உள்ளுணர்வு வேர்கள்

உள்ளுணர்வு வேர்கள்

  • By Magazine
  • |

– ஓஷோ

மாசேதுங் சிறுவனாக இருந்த போது அவருடைய தாயார் ஒரு சிறிய தோட்டம் வைத்திருந்தார். அந்தப் பகுதியில் அவருடைய தாயார் தோட்டத்தில் பூத்த மலர்களைப் போல அழகான மலர் வேறு யார் தோட்டத்திலும் இல்லை. அவர் அந்தப் பூக்களை மிகுந்த நேசத்தோடு வளர்த்தார். அவருடைய அன்பினால் அந்த பூக்கள் தனித்தன்மையான பரிசைப் பெற்று தந்தன. மாசேதுங் இன்னும் குழந்தையாக இருந்தபோது, அவர் தாயார் நோய்வாய்ப்பட்டார். ஆனால் அவர் தன்னுடைய நோயைப் பற்றியோ அல்லது அவரை நெருங்கிக் கொண்டிருக்கும் மரணத்தை பற்றியோ கவலைப்படவில்லை. அவருடைய அக்கறையெல்லாம் மலர்கள் உதிர்ந்து விடுமோ என்பதைப் பற்றித்தான். அவருடைய அக்கறையெல்லாம் செடிகள் இறந்து விடுமே என்பதில் தான். மாசேதுங் அப்போது சின்னவராக இருந்தார். அவர் தன் தாயாரிடம், கவலைப்படாதீர்கள் அம்மா, நான் அதைப் பார்த்து கொள்கிறேன் என்றார்.

பதினைந்து நாட்கள் அவர் தாயார் நோயில் இருந்தார். மாசேதுங் தோட்டத்தில் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தார். அவர் இரவில் தூங்கக் கூட இல்லை. இரவு பகலாக பாடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய எந்த முயற்சியும் பலனை தரவில்லை. மலர்கள் காய்ந்து கொண்டே இருந்தன. செடிகள் உதிர்ந்து கொண்டிருந்தது. அவர் பயந்து போய், என்ன விஷயம் என்று வியந்து கொண்டிருந்தார். பதினைந்து நாட்கள் கழித்து அவர் தாயார் சிறிது குணமானவுடன் தோட்டத்திற்கு வந்தார். அவர் அழ ஆரம்பித்தார். மாசேதுவும் அழ ஆரம்பித்தார்.

மாசேதுங் சொன்னார் என்னால் முடிந்தவரையில் சிறப்பாக் பார்த்துக் கொண்டேன். என் உழைப்பு எல்லாவற்றையும் தோட்டத்தில் போட்டேன். மலர்கள் உலர்ந்து விட்டன. செடிகள் உதிர்ந்து விட்டன.

அவர் தாயார் சொன்னார் நீ இரவு பகலாக தோட்டத்தில் இருந்தாய். என்னதான் செய்து கொண்டிருந்தாய்.

அவர் சொன்னார் நான் ஒவ்வொரு இலையிலும் இருந்த தூசிகளை தட்டினேன். ஒவ்வொரு பூவிலும் நீரை தெளித்தேன் என்னவாயிற்று என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாமே காய்ந்து கொண்டிருக்கிறது.

தாயார் சிரிக்க ஆரம்பித்தார். பிறகு சொன்னார் நீ ஒரு முட்டாள். அவைகளுடைய வாழ்க்கை என்பது பூக்களிலும், இலைகளிலும் இல்லை. அவைகளுடைய வாழ்க்கை பார்க்க முடியாத வேர்களில் இருக்கிறது.

அவர் வேர்களுக்கு நீர் வார்க்கவேயில்லை. அவர் இலைகளையும், பூக்களையும் மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தார். அவர் அதிலிருந்து தூசிகளைத் துடைத்துக் கொண்டிருந்தார். அவைகள் மீது அவர் நீரை தெளித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு சின்ன குழந்தை, அதனால் அவரால் வேர்களைப் பார்க்க முடியவில்லை.

வேர்களைப் பற்றிய அடிப்படை எண்ணமே அவருக்குத் தோன்றாமல் போய்விட்டது. பார்க்க முடியாததை பற்றி எப்போது தான் யாராவது யோசித்திருக்கிறார்கள். நம்மால் பார்க்க கூடியதைத்தான் நாம் யோசிக்கிறோம். அதன் உயிர் பூமிக்கடியில் இருக்கும் வேர்களில் தான் இருக்கிறது என்கிற உண்மை அவருக்கு முற்றிலுமாக தெரியவில்லை. அவைகளுக்கு நீர் கிடைத்தால், பூக்களுக்கும், இலைகளுக்கும் தானாகவே நீர் கிடைத்து விடும். பூக்களுக்கும், இலைகளுக்கும் நீரிட்டால், வேர்களுக்கு நீர் கிடைக்காது.

மாசேதுங் ஒரு குழந்தை. வாழ்க்கை என்கிற தோட்டத்தில் நாம் எல்லாருமே குழந்தைகள். நாம் இலைகளையும், பூக்களையும் கவனித்துக் கொள்கிறோம். நாம் வேர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அதற்கு மாறாக பார்க்க முடியாதது எப்படி இருக்க முடியும் என்று நாம் கேட்கிறோம். ஆனால் மனிதனுக்குள் இருக்கும் உள்ளுணர்வு தான் வேர்கள். அங்கு தான் மனிதனின் வேர்கள் இருக்கிறது. ஆனால் அது தெரிவதில்லை.

வேர்கள் எப்போதும் தெரியாது. அதன் வேலைகள் கண்ணுக்குப் புலப்படாது. தன் வேர்களை கவனித்துக் கொள்பவனின் வெளி வாழ்க்கையில் பல மலர்கள் பூக்கும். பல அழகுகள் அவன் வாழ்க்கையில் வெளிக்காட்டும். அதிகமான உண்மையும் பல பாடல்களும் அவர் வாழ்க்கையில் பிறக்கும். ஆனால்  உள் வேர்களை மறந்து, வெளியிலிருக்கும் பூக்களையும், இலைகளையும் கவனிப்பதில் மும்முரமாக இருந்தால் வாழ்க்கை உதிர்ந்து போகும்.

நம்முடைய வாழ்க்கையும் இந்த வழியில் உதிர்ந்து விட்டது. பிறகு அந்த உதிர்வை மறைக்க நாம் செயற்கை பூக்களையும், இலைகளையும் சந்தையிலிருந்து வாங்குகிறோம். நமக்குள் இருந்த உண்மையான செடி இறந்து விடுகிறது. மெதுவாக நம்மிடம் போலி இலைகளும், போலிப் பூக்களும் தான் இருக்கிறது. போலி வாழ்க்கையில் எப்படி பேரின்பம் இருக்க முடியும்?  போலியான, பொய்யான வாழ்க்கையிலிருந்து எப்படி நறுமணம் வரும்? போலியான, பொய்யான வாழ்க்கையில் எப்படி சிலிர்ப்பும் நடனமும் வரும்?

அது சாத்தியமில்லை. நம்முடைய வாழ்க்கை என்பது போலியான வெளிப் பூக்களில் இல்லை. அதில் எப்படி நறுமணம் ஏற்படும்? அதனால் தான் நான் உங்கள் அழகை விழிக்க வைத்து, உன் அருவருப்பை மறைக்க வேண்டாமென்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *