தமிழவேள் என்னும் கரந்தைச்செல்வர்

தமிழவேள் என்னும் கரந்தைச்செல்வர்

  • By Magazine
  • |

பழனி அரங்கசாமி

இலக்கியம் குறிப்பது மூன்று தமிழ்சங்கங்கள். பன்னூறு ஆண்டுகளுக்கு பின்னர் பாண்டியனின் தலைநகராம் மதுரையில் 1801- ஆம் ஆண்டில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டார் மாமன்னர் பாண்டிதுரை. அதற்குச் சரியாக பத்து ஆண்டுகளுக்கு பின்னர் 1911- ஆம் ஆண்டு தஞ்சையை அடுத்த கரந்தை என்னும் பேரூரில் வடவாற்றங்கரையில் பிறிதோர் தமிழ்ச்சங்கமும் உருவாகியது. அருள் தமிழோடு ஆங்கிலமும் கற்ற மருத்துவர் கோபாலசாமி ராஜாளியார் தஞ்சையில் தொடங்கிய வித்தியா நிகேதனம் என்னும் தமிழ்ச்சங்கம் செயல்படாது போயிற்று. அதற்கு ஈடு செய்யும் முறையில் தான், ராதாகிருஷ்ணபிள்ளை என்னும் சுங்கத்துறை அதிகாரி கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தார். ஆயினும் சங்கத்தின் விரிவான வளர்ச்சிக்கும், வேகமான தமிழ்ப்பணிக்கும் முழுமுதற் காரணமாக இருந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று தடையில்லா அதன் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் நின்றவர் தான் உமாமகேஸ்வரன் அவர்கள்.

இளமையில் பெற்றோரை இழந்தவர். அறுபதாண்டு கால வாழ்வின் இடைக்காலத்தில் அவரது மனைவியும் மறைந்து போயினார். ஆயினும் தமிழவேள் அவர்கள் நியாயத்துக்குப் போராடும் வழக்கறிஞராகவும், நேர்மைக்கு அணிகலமான ஒரு பொதுநலத் தொண்டராகவும் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு புரவலராகவும் பணிபுரிந்து இறவாத புகழ் எய்தியுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு வருவோரை மகிழ்ச்சிப் பெருமிதத்தில் வரவேற்று நிற்பது போன்று காட்சியளிக்கும் தமிழவேள் அவர்கள் பொன்னிறமான உருவச் சிலையினை சங்க வளாகத்தின் முகப்பில் 1973- ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்துள்ளார்.

12- ஆம் வயதில் பெற்றோரை இழந்த இளைஞர் உமா மகேஸ்வரனை அவரது சித்தியின் கணவரே வளர்த்து வந்தார். ஆங்கிலேயர் காலத்தில் அப்போது தஞ்சையில் நடைபெற்று வந்த செயின்ட் பீட்டர் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் வரை பயிலச் செய்தார். பட்டம் பெற்ற அடுத்த மாதமே கிடைத்த எழுத்தர் பதவியை ஓரிரு ஆண்டுகளில் உதறிவிட்டு உமா மகேஸ்வரன் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் ஆயினார். சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் தஞ்சையில் கிரிமினல் வழக்குகளைத் திறம்பட நடத்திப் பெரும் புகழ் பெற்றார். இவரது சட்ட நுணுக்கத்தினையும், வாதமிடும் திறமையினையும் அறிந்த அன்றைய சென்னை அரசினர் இவரை அரசு வழக்குரைஞராகப் பதவி அளித்தனர். 1935- ஆம் ஆண்டில் அரசினரே அளித்த ராவ்சாகிப் பட்டத்தை விட தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார் அளித்த தமிழவேள் என்னும் பட்டமே இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

ஒரு பவுன் தங்கம் விலை பத்து ரூபாயாக இருந்த அந்தக் காலத்தில், தமிழவேள் அவர்கள் வழக்குரைஞராக மாதம் ஆயிரம் ரூபாய்க்கு குறையாத பெரும்பொருள் ஈட்டியவர் என்று கூறப்படுகிறது. தனது வருமானத்தின் பெரும் பகுதியைத் தமிழ்ச்சங்க வளர்ச்சிக்கே பயன்படுத்தி உள்ளார்.

1938- ஆம் ஆண்டில் அவரது பெருமுயற்சியால் கரந்தையில் ஒரு தனித்தமிழ்க்கல்லூரி தொடங்கப் பெற்றது. கல்லூரியின் வளர்ச்சிக்கென தனது வருமானத்தின் ஒரு பகுதியினைத் தொடர்ந்து நன்கொடையாக அளித்துள்ளார். மகாகவிதாகூரின் சாந்தி நிகேதனைப் கரந்தை கல்லூரியினைத் தனித்தன்மையோடு வளர்க்கும் எண்ணத்தில் தான் 1941- ஆம் ஆண்டில் தனது நண்பர் கணபதிய்யா அவர்களோடு கல்கத்தாவிலிருந்து சாந்தி நிகேதனம் சென்றுவிட்டு திரும்புகையில் அயோத்திநகர் அருகில் பைசாபாத் புகைவண்டி நிலையத்தில் தீவிர காய்ச்சலுக்கு ஆட்பட்டார். மருத்துவமனையில் சேர்ந்தும், உடல் நலம் குன்றி அங்கேயே காலமானார். சரயு நதிக்கரையில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தந்தி, தொலைபேசி வசதிகள் இல்லாத அக்காலத்தே அவரது நண்பர் எழுதிய விரைவுக் கடிதமே அத்துயரச் செய்தியைக் கரந்தைக்கு அறிவித்தது.

தமிழவேளின் பெருமுயற்சியால் கரந்தை தமிழ்ச்சங்கம் தமிழ்ப்பொழில் என்னும் மாத இதழினை 1915- ஆம் ஆண்டில் தொடங்கியது. இலக்கியச் சுவையொடும், ஆய்வு நோக்கிலும் தமிழ்ப்பொழிலில் கட்டுரைகள் வெளியிடப் பெறல் வேண்டும் என்று தமிழவேள் விரும்பினார். தானே பற்பல ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் பெயர்த்து வெளியிட்டார். ந.மு.வே நாட்டாரால் எழுதப்பெற்ற நக்கீரர் என்னும் நூலே தமிழவேள் அவர்களால் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற முதல் ஆய்வு நூல் ஆகும். தமிழ்ப்பொழிவில் தமிழவேள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டால் இலக்கிய வளர்ச்சியில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினை அறிந்து கொள்ளலாம். கால்டுவெல் ஒப்பிலக்கணம் தமிழில் பெயர்க்கப்பெறாத அக்காலத்திலேயே அதனைப் புலவர் வகுப்புகளில் எளிமையான தமிழில் போதித்துள்ளார். ஆலம்வித்தாய் தமிழவேள் போட்ட தமிழ்க்கல்லூரி இன்று அறிவியல் கலைக்கான உயர் பெருங்கல்லூரியாக நிலத்தினும் பெரிதாய், வானினும் உயர்ந்ததெனக் கூறத்தகும் அளவில் வளர்ந்து நிற்கிறது.

மறைமலை அடிகளார், பண்டிதமணி, நாவலர் பாரதியார் ஆகிய அறிஞர் பெருமக்களை அழைத்து அவர்களது இலக்கியச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து, அவர்களைப் பாராட்டிப் பரிசளித்து அனுப்புவதை தமிழவேள் தனது பெரும்பணியாக மேற்கொண்டுள்ளார். 1937- ஆம் ஆண்டில் நாடெங்கும் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியினை ஆதரித்துப் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

மாவட்ட நிர்வாகத்தில் தாலுக்கா போர்டு தலைவராக இருந்த காலத்தில், தமிழவேள் செய்த மாபெரும் தமிழ்ப்பணி பல பேருக்குத் தெரியாது. வரலாற்றில் அச்செய்தி முழுமையாக இடம் பெறவில்லை. அவரும் தற்பெருமையும், விளம்பரமும் செய்து கொள்ளும் விருப்பினராகவும் இருந்திடவில்லை.

தஞ்சைக்கு அருகில் புண்ணியத்தலமான திருவையாற்றின் காவிரிக்கரையில் ஒரு கல்லூரியில் பிராமணர் மாணவர்க்கு உண்டியும் உறையுளும் கொடுத்து வடமொழி மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தது. அய்யாற்றில் மராட்டிய அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்த கல்யாணமகால் என்னும் கட்டிடமே அந்தக் கல்லூரியாகும்.

தேவாரத் தலமான திருவையாற்றுக் கல்லூரியில் தமிழும் கற்பிக்க வேண்டும் என்று கூறிய தமிழவேளின் வேண்டுகோளை நிர்வாகத்தினர் மறுத்து விட்டனர். மராட்டிய அரசினர் கொடுத்த நிலங்களின் வருமானம் வடமொழிக்கு மட்டுமே என்று வாதிட்டனர். உரிய கோப்புகளை அலசிப் பார்த்து, அய்யாற்றுக்கு வரும் பைராகிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட மடமும், அதன் நிலபுலன்களும் தனியார் கைப்பட்டுக் கிடந்தன. அதனைத் திறமுடன் மீட்டு, நீதிக்கட்சியின் ஆதரவினால், பைராகி மடத்துச் சொத்துக்களைக் கல்லூரியின் சொத்தாக மாற்றி, வடமொழியோடு தனித்தமிழையும் கற்பிக்கச் செய்தார். அங்கு பயின்ற, பயிலுகின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழகம் எங்கணும் தமிழபசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். தமிழ் மண்ணிலேயே ஒதுக்கப்பட்டுக் கிடந்த உயர் தமிழை அய்யாற்றுக் கல்லூரியில் அரியணை ஏற்றிய தமிழவேளுக்கு அங்கும் ஒரு சிலை நிறுவுதல் காலத்தின் கட்டாயம் ஆகும்.

சடையப்ப வள்ளல் நூல் எழுதவில்லை. ஆயினும் கம்பன் வழி ஒரு காவியம் உருவாகக் காரணமாய் இருந்துள்ளார். கரந்தைச் செல்வர் தமிழவேளும் நூல் எழுதினர். ஆயினும் நூல் எழுதும் திறம் சான்ற நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர் பட்டாளத்தை உருவாக்கிடக் காரணமாய் இருந்துள்ளார். அவர் துவக்கிய தூய தமிழ்த்தொண்டு இன்றும் தொடர்கிறது. என்றும் அது தொடரும். அதற்கு காரணமாய் அந்த இனிய தமிழ்த் தொண்டரை இருகரம் கூப்பி வாழ்த்தத் தமிழகமே கடமைப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *