வெ. சின்னசாமி
தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நமது நாட்டில் நாற்பது வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? தோல்வி உன்னைத் துரத்துகின்றது என்றால், நீ வெற்றியை நெருங்குகின்றாய் என்று அர்த்தம்.
தோல்வி என்பது வெற்றிக்கு எதிர்திசை அல்ல. வெற்றிக் கதவை திறப்பதற்கு முன்பு நீங்கள் தட்ட வேண்டிய முதல் கதவே அதுதான். தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும். ஏணியாக நினைத்தால் உயர்த்தும் என்கிறார் எழுத்தாளர் வீ.ஸ.காண்டேகர் உண்மையில் தோல்வியைத் தாங்குவதற்குத்தான் வீரம் வேண்டும். விழுவது எழுவதற்காகத்தான் என்ற வைராக்கியம் கொண்டோர் தான் சாதிக்க முடியும்.
தோல்வி ஒரு கற்கும் கருவி. தோல்வி வெற்றியின் படிக்கட்டு. தோல்விக்கும் வெற்றிக்குமிடையே உள்ள தூரம் என்பது மேலும் ஒரு முயற்சி மட்டுமே. உங்கள் விடாமுயற்சி உறுதியாக தொடர்ந்தால் தோல்வியும் ஒருநாள் உங்களிடம் தோற்கும் என்பதே உண்மை.
கடந்தகால தோல்வி அனுபவங்கள் உங்களுக்கு மிகச்சிறந்த ஆசானாக விளங்கும். உங்களை சிறப்பாக சீர்திருத்தும். இப்படித்தான் தோல்வியை நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, தோல்வியை மனத்தளர்வுக்கான ஒன்றாக பார்த்தல் கூடாது. தோல்வியை இறுதி முடிவாக ஒருபோதும் கொள்ளவே கூடாது.
வெற்றி என்பது தோல்வியின் மறுமுனையில் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். சிங்கங்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சிறந்த குணம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் முழுமனதுடனும் முழுமுயற்சியுடனும் செய்ய வேண்டும் என்பதே என்கிறார் சாணக்கியர்.
தோல்வித் துரத்திக் கொண்டே தான் இருக்கும் அப்போதுதான் வெற்றி எனும் கரையை உங்களால் அடைய முடியும். தோல்வி என்பது வெற்றிப் பயணத்திற்கு வழிகாட்டும் நெடுஞ்சாலை என்கிறார் கவிஞர் கீட்ஸ். பாதை தொடர்ந்து செல்வதைக் காட்டும் மைல்கல் தான் வெற்றி. நீங்கள் வந்துள்ளது முட்டுச்சந்து, மாற்று வழியின் பயணம் மேற்கொள்ளுங்கள் என்னும் பலகை தான் தோல்வி. மாற்று வழியை மேற்கொள்ளுங்கள் வெற்றி உங்களுக்குத் தான்.
எடுத்தவுடன் வெற்றி அடைவதை விட ஒருமுறை தோல்வி அடைவது நம் ஆற்றலையும், உள்ள உறுதியையும் மேம்படுத்தும் அற்புத அனுபவம் அல்லவா?
நீங்கள் ஈடுபாடு காட்டாத எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற முடியாது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் விஷயத்தில் உங்களுக்கு தோல்வி என்பதே கிடையாது என்பார் அப்துல்கலாம். தோல்விகள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஈடாக உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வெற்றியை அடைய முடியும்.
வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு
தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்கு!
– கவிஞர் வைரமுத்து
Leave a Reply