பொரி உருண்டை

பொரி உருண்டை

  • By Magazine
  • |

– கை. செல்லத்தங்கம்

வெளியூரில் இருக்கும் என் மகனிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அம்மா உங்க பேரன் உங்ககிட்ட பேசணுமாம் கொடு என்றேன். என்பேரன் ஆதினியன் பாட்டி எனக்கு பொரி உருண்டையும் காசிமுறுக்கும் வேண்டும் என்றான். என்னப்பா கேட்கின்றாய் என்றேன். எங்க அப்பாவுக்கு அவர்கள் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போது அவங்க தாத்தா பொரி உருண்டையும் காசிமுறுக்கும் தானே வாங்கிக் கொடுத்தார்களாம். அது எனக்கும் வேணும். தாத்தாக்கிட்டே சொல்லி வாங்கித் தாங்க. நாங்க அடுத்த வாரம் அங்கே வருவோம்ல அப்போ வேணும் என்றான். சரிப்பா என்று அவன்கிட்டே சாப்பிட்டியா! நல்லாப் படி… தங்கச்சி என்ன செய்றா என்று கேட்டபின் அப்பாவிடம் போனைக் கொடு என்றேன். என்ன மகனே அவன் கேட்கிறான் என்றேன். அம்மா எப்பவும் மிட்டாய் வேணும், ஸ்நாக்ஸ் வேணும்னு சொல்வான். நான் அதிகமாக வாங்கிக் கொடுக்காமல் பழங்கள் தான் வாங்கி கொடுப்பேன். ஒருநாள் நீங்க சின்னக் குழந்தையாக இருக்கும் போது ஸ்வீட் சாப்பிட மாட்டீங்களான்னு கேட்டான். நான் எங்கள் அப்பா அம்மா கடலை மிட்டாயும், பொரி கடலையும் வாங்கி தருவாங்க. எங்கள் தாத்தா பாட்டி பொரி உருண்டையும், காசிமுறுக்கும் வாங்கித் தருவாங்க. எங்கள் தாத்தா சந்தைக்கு போயிட்டு வருகிறது வரை நாங்கள் வாசலிலே காத்திருப்போம். தாத்தா வந்த உடன் வாங்கிச் சாப்பிடுவோம். அதுக்க ருசியே தனிதான் என்றேன். அன்று முதல் என்கிட்டே கேட்டுக்கிட்டே இருந்தான். இங்க அந்த மாதிரி பொரி உருண்டைக்கு நான் எங்கே போவது. அதைத் தான் உங்ககிட்ட கேட்கிறான் என்றான்.

ஆம் இப்போது போல இல்ல. என் குழந்தைகள் சின்னவங்களாக இருக்கும் போது விடுமுறை என்றாலே எங்க அம்மா வீடு தான். கோவில் விசேசம்னா பிள்ளைகளை கூட்டிக்கிட்டு போயிடுவோம். உறவுத் திருமணமா பிள்ளைகளுக்கு லீவு தான். ஆனால் இப்போதெல்லாம் என் பேரப் பிள்ளைகளை ஒரு இடமும் கூட்டிட்டு போறதில்லை. உடம்புக்கு சரியில்லன்னா மட்டும் தான் லீவு. அதுவும் லேசாக இருந்தால் மாத்திரை மருந்தை கொடுத்து அனுப்பிடுவாங்க. எங்க வீட்டிலே நானும் எங்க அக்காவும் பிள்ளைகளோட போயிடுவோம். என் தம்பிங்களுக்கு திருமணம் ஆகல. அப்பா சந்தையிலே சின்ன வியாபாரம். வாரம் நாலு நாள் சந்தை கூடும். போயிட்டு வரும் போது பிள்ளைகளுக்கு அரிசிப்பொரி, உருண்டை வெல்லம் சேர்த்தது சுவையாக இருக்கும். அதுக்க கூட சின்னச் சின்ன அரிசி முறுக்கு அதைத் தான் வாங்கி வருவாங்க. அதைத் தான் என் மகன் சொல்லியிருக்கான். சரி வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிக்கிட்டு இருந்தேன். நானும் என் கணவரும் கடைத் தெருவில் தேடிப் பார்த்தோம். அதை மாதிரி கிடைக்கல. சாயப்பொடியும் சேர்த்து கலர் கலரா பொரி உருண்டைகள் தான் இருந்தன. அதிலே சிலவற்றை வாங்கினேன். என் கணவர் சொன்னார் பொரி உருண்டை செய்வது என்ன பெரிய காரியமா செய்து பாருன்னு சொன்னார். நல்ல பெரிய அரிசியை பக்குவமாக வறுத்து வெல்லபாகில் சேர்த்து இளஞ்சூட்டில் உருண்டையாக பிடித்து வைத்தேன். சின்னச் சின்னதாய் முறுக்குகள் பிழிந்தேன். அரிசியை வறுத்துப் பொடி செய்து கருப்பட்டிப் பாகு சேர்த்து உருண்டை செய்தேன். ரவா லட்டு மாதிரி அரிசி லட்டு தான். பேரக்குழந்தைகள் கேட்பதை வாங்கியோ, செய்தோ  கொடுப்பதில் கிடைப்பது ஒரு பெரிய மகிழ்ச்சி தான். என் மகனும் குடும்பத்தோடு வந்தான். வந்தவுடன் முதல் கேள்வியே தாத்தா பொரி உருண்டை வாங்கி வச்சிருக்கீங்களான்னு தான். நான்கு நாட்கள் ஊரில் நின்றனர். கோவில், குளம் என்றும் அத்தை வீடு, சித்தப்பா வீடு என்று சென்றனர். அங்கே உள்ள பிள்ளைகளிடம் என் பேரன் பொரி உருண்டை கதை தான். அவனுக்கு அதன் சுவை பிடித்து போனது. நானும் என் கணவரும் பேரக்குழந்தைகளிடம் அவங்களோட அப்பா அம்மா என்ன என்ன பழக்கங்களோட இருந்தாங்க.. எப்படி படிச்சாங்க.. பெரியவர்களை மதித்தது, உறவுகளிடம் பழகிய வீதம் எல்லாம் சொல்லிக் கொடுத்தேன். ஊருக்கு போகும் போது என் பேரன் பாட்டி எங்க அம்மாவுக்கும் பொரி உருண்டை செய்யச் சொல்லிக் கொடுங்க என்றான். நான் அம்மாவுக்கும் தெரியும் சொல்லிக் கொடுத்தாச்சின்னு சொன்னேன். மகிழ்ச்சியோடு சென்றான் என் பேரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *