வீரனாக ஆவதற்காக களரி படித்தேன்    களரி ஆசான் பூராடன் பேட்டி

வீரனாக ஆவதற்காக களரி படித்தேன் களரி ஆசான் பூராடன் பேட்டி

  • By Magazine
  • |

வீரன் ஆவதற்காக ஆசைப்பட்டு களரி கலையை படித்தேன் என்கிறார் 85 வயதான பூராடன் ஆசான் அவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் எஸ். டி. மங்காடு, அருகே பருத்திவிளை என்ற கிராமத்தில் உள்ள  அவரது வீட்டில் புதிய தென்றலுக்காக சந்தித்தோம் .

தள்ளாத வயதிலும் படிக்கட்டு இல்லாத தனது பழைய வீட்டில் இருந்து தனியாக இறங்கிவந்து தன்னம்பிக்கையுடன்    வீரமாக அவர் பேட்டி கொடுத்தார். இதோ அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்..

நீங்கள் களரி கலையை பயிற்சி செய்ய காரணம் என்ன ?

எனக்கு சுமார் 20 வயதாக இருக்கும்போது அந்த காலத்தில் எங்கள் ஊரில் அப்பி நாடான் ஆசான் என்று ஒரு ஆசான்  இருந்தார்  அவரிடம் பயிற்சி பெறும் ஒரு சிலர் மட்டும் வீரர்களாக திரிந்தனர் அவர்களை பார்க்கும்போது எனக்கும் வீரனாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது ஆகவே அந்த ஆசானிடம் சென்று உங்கள் மாணவர்கள் மட்டும் ஏன் வீரர்களாக திரிகிறார்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் அவர்கள் என்னிடம் களரி மற்றும் வீர விளையாட்டுகளை பயிற்சி செய்து வருகின்றனர் ஆகவே அவர்கள் வீரர்களாக திரிகின்றனர் என்றார்

அதற்கு நான் நானும் உங்களுடன்  சேர்கிறேன் எனக்கும் களரி போன்ற வீர விளையாட்டுகளை எனக்கும் கொஞ்சம் கற்றுத் தாருங்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். பின்னர் எனக்கு ஒற்றை சுவடு, அடிமுறை, வர்மம் போன்றவற்றைக் கற்றுத் தந்தார்.

பின்னர்  திருவனந்தபுரம் அருகே உள்ள நாலு கெட்டு என்ற பகுதியை சேர்ந்த ராமு ஆசான் என்பவரிடம் சாமி வழி சிரமம் கற்றுக் கொண்டேன்.

அதன் பின்னர் அம்சிகா குழி என்ற பகுதியைச் சேர்ந்த தேசிங்கு ஆசான் அவர்களிடம் கர்நாடக வழி மற்றும் ஒற்றை சுவடு, ஆகிய முறைகளை கற்றுக் கொண்டேன்.

குழிவிளை பகுதியைச் சேர்ந்த சுப்பையா பயில்வான் என்பவரிடம் குஸ்தி கற்றுக் கொண்டேன் . மேலும் ஓலத்தாணி என்ற பகுதியை சேர்ந்த பவுல் ஆசான் என்பவரிடம் அடிமுறை கற்றுக் கொண்டேன்.

தாங்கள் கற்றுக் கொண்ட தற்காப்புகலை தங்களுக்கு வாழ்க்கையில் பயன்பட்டு உள்ளதா?

ஒரு முறை எங்கள் பகுதியில் சாலை அமைக்கும் போது ஏற்பட்ட கும்பல் சண்டையில் பலர் ஒன்று சேர்ந்து என்னை தாக்க வந்தனர் அப்போது நான் கற்றுக் கொண்ட தற்காப்பு முறையின் மூலம் அவர்களிடமிருந்து தப்பித்தேன்,

இன்னொரு முறை எனது நண்பர் ஒருவரை அடிக்க பலர் சூழ்ந்து கொண்டனர். அப்போது அங்கு சென்ற நான் தரையில் கிடந்த வெள்ளை கல்லை எடுத்து மொறுமொறுவென வாயில் வைத்து கடித்துக் கொண்டு முறைத்து அவர்களை பார்த்தேன். அவர்கள் ஏற்கனவே என்னை பற்றி தெரிந்து கொண்டதால் எனது தோரணையை பார்த்து பயந்து ஓடி விட்டனர். இப்படி பல இடங்களில் நான் கற்றுக் கொண்ட தற்காப்புகலை எனக்கு பயன்பட்டுள்ளது.

வேறு ஏதாவது ஆசான்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் உங்கள் நினைவில் உள்ளதா?

எனக்கு முதலில்  களரி அடிமுறைகளை கற்றுத் தந்த அப்பி நாடான் ஆசானை பற்றி மறக்க முடியாத ஒரு சம்பவம் எனது நினைவில் எழுகிறது.

இந்த ஆசான் அவர்களின் ஒரு மகளை புதுக்கடை அருகே திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். அந்த வீட்டின் அருகில் உள்ள ஒரு ரவுடி தினமும் ஆசானின் மகள் வீட்டாருடன் தகராறு செய்து வந்தார். இதை கேள்விப்பட்ட ஆசான் தனது இரு மகன்களுடன் ஒரு முறை தனது மகளின் வீட்டுக்கு சென்று முற்றத்தில் அமர்ந்திருந்தார்.

பின்னர் தனது மகன்களிடம் பெட்டகம் அடியுங்கள் என்று கூறினார். அவர்கள் பெட்டகம் என்ற களரி அடிமுறையின் ஒரு சுவடு முறையை செய்து காண்பித்தார்கள்.

அந்தச் சுவடு முறையானது அதனை தொடங்கி செய்து முடிக்கும் போது ஒருவர் முதுகுடன் மற்றொருவரின் முதுகு ஒட்டி இருக்கும் அது அந்த சுவடுமுறையின் மிகவும் சிறப்பம்சமாகும்.

இதனைக் கண்ட அந்த ரவுடி அன்றுடன் ஆசனின் மகள் வீட்டாருடன் சண்டை போடுவதை நிறுத்திக் கொண்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அந்த ஆசானின் கலை திறமையும் அறிவு கூர்மையையும் காட்டுகிறது.

உங்களது உணவு முறை என்ன?

நான் மரவள்ளி கிழங்கு, இளநீர், கருப்புக்கட்டி போன்றவற்றை உணவாக உண்பேன். எனது உடல் ஆரோக்கியமாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

                ஆகவே எனக்கு சாவு என்று ஒன்று வரும் என்பதை நான் ஒருபோதும் நம்பியதே கிடையாது. எனக்கு சுமார் 60 வயது ஆன பின்னர் தான் சாவு என்ற ஒன்று எனக்கும் வரும் என்று நம்பினேன்.

தங்களது கலைத்திறமையை யாராவது பாராட்டி உள்ளார்களா?

எனது கலைத்திறமையை பாராட்டி பண்ணி கோடு எந்த இடத்தில் நடைபெற்ற 108 ஆசனங்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் திருவாங்கூர் மகாராணி லட்சுமி பாய் தம்பிராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார் . அது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும் என்றார் அவர்.

அவர் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம்.

பேட்டி கண்டவர்

ஜி. ஜெய கர்ணன், இணை ஆசிரியர்,

உதவி: திரு.மு. ராஜகோபால், வைத்தியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *