ஒரு தேவதாசியின் தெய்வீகத் திருப்பம்

ஒரு தேவதாசியின் தெய்வீகத் திருப்பம்

  • By Magazine
  • |

– பழனி அரங்கசாமி

கர்நாடக மாநில நஞ்சன் கூடு நகரின் கண்டீஸ்வர் ஆலயத்தில் தேவதாசியாக இருந்தவர் புட்டலட்சுமி. தேவதாசி என்பது வடசொல். தமிழில் தேவர் அடியவள் என்று பொருள். இச்சொல்லை தேவடியாள் என்ற கொச்சை வழக்காக்கி விட்டனர். ஆயினும் ஒரு மானுடர்க்கே மனைவியைப் போல் வாழ்ந்த புட்டலட்சுமிக்கும் சுப்பண்ணா என்னும் பிரபல மைசூர் வழக்கறிஞருக்கும் 1878 நவம்பர் 3-ஆம் நாள் பிறந்தவரே நாகரத்னம்மாள். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாகரத்னம்மா தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய பன்மொழிப் புலமையும், பாடும் திறமையும், நாட்டிய நளினமும் உபநயனச் சிறப்பும் பெற்ற உயர் தனிக்கலையரசி. தேவதாசி எனப்படும் கணிகையர் குலத்தில் பிறந்தாலும், சேற்றில் மலர்ந்த செந்தாமரையாகத் திகழ்ந்தவர்.

தேவதாசியர்க்கோ சட்டத்தின் துணையும் இல்லை. சமூகத்தின் ஆதரவும் இல்லை. மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்பது பழமொழி. உறவினை உதறிவிட்ட சுப்பண்ணாவிடமிருந்து வெளிவந்த அன்னையையும் சிறுமி நாகரத்தினத்தையும் வடமொழி பண்டிதர் திம்மையா ஆதரித்தார். அவரிடம் வடமொழியினைக் கற்று இசைப்புலமையும் பெற்றார் நாகரத்தினம். தூரத்து உறவினரான பிரபல பாடகி தனக்கோடி அம்மாளின் அழைப்பினை ஏற்று அன்னையும் மகளும் பின்னர் காஞ்சிபுரத்துக்கு வந்தனர். உண்டியும் உறையுளும் கொடுத்த தனக்கோடி அம்மாள் சிறுமிக்கு தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மொழியினையும் கற்பித்ததோடு திருப்புகழையும் அருணாசலக் கவிராயரின் இராம நாடகத்தையும் பயில்வித்தார். வயது முதிர்ச்சியாலும், நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்ட அவரிடம் நீண்ட காலம் தங்கிட இயலவில்லை.

புட்டலட்சுமி பெங்களூரில் இருந்த தனது தம்பி வயலின் வித்வான் வெங்கிட சாமப்பாவிடம் செல்ல நேரிட்டது. நாகரத்தினம் அங்கு தெலுங்கு மொழியோடு ஆங்கிலமும் பயின்றார். நட்டுவனார் கிட்டண்ணாவிடம் புட்டலட்சுமி தனது மகளை நாட்டியமும், இசையும் பயிலச் செய்தார். நாட்டியக்கலையில்  அதி முக்கியத்துவம் வாய்ந்த முகபாவனை என்னும் அபிநயத்தில் நாகரத்தினம் நல்ல பயிற்சி பெற்றார். பிறிதோர் வித்வான் முனுசாமப்பர் வயலின் கற்றுக் கொடுத்தார்.

