கல்விக்கண்

கல்விக்கண்

  • By Magazine
  • |

பத்மநாபன்

அறியாமை இமையிங்கே அடைந்திருந்தால்

     அவனியிலே அனைவருக்கும் குருட்டுப் பார்வை

அறியாமை புரைவிழியின் படலம் தன்னை

     அடைத்திருந்தால் அனைவருக்கும் மங்கும் பார்வை

அறியாமை எனும் நீண்ட துயிலைக் கொண்டால்

     அவனியதன் அசைவினையே அறிதல் ஏது?

அறியாமை எனும் போலித் தவமிருந்தால்

     ஆன்மாவின் துடிப்பறிதல் என்ப தேது?

அறியாமை எனுமிருட்டு அடர்வனத்துள்

     அடிவைத்து நடப்போர்கள் வாழ்வுப் பாதை

நெறியேதும் தெரியாமல் தத்தளித்தே

     நெடுமாழப் புதைக்குழிக்குள் வீழ்ந்தே மாய்வர்

அறியாமை இமைதிறந்து புரையை நீக்கி

     ஆழ்த்துயிலை களைந்திங்கே உயிர்த் துடிப்பை

செறிவாக உணர்தற்குக் கல்வி என்னும்

     சிந்தனையாம் செங்கோலின் ஆட்சி வேண்டும்

மறியாட்டு மந்தையெனத் திரிந்தோரையும்

     மாணறிவு மாந்தரென மாற்றுதற்கு

அறிவீயும் கல்விக் கூடங்கள் தம்மை

     ஆங்காங்கே துவக்கிட்டார் காமராசர்

வறியோர்க்கும் உணவுடனே கல்வி ஈந்த

     வள்ளலவர் தொண்டுக்கிங் கீடே துண்டு

குறிக்கோளாய் அவர்கொண்ட கொள்கையாலே     

கொஞ்சுதமிழ் மண்மாண்பு இமயத்தின்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *