முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…
மதவெறி
வந்தால்
மானிடரே…
கண்ணும் மண்ணும்
புரியாது…
கால்கள் – கைகள்
நினைவிழந்து
கற்பனை உலகில்
வீழ்ந்துவிடும்…
செத்த பிணம்போல்
புத்தியதும் மொத்தமும்
செத்து வீழ்ந்திடுவோம்…
எந்தன் தெய்வம்
உந்தன் தெய்வம்
எல்லாம் கற்பனை
உணராமல்
எவனோ உரைக்கும்
சூழ்ச்சிக்குள் எழுதி வைத்த
காட்சிக்குள்…
விழுந்து நொறுங்கி
வீணாகி…
வாழ்வையிழக்கும்
பூச்சிகளே…
தெய்வம் என்றால்
எல்லோர்க்கும்
ஒன்றே என்று
உணர்வீரோ?
நண்டுக்கொன்று
வண்டுக்கொன்று
நாட்டில் கோழி
புறாக்களுக்கும்
காட்டில் வாழும்
புலிகளுக்கும்
எல்லாம் தெய்வம்
ஒன்றன்றோ?
எண்ணி நன்றாய்ப்
பாருங்கள்… இன்னும்
ஒன்றைக் கேளுங்கள்…
தெய்வங்கள் எல்லாம்
அடிவாங்கி…
தெருவில் செத்து
விழுந்திடுமோ?
மொத்தமுமறிந்த
ஒரு தெய்வம்…
நினைத்த நொடியில்
மாறாதோ?
சண்டையிட்டுச்
சகடம் செய்து…
தன்னாள் – எதிராள்
என்றெங்கும்
தறுகும் முறையும்
சரிதானோ?
அடித்துக் கொன்று
போடுங்கள்…
என்றேக் கூறி
பேசிடுமோ?
அடியாள் தலைவன்
தனைப்போலே
அனைத்தும் தெரிந்த
ஒரு தெய்வம்…
அடுத்து சூது செய்திடுமோ?
ஐயகோ… நெஞ்சம்
வெடிக்கிறது…
அடுத்துமொரு தேசத்தில்
கோஷ்டிச்சண்டை
நடக்கையிலே…
கூடச்சேர்ந்து
போரிட்டுக் கோடி
உயிர்கள் சாவதனை
கண்டு களிக்கும்
புனைக்கதையில்…
ஏதோவென்று
நினைக்கயிலே
எதிரிப்படையைக்
கடலுக்குள் மூழ்கடித்த
மறு சாமி…
எதிரி நண்பர்
என்றெல்லாம்
அவர்க்குமுண்டோ
மண்மீதில்…
மனிதன் கதையை
மனிதன் போல்
எழுதி வைத்தப்
புனைக்கதைக்குள்
புதைத்து மூளையை
அடகு வைத்து…
புதுமையிழந்த மானிடரே
யாரோ… சிலபேர்
வாழ்வதற்காய்…
புனைந்துவிட்டார்
பல கதைகள்…
புதைந்து செத்தது இனிபோதும்
புதிதாய்ப் பிறந்து வாருங்கள்…
ஒன்றே ஆற்றல்
எல்லார்க்கும்…
உலகில் என்றும்
இயற்கையினை
நன்றாய்ப் பேணி
நாம் வாழ்வோம்
சாதி மதமும்
இங்கில்லை…
எல்லாம்
பழக்கத் திரிபுகளே!
என்று நாமும் ஒருமையுடன்
உணர்ந்தே மகிழ்ந்து
வாழ்ந்திடுவோம்.
Leave a Reply