– கிருஷ்ணகோபால்
பிரெட்ரிக் ஏங்கல்ஸ், காரல் மார்க்ஸ் இருவரும் சேர்ந்து 1848 ஆம் ஆண்டு ஏழைப் பணக்காரன் என்றப் பாகுபாடு இல்லாத சமத்துவ உலகை கற்பனைச் செய்து கம்மியூனிச அறிக்கையை வெளியிட்டனர். அவர்கள் சமதர்மக் கொள்கையை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு 15 வருடத்திற்கு முன்பே 1833 -ம் ஆண்டு கல்வி அறிவில் தாழ்ந்து இருப்பவர்களையும், பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடப்போரையும் உயர்த்திடும் நோக்கம் கொண்டு தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்று எளியவர்கள் பக்கம் நின்று கிளர்ச்சி முழக்கமிட்டவர் அய்யா வைகுண்டர்.. இந்தியாவின் தென்கோடியிலிருந்து வெடித்தெழுந்த இந்த கிளர்ச்சிக் குரல் காலம் கடந்துதான் உலகின் காதுகளுக்கு எட்டியது.
கேரளத்து நாராயணக்குரு ‘ இது பிராமண சிவன் அல்ல ஈழவ சிவன்’ என தத்துவார்த்த முறையில் கிளர்ச்சி குரலை வெளிபடுத்தியவர் என்றால் அய்யா வைகுண்டர் வெளிப்படையாகவே கிளர்ச்சி குரலை வெளிப்படுத்தியவர். இராமலிங்க வள்ளலார்(1823_1874),நாராயணகுரு (1856_1921)ஆகியோரில் அய்யா வைகுண்டர் மூத்தவர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே தாமரைக்குளம் ஊரை அடுத்த சாஸ்தான்கோவில்விளையில் பொன்னு மாடன் ,வெயிலாள் தம்பதியருக்கு( 1809 ஜனவரி 15 ) தை 1 – ம் தியதி ஒரு ஆண்குழந்தைப் பிறந்தது. அக்குழந்தைக்கு பெற்றோர்கள் ‘ முடிசூடும் பெருமாள்’ எனப் பெயரிட்டனர். ஒடுக்கப்பட்ட சாதியினர் இப்படி நாகரிகமான பெயரைச் சூட்டக் கூடாது என அச்சுறுத்திய ஆதிக்க சாதி அதிகாரிகள், அன்றைக்கு புழக்கத்தில் இருந்த ‘முத்துக்குட்டி ‘என பெயர் சூட்டப் பணித்தனர். அதனால் அவர் சிறுவயதிலிருந்தே எல்லோராலும் ‘முத்துக்குட்டி ‘என்றே அழைக்கப்பட்டார்.
விரும்பிய பெயர் வைப்பதிலே இவ்வளவு கெடுபிடி இருக்கிறதே என்பதை வளரும் பருவத்தில் புரிந்துக் கொண்ட அவர் வாழும் காலத்தில் பல கொடுமைகளை எதிர் கொண்டு நடந்தார்.
ஆதிக்கசாதியினர் வசிக்கும் தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடமாடக்கூடாது,மீறி நடந்தால் கொடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டனர்.வெயில் மழைக்கு குடைப் பிடிக்க அனுமதியில்லை. முழங்காலுக்கு மேலேதான் வேட்டிக் கட்ட வேண்டும். தலைத்துண்டை கையிடுக்குகளில் வைத்தபடி தான் நடக்க வேண்டும் .பொது இடத்தில் செருப்பிட்டு நடக்கக் கூடாது .வீடுகளில் கூரை மாற்றினால் கூரை மாற்று வரியும்,தாடி மீசை வளர்த்தால் வரி செலுத்த வேண்டும் . கூலியாகக் கிடைக்கும் சொற்பக் காசையும் வரி என்றப் பெயரில் அதிகாரிகள் பிடுங்கி எடுத்தனர்.வரி கட்ட இயலாதவர்கள் கொடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். முதுகில் பெரிய பாராங்கல்லை ஏற்றி வைத்து வெயிலில் நிறுத்துவது , சிறையில் தள்ளி சித்திரவதைச் செய்வது என கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.நெடுநாள் வரி கட்டாதவர்களுக்கு பழுக்கக் காச்சிய இரும்புக் கம்பியை காதில் சொருகி மரத்தில் கட்டித் தொங்கவிட்ட கொடூரங்கள் திருவிதாங்கூரில் நடந்தேறின.. ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்களை கொன்று புதைப்பதற்காகவே கிணறுகள் தோண்டப்பட்டிருந்தன.
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் கூடுதல் இம்சைகளை அனுபவித்தனர்.அன்று தங்கத்தில் தாலி அணிந்துக் கொள்ள உரிமையில்லை .பனை ஓலைத் தாலிதான் அணிந்துக் கொள்ள உரிமையிருந்தது.
பெண்கள் இடுப்பில் குடம் சுமக்கக் கூடாது தலையில் தான் தண்ணீர் குடம் சுமக்க வேண்டும் என்று சட்டங்கள் இருந்தன. பொது இடங்களில் தோள்சீலை அணிந்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர்.இப்படிப் பட்ட வைதீகத்தின் எண்ணற்ற அடக்குமுறைகளை தான் வாழும் காலத்தில் கண்டு வளர்ந்த வைகுண்டர் ஆளும் அரசின் ஆணி வேரை ஆட்டம் காண வைக்க சிந்தித்தார்.
ஆதிக்கச் சாதியினரை அவர் பல இடங்களில் பகைத்துக் கொண்டதால் ஒரு முறை ஆதிக்கச் சாதியினர் சமாதானம் பேசுவது போல் அவரிடம் அன்பாகப் பேசி விருந்துக்கு அழைத்தனர். அந்த விருந்தில் அவருக்கு விஷம் கலந்து கொடுக்கப்பட்டது . அவர் ஆன்ம பலத்தால் உயிர் பிழைத்துக் கொண்டார்.ஆனால் விஷத்தின் பாதிப்பால் நோய்வாய்ப்பட்டார்.எந்த ஒரு வைத்தியனின் மருந்துக்கும் பிடிபடாத நோயின் வீரியம் அவரை இரண்டு வருடம் படுத்த படுக்கையில் கிடத்தியது. அவர் நோயால் துன்புற்றது இவரது வாழ்வில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ஞானமடைதல்
மகனின் நோய் வைத்தியனின் எந்த மருந்துக்கும் அடைபடவில்லையே மனம் வருந்தி ‘திருமாலை’ மனதில் தியானித்து இரவு படுத்திருக்கும் போது , வெய்யிலாள் கனவில் திருமால் தோன்றி’ உன் மகனை திருச்செந்தூர் மாசி திருவிழாவுக்கு அழைத்து வா குணமாக்கி தருகிறேன் எனச் சொல்லி காட்சி தந்து மறைந்தார். விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் என்பதால் வெயிலாள் அம்மை அகமகிழ்ந்தார்.
வெயிலாளோடு ,உறவினர்கள் சேர்ந்துக் கொண்டு பயணத்துக்குரிய உணவுப் பண்டங்களைப் பொட்டலமாகக் கட்டி தலையில் சுமந்து, உடல் நலிவுற்றவரை அகலத் தொட்டிலில் கிடத்தி தூக்கி திருச்செந்தூர் நோக்கி கால்நடையாகச் சென்றனர்.
திருச்செந்தூர் கடலில் மூன்று நாட்கள் இவர் இருந்த நிகழ்ச்சியை அகிலத்திரட்டு புராணத்தன்மையுடன் காட்டுகிறது. உறவினர்களோ மற்றவர்களோ காணமுடியாத இடத்தில்’ பங்கமில்லாத தைலப் பதத்தில் மூழ்க வைத்து’ முத்துக் குட்டியை வைகுண்டர் ஆக்கினார் திருமால்.” உலகம் அளந்தவன் நீ” என வாழ்த்துகிறார்.நீண்ட உபதேசம் செய்கிறார்.
அய்யாவின் பிறப்பிலிருந்து (1809)அவரின் வயதைக் கணக்கிட்டால் அவரது வயது 217. ஆனால் அய்யா வைகுண்டர் திருமாலிடம் அருள் பெற்று இறைநிலைக் கண்ட ஆண்டு 1008 மாசி 20 ம் நாளையே (கி.பி 1833 மார்ச் 4) அய்யா வழி பக்தர்கள் அவதார தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
திருச்செந்தூரில் ஞானம் பெற்ற வைகுண்டசாமி பூவண்டன் தோப்பிற்கு (சாமிதோப்பு) வருகிறார். அங்கு ஆறுவருடம் தவமிருந்தார். தவக்காலத்தில் பச்சரிசி, தேங்காய், சிறுபயிறு, மிளகு, வத்தல் ஆகியன கலந்த உணவை மட்டுமே ஒரு நேரம் உண்டு வாழ்ந்தார்.அவரைப் பற்றிய செய்தி ஒடுக்கப்பட்டிருந்த பதினெட்டு சாதிகளிடமும் காட்டுத் தீப் போல் பரவுகிறது. தங்கள் அடிமைப்பட்ட வாழ்வுக்கு ஒரு விடிவுக் கிடைத்து விட்டது என கொண்டாடி மகிழ்ந்தனர்.அவர் தவத்திலிருந்து கண்விழிக்கும் போதெல்லாம் பிரச்சனைகளோடு வரும் மக்களுக்கு உபதேசம் செய்தார். நோய் நொடியோடு வந்த மக்களுக்கும் மருந்து வாழ்மலையில் கிடைக்கும் பச்சிலை மூலிகைக் கொண்டும் ; மண்ணும் தண்ணீர் கொடுத்தும் நோய்தீர்த்தார்.
வைகுண்டர் கைது
வைகுண்டர் ஞானம் பெற்றப் பின்பு சாமித்தோப்புப் பகுதியில் தவம் செய்துக் கொண்டிருக்கும் காலத்திலும் ஒடுக்கப்பட்டிருந்த மக்களிடையே உபதேசம் செய்த காலத்திலும் சாதிக்கு ஒரு கிணறு சாதிக்கு ஒரு குளம் என்றிருந்த நிலையை மாற்ற எண்ணி, எல்லா சாதியினருக்கும் ஓரிடத்தில் வந்து குளிக்க குடிக்க ‘பொது கிணறு’ ஒன்றை உருவாக்கினார்.முட்டுக்கு மேலே வேட்டிக்கட்டிக் கொண்டு தலைத் துண்டை கக்கத்தில் வைத்திருந்த மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்கி, கக்கத்தில் இருந்த தலை துண்டை தலையிலும் முட்டிற்கு கீழே குதிகால் வரையில் வேட்டியை மக்களை உடுக்கச் சொல்லி ‘ராஜா மாதிரி இரு’ என அழகுப் பார்த்தார்.பிராமணர்களுக்கு மட்டுமே திறந்திருந்த அன்ன சத்திரங்களை எல்லோரும் கிடைக்கும்படி செய்து அன்னத்தானத்தை அறத் தொண்டாக மாற்றினார். தன்னைக் காண வரும் பெண்களிடம் தோள் சீலை அணிந்து வரச் சொன்னார்.தொட்டால் தீட்டு என்றிருந்த சமூகத்தில் தொட்டு நெடு நாமம் சாற்றினார்.
சனாதன இந்துமதக் கோவில்களின் உள்ளே ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் கண்டகண்ட இடங்களில் தெய்வங்களைத் தேடி அலைய வேண்டாம் நன்மைக்கும் தீமைக்கும் நீ தான் பொறுப்பு உனக்குள் தான் எல்லாமுமிருக்கிறது எனச் சொல்லி ‘கண்ணாடி வழிபாட்டை’ உருவாக்கினார். இவ்வாறு அவர் செய்த பல கிளர்ச்சிகள் அன்று ஆளும் திருவிதாங்கூர் அரசின் காதை சென்றடைந்தது.
இதனால் திருவிதாங்கூர் அரசு அவரைக் கைது செய்தது. கைதுக்கு முக்கிய காரணமாக ஆளும் அரசு வைத்த குற்றசாட்டுகளில் ஒன்று ஒடுக்கப்பட்டோர் சாதிகளில் ஒன்றான சாணார் இனத்தில் இருந்துக் கொண்டு ஆன்மிகம் பேசியதும், அரசுக்கு ஊழியம் செய்துக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்டிருந்த பதினெட்டு சாதியினரையும் ஒன்றிணைத்து விழிப்புணர்வடையச் செய்ததும் அரசுக்கு மட்டுமல்ல பிராமண விரோதியாகவும் அவரை மாற்றியது.
அன்று ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் பிச்சைக்காரர்களாக வாழ்வதற்கான தகுதியுடையவர்களாக மட்டுமே இருந்தனர்.ஆன்மிகம் பேசும் உரிமை மலையாள நம்பூதிரிகளுக்கும்,துளு பிராமணர்களுக்கும் ,தமிழ் பிராமணர்களுக்கும் மட்டுமே உண்டு என்பது அதிகாரிகளின் வாதம்.
வைகுண்டர் ஆன்மிகம் மட்டுமே பேசவில்லை தன்னை திருமாலின் அவதாரம் என்றும் சொல்லிக் கொண்டதால் பத்மநாபனின் தாசர்களாக இருந்த அன்றைய திருவிதாங்கூர் அரசனை ( சுவாதி திருநாள்) அவமதித்ததாக கோவில் நிர்வாகிகள் கருதியதன் விளைவு வைகுண்டர் 1837 நவம்பர் மாதம் சிறைப்பிடிக்கப்பட்டார்.
அவர் சிறைபிடிக்கப்படும் போது காவலர்களால் பூவண்டன் தோப்பில் அவர் குடிசை தீக்கிறையாக்கப்பட்டது.அவர் தவமிருந்த மாமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. அவர் உருவாக்கி வைத்த கண்ணாடி வழிபாட்டுத் தத்துவம் தரையில் போட்டு உடைக்கப்பட்டது.அவர் உருவாக்கிய பொதுக்கிணறு பக்கத்திலுள்ள உப்பளங்களிலிருந்த கொண்டுவரப்பட்ட உப்புக் கொண்டு மூடப்பட்டது.பிறகு காவலாளிகள் துப்பாக்கியின் மரக்கட்டைப் பிடிக் கொண்டு அவரின் விலா எலும்பில் கடுமையாகத் தாக்கினர். சாட்டையால் அடித்தனர்.அதன் பிறகு கைகள் பின்னால் கட்டப்பட்டு பகல் கள்ளனைப் போல் மக்கள் வாழும் தெருக்கள் வழியே இழுத்துச் செல்லப்பட்ட அவர்

சுசீந்திரத்தில் மையமிட்டிருந்த சுவாதித் திருநாள் மன்னர் முன்னால் கொண்டு நிறுத்தப்பட்டார்.பிறகு பல கேள்விகள் கேட்டப்பட்டன .பல சோதனைகள் நடத்தப்பட்டன.. பிறகு மன்னரின் ஆணைக்கிணங்க திருவனந்தபுரம் நோக்கி கொண்டுச் செல்லப்பட்டு சிங்காரத்தோப்பு எனுமிடத்தில் திறந்த வெளிச்சாலையில் 112 நாட்கள் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டார்.
சிறை வைக்கப்பட்ட நாட்களில் சிறையில் பல தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. சுண்ணாம்பு காள வாயில் வைத்து நீற்றல்,பாலில் ஐந்து வகை நஞ்சு கலந்து கொடுத்தல் ,வத்தலில் தீவைத்து அந்த புகைக்குள் விழச் செய்தல் உள்ளிட்ட பல தண்டனை முறைகள் கொடுத்தப் பின்பும் வைகுண்டருக்கு எதுவும் ஆகாதது அறிந்து கடைசியாக அரச தண்டனை முறைகளில் ஒன்றான’ புலிக் கூண்டுச் ‘சோதனைக்கு உட்படுத்தினார் மன்னர். தனது காவலாளிகளை அழைத்து காட்டுக்குள் சென்று விரைவாக ஒரு கடுவாயை ( புலியை) பிடித்து வரச் சொல்லி அதை மூன்று நாட்கள் பட்டினி போட உத்தரவிட்டான்.மன்னரின் ஆணைக்கிணங்க புலிக் பிடித்து வரப்பட்டு பட்டினி போடப்பட்டது .பிறகு கூண்டின் ஒரு பக்கம் வைகுண்டர் அடைக்கப்பட்டு இடைவழித் திறக்கப்பட்டது. வைகுண்டர் சாந்தி யோகாவில் உட்கார்ந்திருந்தார்..புலி வைகுண்டரை எதுவும் செய்யவில்லை. புலி அவர் பக்கத்தில் அமைதியாக வந்துப் படுத்துக் கொண்டது. இதைக் கண்ணுற்ற மன்னர் மற்றும் பொது மக்கள் உட்பட எல்லோரும் அதிசயித்தனர். இதை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நம்பூதிரி ஒருவர் கோபமுற்று மணியீட்டிப் பிடித்திருந்த காவலாளியிடமிருந்து ஈட்டியைப் பிடுங்கி கூர்மையான பகுதியை தன்பக்கம் வைத்துக் கொண்டு கைபிடியைக் கொண்டு புலியை உசுப்பி விட்டார். புலி கோபமாக ஈட்டியை பிடித்திழுப்பதும் விடுவதுமாக இருந்தது.சற்று நேரத்தில் கோபத்தோடு ஈட்டியை பிடித்திழுத்த புலி அதை வேகமாக விடவே அது நம்பூதிரியின் நெஞ்சைப் பதம் பார்த்தது. சிறிது நேரத்தில் இரத்தம் கொப்பளிக்க நம்பூதிரி துடிதுடித்து இறந்துப் போனார்..இதைக் கண்ணுற்ற மன்னர் அதிர்ச்சியடைந்தார்.’ஒரு நம்பூதிரியின் துர்மரணம் என்பது ஆயிரம் பசுக்களைக் கொல்வதற்குச் சமம் ‘என ‘மனு மொழி’ சொன்னச் சொல் படி ஆட்சி நடத்தும் பத்பநாப தாசனான மன்னர் வைகுண்டசாமியை விடுதலைச் செய்ய முன் வந்தார்.
மன்னர் அனுப்பிய ‘விடுதலை ஓலைப் பத்திரத்தை ‘காவலாளிகள் வைகுண்டரிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.
அதில்’ உன் இனத்தைத் தவிர மற்ற ஒடுக்கப்பட்ட இனங்களை வாவென்று அழைத்து உபதேசம் செய்யாதே, ஒத்துக் கொள்வதாக இருந்தால் கையெழுத்திட்டு இங்கிருந்து உன் இடத்திற்குப் போ ‘ என எழுதியிருந்ததை காவலர்கள் வந்து வைகுண்டரிடம் கொடுத்தனர் .இதை படித்துப் பார்த்து வெகுண்டெழுந்த வைகுண்டர் சடாரென்று கிழித்து தரையில் போட்டு விட்டு ‘உங்கள் மன்னர் சொன்ன தேதியில் நான் போக முடியாது நான் என்ன உங்கள் மன்னரின் அடிமையா …..? நான் நினைத்த நாளில்தான் இங்கிருந்து போக முடியும்’ என வீராப்பாக பேசி காவலாளிகளை அனுப்பி விடுகிறார். . தரையில் கீறி கிடந்த விடுதலை ஓலையை தீட்டுத் தண்ணீர் தெளித்து கோர்த்துக் மன்னரின் பார்வைக்கு கொண்டுச் சென்றனர் காவலாளிகள்.இதை கண்ணுற்ற மன்னர் கடுமையாக கோபமடைந்தாலும் நம்பூதிரிக்கு நிகழ்ந்த துர்மரணம் ஞாபகத்திற்கு வரவே , அமைதியானார்.பிறகு வைகுண்டர் நினைத்த ஒரு நாளில் சிறையிலிருந்து சாமிதோப்பு நோக்கி அன்பு வழி மக்கள் தொட்டிலில் சுமந்து சென்றனர்.
அன்பு வழி மக்கள் இயக்கம்
சாமிதோப்பு வந்துச் சேர்ந்ததும் ஒடுக்கப்பட்டிருந்த பதினெட்டு சாதிகளிலிருந்து 700 பேரை தேர்ந்தெடுத்து ‘துவையல் தவசு ‘ எனும் ஆன்மிக பயிற்சிக் கூடத்தை வட்டக்கோட்டை அருகே உள்ள வாகைப்பதியில் ஒழுங்கமைத்து விட்டு ஆறு வருட (மன்னர் சிறைபிடித்ததால்) தடைபட்டுப் போன தவத்தை நிறைவேற்ற சாமிதோப்பு வந்தார்.பிறகு ‘ அன்பு வழி மக்கள் ‘என்னும் பெயரில் ஒரு அமைப்பு உருவாக்கி அதற்கென தனிக் கொடியை(காவி நடுவே வெள்ளை நாமம்) உருவாக்கினார். பிறகு அன்பு வழி மக்களுக்கென்று ஒரு வேதம் வேண்டும் என நினைத்து ‘ அகிலத்திரட்டு அம்மானை எனும் ஒரு நூலை அய்யா உருவாக்கினார்.அகிலத்திரட்டு நூலை எழுதியவர் (1841) அய்யாவின் ஐந்து சீடர்களில் ஒருவரான அரிகோபாலர். அருள் நுலை எழுதியது அய்யா வைகுண்டர் .அருள் நூலில் பல தீர்க்க தரிசனங்களும் ,நாட்டு நடப்புகளும், அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த சமூக அவலங்களும் செய்யுள் வடிவில் பதிவாக்கியிருக்கிறார் அய்யா வைகுண்டர். ஊர் தோறும் பல நிழல் தாங்கல்களை உருவாக்கினார்.அது இரவில் வழிபாட்டுக் கூடமாகவும் பகலில் கல்விக் கூடமாகவும் இருந்தது.அன்பு வழி மக்கள் இயக்கமானது அய்யாவின் காலத்திற்கு பிறகு ‘அய்யாவழி’ என மாறியிருக்கிறது.அய்யா தனது 41 வயதில் 1851-ம் வரும் வைகாசி 21 ம் தியதி அன்று வைகுண்டம் ஏகினார்.
பண்பாட்டு அடையாளம்
அய்யாவழி மரபினர் தனித்த பண்பாடு அடையாளம் கொண்டவர்கள்.அவர்கள் தங்கள் வீடுகளில் எளிமையாக நடக்கும் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு நல்ல காரியங்களிலும் பார்ப்பன புரோகிதர்களின் பங்களிப்பு எப்போதுமே இருந்ததில்லை. அய்யாவழி பெரியவரே எல்லாவற்றையும் முன்னின்று நடத்துவார்.
பிராமணர்கள் திருமணச் சடங்கை கிழக்கு பார்த்து நடத்தும் போது அய்யாவழியினர் தெற்கு முகம் பார்த்து நடத்துகிறார்கள். பிராமணர்களுக்கு தெற்கு எமன் உறையும் திசை. அய்யா வழியினருக்கோ அது கடல்கொண்ட குமரிக் கண்டத்தை, தன் முன்னோர்களை ஞாபகப்படுத்தும் ஒரு வாய்ப்பு. வீட்டில் தந்தை இறந்தால் மகன்கள் பிராமணர்களைப் போல் மொட்டை அடிக்கும் பழக்கமில்லை. இறந்தவர்களை புதைக்கும் பழக்கம்தான் அய்யா வழியினரிடம் உண்டு பிரிமணர்களைப் போல் எரியூட்டுவதில்லை.
அய்யாவழியினர் தலைப்பாகைக் கட்டிக் கொண்டு கண்ணாடியின் முன் தங்கள் பிம்பம் தெரிய தங்களைத் தாங்களே வணங்கிக் கொள்ளும் தத்துவ மரபை கடைப்பிடிப்பவர்கள். வைகுண்டசாமியை வைதீகக் கோட்ப்பாட்டின் அடிப்படையில் விளக்கி அவருடைய புரட்சித்தன்மையை, சுயத்தை மறைக்கவும் ,சிதைக்கவும் பலர் முயன்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவரை நுட்பமாக உள்வாங்கினால் மட்டுமே வைதீகத்திற்கு எப்படியெல்லாம் சவுக்கடி கொடுத்திருக்கிறார் என்றும் ,வைதீகத்திற்கு எதிராக அய்யாவழி வந்தவர்கள் சமரசமில்லாமல் களத்தில் நிற்கிறார்கள் என்பதும் புரிய வரும்….
Leave a Reply