முடிச்சுகளை அவிழ்த்துவிடு

  • By Magazine
  • |

– ஓஷோ

எதையும் தெளிவாக பார்த்து பழகு. குழப்பத்தை கவனித்துப் பார். நன்றாக பார். வேடிக்கை பார்பவனாக இரு. உன்னை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதே. உனக்கும் உன் மனதுக்குமிடையே ஒரு தூரத்தை படைத்து வை. இந்தத் தூரத்தை படைக்க நீ ஒரு சந்நியாசியாக வேண்டும். உன் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறை இந்த இடைவெளி உருவாக்கும். முடிச்சுகளை அவிழ்த்து விடு. எப்படி முடிச்சுகளை அவிழ்ப்பது? அவிழ்ப்பது என்று ஆரம்பித்து விட்டால் சிக்கல் அதிகமாகித்தான் போகும். அவிழ்ப்பதற்கான ஒரே வழி இடைவெளி ஏற்படுத்திக் கொள்வது தான்.

பிறர் ஏதாவது சங்கடத்தில் இருந்தால் நீ பிரமாதமான யோசனைகள் சொல்கிறாய். இதை நீ கவனித்திருக்கலாம் அல்லது கவனிக்காமலும் போயிருக்கலாம். அதே சங்கடம் உனக்கு வரும் போது நீ அவ்வளவு புத்திசாலியாக இருப்பதில்லை. ஏன்? ஏன் இது இப்படி நடக்கிறது? ஏன் உன்னுடைய புத்திசாலித்தனம் சரியாக வேலை செய்யாமல் போகிறது? பிறர் சங்கடத்தில் இருக்கும் போது அவ்வளவு அருமையாக வேலை செய்த அதே புத்திசாலித்தனம் தான். ஏனென்றால் அதில் இடைவெளி இருந்தது.

புதிய நடிகை ஒருத்தி மேடையில் நடித்துக் கொண்டிருந்தாள். அந்த நடிகை அந்த பாத்திரத்தோடு அப்படியே ஒன்றிப் போய்விட்டாள். தான் ஒரு நடிகை என்பதை அறவே மறந்து விட்டாள். அழுகிறாள், அலறுகிறாள், கண்களில் நீர் பொங்கிப் பொங்கிப் பாய்கிறது, நிலைகுலைந்து போகிறாள். காட்சிக்கு நடுவே அவளை மேடையிலிருந்து இழுத்துக் கொண்டு போக வேண்டி வருகிறது. தான் ஒரு நடிகை என்பதும் ஒரு பாத்திரத்திற்காக நடித்து கொண்டிருக்கிறாள் என்பதும் அவளுக்கு சுத்தமாக மறந்து போய்விட்டது. குழம்பிப் போனாள். அதுவே தன்னுடைய வாழ்க்கை என்று எடுத்து கொண்டாள். சிலர் சொன்னார்கள் நீ அழும் போது பார்க்கிறவர்கள் அழுவதில்லை. நீ நடிக்க வேண்டும். ஆனால் பாத்திரத்துக்கும் உனக்கும் இடையே ஓர் இடைவெளியைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தோடு உன்னை அடையாளப்படுத்திக் கொள்ள கூடாது.

இதுதான் உன் வாழ்வுக்கும் சரியான ஆலோசனையாக இருக்கும். இந்த வாழ்க்கை முழுக்க முழுக்க ஒரு பெரிய நாடகம், அவ்வளவுதான். மேடை பிரமாண்டமானது. ஆனாலும் இது நாடகம் தான். இடைவெளியைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். என்ன நடக்கிறதோ அது நாடகத்தில் நடக்கிறது. நடப்பதற்கு நீ ஒரு சாட்சி. நீ அதனுடன் ஐக்கியமாகி விடக் கூடாது. அப்படி ஐக்கியமாகிப் போனால் முடிச்சுகளில் மாட்டிக் கொள்கிறாய். சம்பந்தப்படாமல் இருந்துவிட்டால் சற்றே தூரத்திலிருந்து அதை பார்க்க முடியும். உன்னுடைய மனம் குழப்பமடையாது. மனம் தெளிவாக இருக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *