– முனைவர் முல்லைத்தமிழ்
விருதி வர்மம்
சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான மணிபந்த வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் காலில் உள்ள வர்மமான விருதிவர்மம் பற்றி அறிவோம்.
கால் பெருவிரல் கவளியின் ஒரு இறைக்கு மேல் கதிரென இரண்டு நரம்புகள் (Medial plantar nerve) பிரிந்து மாறலாகி செல்லும். அதன் நடுவில் அமைந்ததே விருதிவர்மமாகும். இதனை விற்திவர்மம் எனவும் அழைப்பர்.
“நவிலுகின்ற பெருவிரலிறைக்கு மேலாம்
ஒன்றான விற்தியென்ற காலமாகும்”.
– வர்மக் கண்ணாடி
“குளறுகின்ற கவளியின் ஒன்றரையிறைக்குள்
விருதியென்ற காலமாகும்”.
– வர்ம குருநூல்
என குறிப்பிடுகிறது.
ஆச்சப்பா யின்னுமொரு காலம் கேளு
அரிதான விற்த்திவற்மம் கொண்டபேர்க்கு
நிச்சப்பா களைப்பாகும் சன்னி சீதம்
நிலையில்லா தளர்ச்சையோடு மயக்கமாகும்
போச்சப்பா சறுவாங்கம் தான் தடவிப்போடு
பொத்தென்று உள்ளுக்கு புகட்டிக்கொள்ளும்
ஏச்சப்பா காலமது விற்த்தியாகிவிடும்
எழும்பிவிடுமென்று உலகிலிசைந்திட்டானே.
– வர்ம கருவிநூல்-500
“குளறுகின்ற கவளியின் ஒன்றரையிறைக்குள்
கூர் விருதி கதிரென யீர்நரம்பின் மாறல்
களரும் அதின் நடுவே விசை பதித்திட்டாலோ
திடீரெனவே சன்னிவெட்டு மயக்கம்வேர்வை
அனலேறும் அனேக நோய்களாகுமதில்
வெட்டும்சன்னி நில்லென்றிருத்த நிற்கும்
சுழல் கதிரின் உள் தாவி சார்பாய் தொடுத்து
நிற்கும் பெருவிரலின் மொளிக்குள் தானே”.
– வர்ம குருநூல்
“மொளி சார்பின் குமிள் வழிமுன் நரம்பினூடே
முறிவேற்றால் காயசன்னி வெட்டு கோச்சல்
விழிசொருகும் எதிர்பக்கம் விளங்கிடாது
விரல்கைகால் கோட்டியே திருக்கிக்கொள்ளும்
பழியான சுழலி வரும் விருதி நேர் சார்
பதித்திருத்த மயங்கும் பின் பாதச்சக்கரம்
சுழித்திருத்தி நெல்லிடை மேல் கீழதாக
சின்முத்திரை பதியுமிருக்கும் உயிராம் பாரு”.
– வர்ம குருநூல்
“பாரென்ற விருதிக்குற்ற காயம் படருமுன்னே
இளக்குதற்கு பகரம்சொல்வேன் பதம்
பாரென்ற பாதச்சக்கரமுள்ளங்கால் பதித்துமெள்ளக்
குதிகால்வரை கொண்டனுக்கி தரைபதிய நடையிருத்தி
வேரென்ற சுழியடங்கல் குழியடங்கல் மூன்றறிந்துணர்வூட்டி
உள்கறக்கி உச்சிதனில் அமத்தல் செய்தடக்கமாக
பாரென்ற முன்னோர் சொல் பலிதமாகப் பதமாக
மருந்து வகையறிந்து செய்தாலுயிர் பெருகும் பாரே”.
– வர்ம குருநூல்
விருதி என்னும் வன்மமிஃது விளங்குதலம்
பருதியெனும் கவளியினுள்குழி மேலுளதாம்
அறுதியிது கொண்டிடிலோ தளர்ச்சையாகும்
திறுதியெனும்வலியதனால் வியர்க்கும்பாரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
விருதிவர்மம் கால்கவளியின் குழிவின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால் தளர்ச்சையுண்டாகும், வேகமாய் வலிமிஞ்சி உடலும் வியர்க்கும் என்பதாம்.
பார்த்திடும் சரமதனால் காலமாச்சிஃது
கோர்த்திடும் விசமதனால் காயம்மெத்தக்
கூர்த்திடும் விதமதானால் சன்னிசீதம்பனி
ஆர்த்திடும் அளவிதனால் விருதியாச்சே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வர்மம் சர ஓட்டத்திற்கேற்ப சிலநேரங்களில் காலம் எனும் தன்மையை அடைகிறது. இக்கால ஓட்டத்தின்போது விசஇயக்கமும் இவ்விடத்தில் சேரும்போது தாக்கம் கொண்டால் அதன் பாதிப்பும் அதிகமாக இருக்கும். அவ்வாறு உண்டாகும் பாதிப்பு தாக்கத்தின் தன்மைக்கேற்ப சன்னி, குளிர், பனி போன்றவைகளையும் உருவாக்கி குறிகுணங்கள் விரிவடைந்து கொண்டே செல்வதால் விருதிவர்மம் என்று அழைக்கப்படுகிறது.
விருதிவன்மம் தளர்ச்சையொடுதலைவலிக்கும்
மாருதி போலடிவயிற்றில் கலக்கமாகும் குளிர்
சேர்விதிபோல் செயல் நடுக்கம் மயக்கமாகும்
யார்விதிக்கும் நில்லாது குறிகள் மிஞ்சும்.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
விருதிவர்மம் கொண்டால் தளர்ச்சையுடன் தலைவலி உண்டாகும். அடிவயிற்றில் கலக்கமும், குளிருடன் நடுக்கமும் மயக்கமுமுண்டாகி யாருடைய கட்டுப்பாட்டிற்கும் நில்லாது குறிகுணங்கள் அதிகரித்துக்கொண்டே போகும் என்பதாம்.
பாரதனில் பலபலவாய் காட்டும் குறி
படபடத்து விறுவிறுத்துத்தளருமேனி
வேரறுந்தமரம்போலேவெடவெடத்து
விதவித குறிகுணங்களாமென்னே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மேலும் பலபல குறிகுணங்களைக் காட்டி படபடப்புடன் விறுவிறுப்புமுண்டாகி உடல் தளரும். வேரற்ற மரம்போல சாய்ந்து இன்னும் பலவிதமான குறிகுணங்களையும் காட்டும் என்பதாம்.
என்னறவே கைகால்கள் கோட்டிக்கொளும்
குறிப்புடனே நீர்பாச்சல் நடைதளரும்மேனி
படபடத்தச்சமுடன் பரிதவிக்கும் தாகம்
பரபரப்பாய் விழிநோக்கும் விதமிதாமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
மேலும் கைகால்கள் கோட்டி மூக்கில் நீர் வடிதலும் உண்டாகி நடை தளரும். படபடப்புடன் அச்சமுண்டாகி தாகம் ஏற்படும். பரபரப்பாய் கண்கள் விழித்து நோக்கும் என்பதாம்.
தணலேறி நின்றாப்போல் காயும் கடன்
அனலேறி அக்கினியால் அழலுமங்கே
அடுத்தடுத்துமயக்கமுடன்காட்சிமங்கும்
கடமையிதுஅடங்கலினால் ஆச்சுபாரே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
தீயில் ஏறி நிற்பதுபோல் உடல் சூடாகி காயும். உடல் முழுவதும் அக்கினியால் எரிவதுபோல் சூடாகி அடிக்கடி மயக்கம் தோன்றி கண்களின் பார்வையும் மங்கும். இதை தீர்ப்பதற்கு அடங்கல்களைத் தூண்டச் செய்வது வர்மாணியின் கடமையாகும்.
பார்க்கவுமே சர்வாங்கம்பதுக்கிப்போடு
ஆர்க்குமே அறியாமல் கூட்டடங்கல்
குறிப்புடனேகால்குழியடங்கல்செய்ய
குணமாறி நலமாகும் கண்டு பாரே.
விளக்கம்
முதலில் சர்வாங்க அடங்கலைத் தூண்டி, பின்னர் பிறர் அறியாவண்ணம் கூட்டடங்கல் செய்து கால்குழியடங்கலையும் தூண்டிவிட நலமுண்டாகும் என்பதாம்.
பாரென்ற வன்மமிஃது பழிசெய்யும் ஈடுமாகும்
பக்குவமாய் சரவிசத்தில்கொண்டாலோகடினம்
அரவுதச்ச விசம் போலே தரிப்பெடுக்குமதால்
தரவுகளைத்தேடாமல் துரிதமுடன்சரிசெய்யே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வர்மத்தில் தாக்கம்கொண்டால் பல பின்விளைவுகளை உண்டாக்கும். சரநிலையில் இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால் கடினமாகும். அதாவது, விடமுள் குத்திய விசம்போல தரிப்புண்டாக்கும். அதனால் வேறு குளப்பமின்றி உடனடியாக பரிகாரம் செய்யவேண்டும் என்பதாம்.
செய்யுறவாய் செய்துவிடுமருந்து பாகம்
செயலாகச் செய்திடிலோகுணங்கள்மெத்த
அயலார்கள் அறியாது செய்யாவிட்டால்
அதிகடினம் அடிக்கடிக்கு வலிப்புமாகும்.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
இவ்வர்மத்திற்கு உடனே மருந்துபாகம் முறையாகவும் சரியாகவும் பிறர் அறியாவண்ணம் செய்துவிட்டால் நல்ல குணமுண்டாகும். மருந்து செய்யாமல் விட்டுவிடில் மிகுந்த சிரமமுண்டாகி அடிக்கடி வலிப்பு உண்டாகும்.
வலிப்புறும் வன்மமுறுத்தும் வலிப்பும்
தரிப்புறும் வன்மமிஃது தலைவலியும்
தளராது போக்கிவிடுமறிந்துசெய்தால்
தாய்மையுறும் சன்னிசீதமும் போமே.
– வர்ம யோகச்சூத்திரம்
விளக்கம்
தாக்கம் கொண்டால் வலிப்பை உண்டாக்கும் இவ்வர்மம் அடிப்பட்டு வரும் வலிப்பையும் போக்கும். தரிப்பை உண்டாக்கும் இவ்வர்மம் தலைவலியை தளராமல் போக்கும், கருப்பைநோய்களை மாற்றி தாய்மையடையச் செய்யும், சன்னி சீதமும் போக்கும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.
இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டால், உடல் முழுவதும் அக்கினிபோல் அழலேறி, காயஜன்னி வந்து வெட்டு உண்டாகும். மயக்கமாகி வியர்வையுடன் பலவித குணங்களும் குறிகளும் தோன்றும். இந்நரம்பு முறிந்தால் காயசன்னி, வெட்டு, கோச்சல் உண்டாகி, கண் மயங்கி தாழ்ந்துவிடும். காலின் மறுபுறம் செயல்படாது. கால் களைத்து வீக்கம் உண்டாகும். விரல், கை, கால் இவைகள் வலியினால் இறுகி வலித்துக்கூட்டும். தொடர்ந்து ஜன்னிபோல் வெட்டுண்டாகும். சரநிலை மற்றும் விசநிலைகளில் இவ்வர்மத்தில் பாதிப்பு ஏற்படுமானால் படபடப்புடன் தளர்ச்சை உண்டாகி மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் இவ்வர்மத்தை இளக்குவதற்கு உள்தொடையிலிருந்து விரல் பதித்து தடவி, கீழ்நோக்கி இறக்கி கால்குழி அடங்கல் வழியே பதித்திருத்தி, அகக்கரண்டைக்கண் வர்மத்தில் நிறுத்தவேண்டும். அதுபோலவே முதுகு புட்டியிலிருந்து நாங்கணப்பொருத்தில் பதித்து, பின்தொடை வழியே கீழ்நோக்கி தடவி, புறக்கரண்டையில் நிறுத்தவும். மேல்தொடை, அடித்தொடை இரண்டும் ஒருசேர கீழ்நோக்கி தடவி, குதிகால் மற்றும் கால்குழச்சி வர்மத்தில் நிறுத்தவும். பின்னர் மேலிருந்து கீழாக இருபுறமும் கையணைத்து சுழற்றி தடவி, கால் விரல்களை இழுத்து நீட்டிவிடவும். பாதிக்கப்பட்ட இடத்தில் அழுத்தவோ, விரல் பதிக்கவோ கூடாது. இவ்வாறு தடவிய பின்னர், பாதச்சக்கர அடங்கல், உள்ளங்கால் அடங்கல், உள்ளங்கை அடங்கல், குதிகால் அடங்கல், சுழியடங்கல், கால்மடக்கு அடங்கல், பேன்குழி அடங்கல், குழியடங்கல்களையும் தூண்டி, உச்சியில் அமத்தல் செய்துவிட சுகம் வரும். இதற்கு சிறந்த அகமருந்துகளும், புறமருந்துகளாக பற்று, ஒற்றல், பாளம், எண்ணெய் தாரை செய்வதும் சிறந்த பயனை தரும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வர்ம பாதிப்படைந்தவர்களுக்கு உடல் சூடேறி காந்தல், கால் கடுத்து உளைதல், காயசன்னி, அடிக்கடி கால்களில் தரிப்பு உளைச்சல், காரணமின்றி சுழுக்கிக்கொள்ளல், அடிக்கடி கோபம், மனக்குழப்பம், மூச்சிரைப்பு போன்ற பின்விளைவுகள் உண்டாக வாய்ப்புண்டு என வர்ம நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவ்வர்மத்தை கால் பெருவிரல், கைபெருவிரல், சூண்டுவிரல், நடுவிரல், மொழி, உள்ளங்கை போன்றவைகளாலான தூண்டுமுறை நுட்பங்களை பயன்படுத்தி தூண்டிவர, மயக்கம் அதிகச்சூடு, கணுக்கால் வலி, கால் தளர்வு, ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தைகளுக்கு வரும் வலிப்பு, தூக்கமின்மை, காக்கைவலி, தலைச்சுற்று போன்ற நோய்கள் குணமாகும் என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றது.
Leave a Reply