சொல்லிற்கு “மனிதனைப் போன்ற பிராணிகள்” என்று பொருள். இந்த பாலூட்டிகளில் இரவில் உணவு தேடும் தேவாங்கு வகைகள், லெமூர் வகைகள் போன்றவைகள் தாழ்நிலை பாலூட்டிகளாகும். குரங்கு, வாலில்லாக் குரங்கு, மனிதக்குரங்கு, மனிதன் போன்றவர்கள் உயர்நிலைப் பாலூட்டிப் பிரிவை சார்ந்தவர்களாகும். புதுயுகக் குரங்குகளில் சிம்பன்ஸி இனம் மனித இனத்திற்கு மிக நெருங்கிய இனமாகும்.
Leave a Reply