தாயார் புட்டலட்சுமிக்கு முதுமைத் தளர்ச்சியோடு இருமல் நோயும் வந்து விட்டது. மகள் நாகரத்தினத்துக்கு 15 வயது. அழகான பெண் என்று கூற முடியாததெனினும் சிவப்பு நிறம். சுருண்ட கூந்தல். எனவே தாய் மாமன் வெங்கிட சாமப்பா நாகரத்தினத்தை கேவலமான கணிகையர் வாழ்க்கையில் ஈடுபடுத்த முயன்றார். அப்போது உயிரோடிருந்த புட்டலட்சுமி அதற்கு இணங்கவில்லை. எனவே தான் இறக்கும் போது தன் மகளை முனுசாமப்பாவிடம் ஒப்படைத்து விட்டார். முனுசாமப்பர் தந்தையும் தாயுமாய் நாகரத்தினத்தை வளர்த்தார். அத்தோடு மைசூர் அரண்மனையின் சங்கீத வித்வான் சேஷண்ணாவிடமும் அறிமுகம் செய்தார். 1893-ஆம் ஆண்டு மைசூர் இளவரசி ஜெயலட்சும மணியின் பூப்புனித நீராட்டு விழாவில் அரண்மனையில் நடனமாடும் வாய்ப்பினை சேஷண்ணா பெற்றுத் தந்தார்.

பாடகர்களும், நடிகையரும், நட்டுவனார்களும் நாகரத்தினத்தை ஒரு சேரப் புகழ்ந்தனர். அவரது கன்னட மொழித் திறமையும் சமூக இணைப்புக்குக் கை கொடுத்தது. அரண்மனையின் ஆதரவு வசதியான நல்வாழ்விற்கு வழிவகுத்துக் கொடுத்தது.

ஆயினும் பெண்களைக் கோவிலில் தேவதாசியாக்கும் பண்டைய மரபுக்கு 1895- ஆம் ஆண்டு தொடங்கி மைசூர் மன்னர் சாமராஜ உடையார் தடை விதித்து விட்டார். ஆனால் திவான் நரசரிராவ் மட்டும் தனிப்பட இசை கேட்கும் பாவனையில் நாகரத்தினம்மா வீட்டுக்கு வந்து போக இருந்த அவரது பழக்கம் தேவையற்ற வதந்திக்கும் திண்ணைப் பேச்சுக்கும் இடம் கொடுத்து விட்டது. திவான் அவர்களே அதை உணர்ந்து இசை நடனத்திற்கு ஏற்ற இடம் சென்னை என்று கூறி தனது நண்பரும் தொழில் அதிபருமாகிய ராஜரத்ன முதலியாருக்கு நாகரத்தினம்மாளை அறிமுகப்படுத்தி விட்டார்.

1903-ஆம் ஆண்டு முதல் தனது 25-வது வயதில் தொடங்கிய சென்னை அறிமுகமும், இசை நடனச் சூழலும் ராஜரத்தினம்மாளின் விருப்பத்திற்கு ஏற்றதாக அமைந்தது. இசை, நடனம், ஹரிகதை, மணிப்பிரவான சொற்பொழிவு ஆகியவற்றில் திறம் படைத்த நாகரத்தினத்திற்கு ஏராளமான சங்கீத சபாக்கள் வாய்ப்புக் கொடுத்தன. சுருதிலயம் மாறாமல் ராக ஆலாபனைக்கு முக்கியத்துவம் கொடுத்து உச்ச ஸ்தாயில் நாகரத்தினம்மா பாடும் போது ரசிகப் பெருமக்கள் மயங்கிக் கிடப்பர் என்கிறார் இசை நிபுணர் வாசுதேவாச்சர். யதுகுலம் காம்போதி ராகத்தில் சீறி ராம கீர்த்தனையை அவர் பாடாத மேடைகளே இல்லை. கோலார் நாகரத்தினம் என்னும் வேறொரு பாடகர் சென்னையில் இருந்ததால் மக்கள் இந்த நாகரத்தினத்தை வேறுப்படுத்திக் காட்டவே பெங்களூர் நாகரத்தினம் என்று இவரை அழைத்தனர்.

சங்கீத சபாக்களேயன்றி பிரபல வணிகர்களும், ஜமீன்களும், தொழிலதிபர்களும் தத்தம் பங்களாக்களுக்கு நாகரத்தினத்தை அழைத்து பாடச் செய்தனர். பட்டமும், பரிசுப்பொருள்களும், பணமும் குவிந்தன. 1905-ஆம் ஆண்டில் நாகரத்தினமே வருமான வரி கட்டத் தொடங்கிய முதல் பெண்மணி ஆவார். சிக்கனமானவர் என்றாலும்  இளமையின் வறுமையை எண்ணியோ என்னவோ விலை உயர்ந்த வைரத்தோடுகள், வைர மூக்குத்திகள், தங்கத்தாலான செயின்கள், வளையல்கள், கடகம், கால்மெட்டி இவற்றை அணிவதோடு, வங்கிகளில் ஏராளமான செல்வத்தை நிரந்தர வைப்பு நிதியாகச் சேமித்திருந்தார். பெங்களூரில் இருந்த வீட்டை விற்று சென்னையில் புதிய மாளிகை வாங்கிக் குடியேறி விட்டார். புதுமனை புகுவிழாவினை மிகவும் ஆடம்பரமாக நடத்தினார். தனது குருவாகிய பிடாரம் கிருஷ்ணபாவை மைசூரிலிருந்து அழைத்து தனது தாய் மொழியாகிய கன்னடத்தில் இசைக் கச்சேரி நடத்தச் செய்தார்.

1905-ஆம் ஆண்டிற்கு பின்னர் தான் இந்தியாவில் கிராமபோன் இசைத்தட்டுகள் வெளி வந்தன. ஜெர்மன் நாட்டு ஒலி இசைப் பொறியாளர்கள் (Sound Engineers) இந்தியாவுக்கு வந்து பாடல்களைப் பதிவு செய்து ஒலித்தட்டுகளாக (Gramaphone records) வெளியிட்டனர். எந்திரத்தின் முன்னர் பாடினால், நமது ஒலி மங்கிவிடும் என்று தமிழக இசைக்கலைஞர்கள் ஒலித்தட்டுக்குப் பாட அஞ்சினர் மற்றும் சிலர் தெய்வீகப் பாடல்களை எந்திரத்தில் ஏற்றி டீக்கடைகளிலும், முடிதிருத்தும் சலூன்களிலும் இசைத்தால் அவற்றின் புனிதத் தன்மைக்கு இழுக்கு என்று கூறி இசைத் தட்டுக்குப் பாட மறுத்து விட்டனர். நாகரத்தினமே தனது உறவினர் ஒருவரின் வற்புறுத்தலுக்குப் பின்னரே இசைத் தட்டுகளுக்கு பாடினார்.

மைசூர் மாநிலத்தைப் போன்று தேவதாசி மரபுமுறை தமிழ்நாட்டிலும் தடை செய்யப்பட்டதன் விளைவாக கோவில்களில் நடனமாடிய தேவதாசியர் நடனத்தை ஒதுக்கி சங்கீதக் கச்சேரிகளுக்கு மாறத் தொடங்கினர். பிராமணப் பெண்டிர் நடனக்கலைக்கு வராத காலம் அது. நாகரத்தினாவும் நடனத்தை ஒதுக்கி சங்கீதக் கச்சேரிகள் மட்டுமன்றி வடமொழி கலந்த தமிழிலும் இசையிலும் உபநயனம் செய்தார். உட்கார்ந்தே செய்யும் இந்த உபநயனத்தால் பெங்களூர் நாகரத்தினம்மாவின் உடல் சற்று பருமனாகி விட்டது.

திருச்சி, தஞ்சாவூர், வெங்கடகிரி, நெல்லூர் போன்ற தமிழக ஆந்திரப்பகுதிகளில் ஏராளமான கச்சேரிகள் செய்துள்ளார். சென்னை நகர இசைநிகழ்ச்சிகளுக்குச் சென்று வர ஒரு குதிரை வண்டியை சொந்தமாக வைத்திருந்தார். வண்டியை விட்டு இறங்கி மண்டபத்துக்குள் செல்லும் போது வெள்ளிக் கூஜாவில் பாலுடன் ஒரு பணிப்பெண்ணும், வென்னீருக்கு  இன்னொருத்தியுமாக முன்னால் செல்வர். வைர நகைகள் பளிச்சிட நாகரத்தினம்மாள் நுழையும் போது பின்னாலேயே விசிறியோடு ஒரு பெண்ணும் வருவாள். தனது கச்சேரிகளை நாகரத்தினம்மாள்  முன்று மணி நேரத்திற்குக் குறையாது நிகழ்த்துவர்.

அதிகமாக உண்ணுவதும் பெருந்தீனி தின்னும் பழக்கமும் இல்லை. படுக்கைக்குப் போகும் நேரத்திற்கு இரண்டு மணிகள் முன்னதாகவே பாதாம் பருப்பு போட்டு முறுகக் காய்ச்சிய பாலில் தேன் கலந்து அருந்துவார். அமாவாசை, தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் தெருவின் வழிப்போவோர்க்கு மோர் பானம், பழங்களைக் கொடுக்க செய்வார். ஏழைக்குழந்தைகள் மற்றும் பெண்களின் படிப்புக்கும் உதவி கேட்டு வரும் அநாதைகளுக்கும் தேவை அறிந்து பணம் கொடுப்பார்.

பேரும் புகழும் பெற்றிருந்த நாகரத்தினம்மாவுக்கு மாலை நேரங்களின் தனிமை ஒரு விரக்தியை உண்டாக்கி விட்டது. தன்னோடு நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த துரைசானி அம்மாவின் ஒரு பெண் குழந்தையைத் தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். அலமேலு மங்கை என்னும் அந்தப் பெண் தான் நாகரத்தினம்மா 1952- ஆம் ஆண்டு காலமாகின்ற வரையிலும் அவருடன் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டிருந்தவர்.

தெலுங்கு மொழியில் புலமை பெற்றிருந்த நாகரத்தினம்மா சுவாமி தியாகையரின் கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். சுவாமியின் சமாதி திருவையாற்றில் பொலிவிழந்து கிடப்பதைக் கேள்வியுற்று அதன் தூய்மைக்கும் வளர்ச்சிக்கும் தனது வருமானத்தைச் செலவிட்டார். சமாதியின் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட்டு இருவேறு பிரிவினர் தனித்தனியே ஆராதனை விழா நடத்தினர். இதனைக் கண்ணுற்ற நாகரத்தினம்மா சமாதி இருந்த இடத்தையே விலைக்கு வாங்கி ஒரு கோவிலாகவே அதனைப் புதிதாகக் கட்டினார். தியாகையரின் சிலையினையும் அங்கு நிறுவினார். 1921- ஆம் ஆண்டு முதல் அந்த ஆலயத்தில் அன்றாட வழிபாடு செய்வதற்கும் அர்ச்சகர்களை நியமித்தார்.

இப்படித் தனது உழைப்பினையும், வருமானத்தின் பெரும்பகுதியினையும் சமாதிக்கு செலவிட்ட நாகரத்தினம்மா அவர்களை தியாகையரின் ஆராதனை விழாவில் பாடுவதற்கு அனுமதிக்கவில்லை. அந்த மேடையில் பெண்கள் பாடுவதையே தடை செய்திருந்த போது ஒரு தேவதாசியை எப்படி அனுமதிப்பர்? மேடையில் பாடாவிட்டாலும் சன்னதியில் காலட்சேபம் செய்கிறேன் என்னும் அவரது வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது.

தனது ஆதரவாளர்களாகிய பெண்களைச் சேர்த்துக் கொண்டு சமாதியின் பின்புறம் நாகரத்தினம்மா வழிபாடு செய்யத் தொடங்கினார். பல ஆண்டுகள் இந்த நிலைமை நீடித்தது. இத்தகைய பாகுபாடெல்லாம் நீங்கி பெண்களும் ஆராதனை விழாவில் கலந்து கொண்டு பாடலாம் என்கிற நிலையை 1941- ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இமயம் முதல் குமரி வரை கர்நாடக சங்கீதப் பாடகராக உள்ள ஏராளமான ஆடவரும் மகளிரும் வரிசை வரிசையாக அமர்ந்து குறிப்பிட்ட பாடலை காவிரியாற்றின் கரையில் சமாதியில் ஆராதனை விழாவில் அமர்ந்து பாடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். இறைவனை இசையாகவே காணும் இந்த தியாகையர் ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாநகருக்கு அருகில் திருவையாறு என்னும் பேரூதில் ஜனவரி மாதத்தில் ஐந்து நாட்கள் கொண்டாடப் பெறுவது இந்திய நாடெங்கிலும் அறிந்த செய்தியாகி விட்டது.

