தற்காப்பு கலையின் மீது உள்ள ஆர்வத்தால் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்து தற்காப்பு கலை கற்றுக் கொண்டேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு அருகே உள்ள முருகன் ஆசான் பூவங்கா பரம்பு என்ற பகுதியை சேர்ந்த சித்த வர்ம வைத்தியரும், களரி கராத்தே பயிற்சியாளருமான திரு. முருகன் ஆசான் அவர்களை புதிய தென்றலுக்காக சந்தித்தோம்.
நீங்கள் யாரிடமிருந்து களரி தற்காப்பு கலை கற்றுக் கொண்டீர்கள் ?
நான் பாரம்பரியமாக களரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது அப்பா திரு. குமாரசாமி பிள்ளை மற்றும் எனது அண்ணன் சுப்பிரமணியம் பிள்ளை ஆகியோரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். பின்னர் மணலிக்கரையைச் சேர்ந்த ஹனிபா என்பவரிடம் குஸ்தி கற்றுக் கொண்டேன் மற்றும் புது குடியிருப்பு பகுதியை சேர்ந்த கனி என்பவரிடமும் தற்காப்பு கலைகளை கற்று இருக்கிறேன்.
வேறு என்ன தற்காப்பு கலைகளை பயிற்சி செய்தீர்கள்
நாங்கள் நிகழ்ச்சிகளுக்காக களரி முறைகளை விளையாட பல்வேறு இடங்களுக்கு செல்வது உண்டு அப்படி ஒரு முறை கன்னியாகுமரிக்கு சென்ற போது எங்களுக்கு எதிரணியில் விளையாடிய ஒரு பெண் எதிரில் நிற்பவரின் தலையின் பின்பகுதியில் காலால் உதைத்ததை கண்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆகவே அதைப் பற்றி விசாரித்த போது அந்த பெண் கராத்தே கற்றவர் என்று தெரியவந்தது. ஆகவே எனக்கு கராத்தே கலையின் மீது ஆர்வம் தோன்றியது.
எனவே எப்படியாவது கராத்தே கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சிக்கு அருகில் உள்ள அங்கமாலி என்ற பகுதியில் உள்ள ஜோனி ஆபிரகாம் என்ற மாஸ்டரிடம் கராத்தே பயிற்சியில் சேர்ந்தேன். என்னை பற்றி முழுவதும் கேட்டு தெரிந்து கொண்ட அவர் நான் கராத்தே கலைகளை முழுவதுமாக கற்றுத் தருகிறேன். அப்படி கற்றுத் தர வேண்டும் என்றால் 15 வருடங்கள் என்னை விட்டு பிரிந்து செல்லக்கூடாது. மேலும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒப்பந்தம் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அந்த ஒப்பந்தத்தை நான் ஏற்றுக்கொண்டு அவரிடம் தொடர்ந்து பயிற்சி பெற்றேன். அப்போது பல்வேறு போட்டிகளை கலந்து கொண்டிருக்கிறேன். அந்த கால போட்டிகள் என்பது அதிகம் விதிமுறைகள் இருக்காது ஃபுல் காண்ட்ராக்ட் முறையில் நேரடியாக மோதுவது போன்றதாகும். இது மிகவும் அபாயகரமானது என்றாலும் நான் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்று வந்தேன்.
15 ஆண்டுகால ஒப்பந்தம் முடிந்த பிறகு நான் ஊருக்கு வந்து எனது பாரம்பரிய கலையான களரி கற்றுக் கொடுத்து வருகிறேன்.
தற்காப்பு கலை வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஏதேனும் உண்டா
ஒருமுறை அரண்மனை பகுதியில் ஒரு இடத்திற்கு சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு பிரபல ஆசானிடம் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அவர் எனது குஸ்தி திறமையை பற்றியும் எனது குஸ்தி ஆசானை பற்றியும் விசாரித்தார். நான் எனது குஸ்தி ஆசானை பற்றி கூறினேன். ஆனால் அவர் இளக்காரமாக பதில் சொன்னதோடு என்னை அவருடன் கையை பிடித்து செயல்முறை காட்டுமாறு கூறினார்.
நானும் வேறு வழி இன்றி அவருடன் போட்டியில் ஈடுபட்டேன் அதில் அவர் கீழே விழுந்து தோல்வியடைந்தார் இந்த சம்பவம் எனது வாழ்நாளில் மறக்க முடியாததாகும்.
களரியில் நீங்கள் எந்த முறையை கடைப்பிடித்து வருகிறீர்கள் இதில் உள்ள பயிற்சி முறைகள் என்னென்ன?
நாங்கள் பின்பற்றுவது வடக்கன் களரி முறையாகும். இந்த களரி முறையில் அடிமுறை, ஒற்றை கம்பு ,இரட்டைக் கம்பு, கத்தி, வெட்டு கத்தி சுருட்டு வாள், சிரமம் போன்ற பல பயிற்சிகள் உண்டு.
தங்களுக்கு பிடித்த சுவடு முறை எது
எனக்கு மிகவும் பிடித்தது அங்கச்சுவடு 68 ஆகும். இந்த முறையில் அங்கம் அறுபது மற்றும் சுவடு எட்டு என்ற பயிற்சி முறையும் உண்டு.
களரி நிகழ்ச்சிகளுக்காக எந்தெந்த இடங்களுக்கு சென்று இருக்கிறீர்கள்?
கேரளா யூனிவர்சிட்டியில் களரி நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறோம். கல்லங்குழி, காஞ்சங்கோடு, நாகர்கோயில் போன்ற பல இடங்களுக்கு நிகழ்ச்சிகளில் விளையாடுவதற்கு சென்றுள்ளோம்.
களரி கலையில் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான நடைமுறைகள் தற்காப்பு கலைகளில் பின்பற்றப்படுகின்றன.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் தொடையை தட்டி விளையாடினால் அது சவால் விடுவது போன்றதாகும் என்பதால் அதற்கான செய்முறையை தனியாக செய்து காட்ட வேண்டும். அதேபோன்று சில இடங்களில் ஒரு கையாலும் சில இடங்களில் இரண்டு கைகளாலும் கம்புகளை சுற்றுவார்கள்.
உங்களது சீடர்களில் மிக முக்கியமானவர்கள் யார் ?
எனது முக்கியமான சீடர்கள் அசோகன், மோகன், பிரபு, சிவானந்தன், செல்வராஜ் ஆகியோர் ஆவார்
தற்காப்பு கலைக்காக வாழ்க்கையில் பல ஆண்டுகளை செலவழித்த ஆசான் திரு. முருகன் அவர்கள். தற்காப்பு கலைக்கு மேலும் பல சேவைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம்.
பேட்டி கண்டவர்
ஜி. ஜெய கர்ணன், இணை ஆசிரியர்,
உதவி: திரு. C. முருகன் அவர்கள்
Leave a Reply