பூ.வ.தமிழ்க்கனல்
2026 தேர்தலில் தமிழ்நாட்டு அரசு ஆட்சியில் யாருமே எதிர்பார்க்காத ஒரு மாற்றம் ஏற்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தங்கள் பிடிக்குள் மாறி மாறி வைத்துக் கொண்டிருந்த இரு திராவிட கட்சிகளுக்கிடையில் ஒரு புதிய கட்சி தோன்றி, ஒரு சில ஆண்டுகளுக்குள் இரு கூட்டணிகளையும் தனியாக நின்று வென்றிருக்கிறது.
தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையில் இன்னொரு புதியகட்சி தோன்றி வளர்ந்து விடக்கூடாது என்று இரு கட்சிகளுமே ஒருமித்த கருத்துடன் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இருந்து வந்தன. இதனால் இவ்விரண்டில் எது ஆட்சியைப் பெற்றாலும் தனி வல்லாண்மைப் போக்கு தலைக்கேறிவிடும். மக்களுக்கும் மாற்றுத்தேர்வுக்கு வழியில்லாமல் இவ்விரண்டில் ஒன்றையே மாறி மாறித் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு மட்டுமே தேர்தலில் கிடைத்தது.
அதற்கு மேலும், இரு கட்சி ஆட்சியிலுமே கொள்கை ஏதும் இல்லாமல், கொள்ளையடிக்கும் அண்டைமொழி அரம்பர்க் கூட்டம் ஊடுருவி அதிகாரமுள்ள அமைச்சர் பதவிகளைப் பிடித்துக் கொண்டதுடன், தனிப்பட்ட முறையில் பெரிய பெரிய நிறுவனங்களைத் தோற்றுவித்துப் பணம் ஈட்டி,பெருஞ்செல்வர் பட்டியலில் இடம் பெறலாயினர்.
இவற்றிற்கெல்லாம் தீர்வாகத் தான் 2026 தேர்தல் முடிவு அமைந்தது. கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகள் கூட நிறைவாகாத நிலையில் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நடிகர் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பே அவரை வரவொட்டாமல், என்னென்ன தடைகள் உண்டோ, அத்தனையையும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்துப் பார்த்தனர். அவையெல்லாம் எதிர் விளைவுகளாகத் தான் போயின. ‘தற்குறி’ என்று அவருக்குப் பட்டப் பெயர் சூட்டி இழிவுபடுத்திப் பார்த்தனர். ஆனால், அத் ‘தற்குறி’எனச் சொல்லப்பட்டவரிடமே தோல்வி காணும் அவலந்தான் நிகழ்ந்தது.
பெரியார், அண்ணா, நாவலர், பேராசிரியர், கருணாநிதி, ம.கோ.இரா. என மக்கள் நலஞ்சார்ந்த தலைவர்கள் பலரும் இருந்து வளர்த்த பகுத்தறிவு வழியிலான திராவிட இயக்கங்கள் இரண்டுமே, அரசியல் முதிர்ச்சி அறவே இல்லாத, திரைப்படக் சுவைஞர் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நடிகர் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட, சரியான கட்டமைப்பு கூட அமையப் பெறாத ஒரு கட்சியால் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆட்சி மக்களுக்குச் செய்த அருவினை (சாதனை)கள் என்னென்ன என்று தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டதை இங்கு பதிவிட்டால், இந்த இதழின் பக்கங்கள் போதாது. மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பொருள் என அளித்துள்ளதைத் தேர்தல் அறிக்கைகள் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. மேலும், வெற்றிபெற்றால் 8,000 உருபாவிற்குப் பற்றுச் சீட்டு என்றெல்லாம் தேர்தல் உறுதிப் பட்டியலில் உரத்து கூறப்பட்டன. இரு கட்சிகளும் மக்களின் கைகளில் பணத்தையும் திணித்தன என ஊடகங்களும் புலனாய்வுத்துறை அறிக்கைகளும் சுட்டுகின்றன. மக்கள் பணத்தை இரு பக்கமும் பெற்றுக் கொண்டு, அதற்கும் மீறிவெற்றிக் கழகத்திற்கு வெற்றியைக் கொடுத்துள்ளனர். இவற்றிற்கிடையே ஒருநல்ல செய்தி என்னவென்றால் இந்தத் தேர்தலில் பணநாயகம் தோற்றுப் போயிருக்கிறது என்பது தான்.
அரசியலாளர்களும் அதிகாரிகளும் இணைந்து செய்த ஊழல் பெருக்கமா, அளவிறந்த கையூட்டுகளா, மணற்கொள்ளையா, மலையேகொள்ளையா, காடழிப்பா, இயற்கைவளச் சுரண்டலா, இரு கட்சியினரிடமும் இருந்துவரும் ‘சாராய’ ஆலைகளா, உலக வங்கிகளில் அளவிறந்த கடன் வாங்கி மக்களிடமே இலவகம், உரிமைத் தொகை என்று இரைத்து விட்டு, தங்கள் நலன்களைப் பெருக்கிக் கொண்டதா ஆகியவற்றில் எதைக் கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கும் மக்கள் தோல்வியைப் பரிசாக வழங்கினர் என்று தெரியவில்லை.
இது போன்ற செய்திகளைப் பாதிக்கும் பாதியாவது ஊடகங்கள் மக்களிடம் சென்று சேர்த்துக் கொண்டு தான் உள்ளன. ஊடகத் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர் முதல் வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞா;கள் வரை இந்த வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக இருக்கிறார்கள். தானி ஓட்டுநர்கள் முதல் எளிய மக்கள் வரை நடைமுறை அரசியலைப் புரிந்து தான் வைத்துள்ளனர்.
இப்போது முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறுகிறார், ‘நான் விசயைக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்று. ஐயா, நீங்கள் விசயை அல்ல, மக்களையே குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்கள்.
ஒரு குடும்பத் தலைவர் தன் குடும்பத்தைக் காட்டி ஊர் முழுக்கக் கடன் வாங்கி, கடன் சுமையை ஏதுமறியாக் குழந்தைகள் மேல் ஏற்றி விட்டு குடும்பத்தைக் காப்பாற்றினார் என்றால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதுபோல்தான் இந்த ஆட்சியில் உலக வைப்பகங்களில் அளவிறந்த கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இலவகங்களும் உரிமைத் தொகைகளும் வாரி வாரி வழங்கப்பட்டன. அவையும் இந்த ஆட்சியில் தொடர்கின்றன. இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நன்மை தீமைகளைப் பொருளியல் வல்லுநர்கள் தாம் கூறவேண்டும்.
யார் ஆட்சிக்கு வந்தாலும், என்ன செய்ய வேண்டும் என்பதை நம் கோணத்தில் பலவற்றைக் கூறியிருக்கிறோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பள்ளிகளையும் அரசு மருத்துவமனைகளையும் தரம் உயர்த்தம் செய்தாலே நாட்டின் பாதி முன்னேற்றம் எட்டப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசியலாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துக் குழந்தைகளைக் கட்டாயம் அரசுப் பள்ளிகளில் தாம் சேர்க்கவேண்டும் என வலியுறுத்தினாலே, அவற்றின் தரம் உயர்ந்துவிடும். அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசியலாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனையில் மட்டும் தான் மருத்துவம் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்போது தான் அவற்றின் தரம் உயரும்.
தமிழை வைத்துப் பெற்றஆட்சிகள் தமிழைப் புறக்கணிக்கின்றன. ‘வந்தவர் வஞ்சகர் தமிழால் பிழைத்தார். வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்’ என்று பாவேந்தர் ஆரியரை நோக்கிப் பாடியபாடல் வரிகளுக்குத் ‘திராவிடமாடல்’ கட்சிகளும் இலக்காகி விட்டிருக்கக் கூடாது. தமிழை வைத்துத் தான் இந்தி உட்பட அயல்மொழிகளை விரட்ட முடியும். ஆங்கிலத்தை வைத்து இந்தியை விரட்டும் நடைமுறையில் தமிழும் தாக்கமுற வாய்ப்புள்ளது.
இம்மாநிலத்தில் படித்தவர்களுக்கு இந்த மாநில அரசு அலுவலகங்களிலும் தமிழ் நாட்டிலுள்ள நடுவணரசு அலுவலகங்களிலும் 80 விழுக்காடு வேலைவாய்ப்புத் தர வேண்டும் எனச் சட்டம் இயற்றிக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். இது அண்டை மாநிலங்களில் எப்போதிலிருந்தோ நடைமுறையில் உள்ளது தான்.
இவை போன்றதமிழ், தமிழினநலம் சார்ந்தவற்றை உருவாக்கினால் தான், இப்போது பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக்கழக ஆட்சி, தமிழ்நாட்டை வெற்றித் தமிழ்நாடாக்கும்.
Leave a Reply