பாட்டும் நாட்டியமும் அன்றி, பாடல்களை எழுதுவதிலும், அவற்றின் பதிப்புப் பணியிலும் சிறந்து விளங்கினார். முத்துப் பழனி என்னும் தேவதாசி ராதிகா சந்தாவனம் எனும் பாடல் தெலுங்கில் எழுதி இருந்தார். அதனைப் பதிப்பித்த பைதிபாடி வெங்கடநரசு (1887) அந்த நூலின் முதல் பகுதி, பெண்கள் அதிலும் தேவதாசிகள் பற்றிய விரசமான செய்திகளை உள்ளடக்கியது என்று தனது பதிப்பில் அவற்றை நீக்கி விட்டார். அந்நூலின் பனை ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து எந்த பகுதியினையும் நீக்கி விடாமல், அத்தெலுங்கு நூலை நாகரத்தினம்மா மீண்டும் பதிப்பித்து வெளியிட்டார். அந்நூலுக்கு முன்னுரை எழுதிய கந்துகூரி வீரேசலிங்கம் கூட பெண்கள் முன்னேற்றம், பேசும் சீர்திருத்தவாதி ஆயினும் முன்னமே நீக்கப்பட்ட பகுதிகள் பெண்கள் படிப்பதற்கு உடையன அல்ல என்றே குறிப்பிட்டார்.

வைஜயந்தி விலாசம் எனும் நூலிலும் ஏராளமான காமச்சுவை மலிந்த பகுதிகள் உள்ளன. அவற்றை நீக்காமல் அந்த நூலை வரவேற்கிற வீரேசலிங்கம் முத்துப்பழனி எழுதிய நூலில் மட்டும் ஏன் குற்றம் காண்கிறார். நடுநிலை தவறிய அவரது கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வாதிட்டார் நாகரத்தினம்.

நூலின் எந்தப் பகுதியினையும் நீக்காமல் நாகரத்தினமே பதிப்பித்து வெளியிட்ட ராதிகா சந்தாவனம் எனப் பெயரில் முத்துப்பழனியின் நூல் பெருத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ஒரு தெலுங்கு மாத இதழ் தனது விமர்சனத்தில் ஒரு தேவதாசி எழுதிய விரசமான நூலை இன்னொரு தேவதாசி வெளியிடுகிறார் என்று கூட கேலி செய்தது. இதை விட காமச்சுவை மலிந்த நூல்கள் வெளி வந்திருக்கும் போது இந்த நூலை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. ஆயினும் அன்றைய அரசு இந்நூலைத் தடை செய்து விட்டது. 1947- ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர், அப்போதைய முதலமைச்சர் தங்கு தூரி பிரகாசம் இந்த நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். தடைகள் பல இருந்தாலும், இறுதியில் தனக்கே வெற்றி என்று நாகரத்தினம்மா மகிழ்ந்தார். ஒரு தேவதாசியின் மகளாகப் பிறந்து, வாழ்க்கையின் மேடுப் பள்ளங்களைக் கடந்து, பன்மொழிப்புலமை பெற்று, இசை நாடகத் திறமையினால் ஏராளமான பொருள் ஈட்டி, இறை பணி செய்து தியாகையரின் சமாதியை உயிர்ப்பித்த பெங்களூர் நாகரத்தினம்மாள் 1952- ஆம் ஆண்டு தனது 74-ஆவது வயதில் காலமானார். திருவையாற்றில் தியாகையரின் சமாதிக்கு அருகில் நாகரத்தினம்மாவுக்கு ஒரு நினைவிடமும் எழுப்பப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *