மான்விழி டீச்சர்

மான்விழி டீச்சர்

  • By Magazine
  • |

N.செல்வி ஞானதாஸ்

மான்விழி அழகிய புன்னகையுடன் வலம் வந்தாள். அவள் வேலை பார்க்கும் பள்ளியில். ஆசிரியைகளுள் அவளைத்தான் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவர் மனதையும் கவர்ந்திருந்தாள். அவளது மனதில் மென்மையை அவளது பேச்சே பிரதிபலிக்கும்.

  பள்ளியில் பெரும்பாலான குழந்தைகள் எனக்கு வகுப்பு ஆசிரியராக மான்விழி ஆசிரியை வர வேண்டுமென தலைமை ஆசிரியரிடமே கேட்டு விட வேண்டும் என தலைமை ஆசிரியரின் அறையின் பக்கம் வரை சென்று விட்டு ஓடி விடுவார்கள் அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு மான் விழி ஆசிரியையை ரொம்ப பிடிக்கும். குழந்தைகளின் பிறந்தநாள் என்றால் காலையிலேயே மான்விழியிடம் ஆசீர்வாதம் வாங்க வந்து விடுவார்கள். புத்தாடையுடனும் கையில் இனிப்புடனும் மலர்ந்த முகத்துடனும் வரும் பிறந்தநாள் குழந்தையுடன், ஒரு நட்பு கூட்டமே வரும் எனக்கு என்று பிறந்தநாள் என்றவுடன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி ஒரு இனிப்பை எடுத்து குழந்தையின் வாயில் கொடுத்து எப்பவும் நல்ல சந்தோஷமாக இருக்கணும் என சொன்னவுடனே, மற்ற குழந்தைகளும் டீச்சர் எனக்கு உங்க ஆசீர்வாதமும் ஒரு முத்தமும் வேண்டும் என்பார்கள். மான்விழியும் மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் தன்னுடைய அரவணைப்பையும் ஆசீர்வாதத்தையும் முத்தத்தையும் கொடுத்து அனுப்பி விடுவாள்.

    இதை பார்த்த மற்ற ஆசிரியர்கள் முதலில் வியந்து பார்த்து சிரிப்பார்கள். பின்பு ரசிப்பார்கள். மான்விழி வெளியில் செல்லும் இடங்களில் மாணவர்கள் கண்டால் ஓடிவந்து கை கோர்த்துக் கொள்வார்கள். பள்ளி வளாகத்தில் வணக்கம் செலுத்தியும், புன்னகைத்தும் செல்வார்கள். அவளுக்கு மனதில் ஒரு பாரமும் இல்லை அதனால் குழந்தைகளுள் குழந்தையாக அவள் மாறிவிட்டாள்.

     இவளுக்கும் திருமணம் முடிந்து இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களும் இதே பள்ளியில் தான் படிக்கிறார்கள். வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் அனைத்து ஆசிரியர்களும் ஒன்றாக இருந்து கலந்துரையாடவும், உணவு அருந்தவும் ஒரு அறை உண்டு. அனைவரும் அதிலிருந்து பேசி மகிழ்வார்கள். ஒரு நாள் ஆசிரியை மஞ்சுளா ஆரம்பித்தார், மான்விழியை எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும். அவங்களை மாதிரி யாருமே இருக்க முடியாது என்று சொன்னவுடனே, மான் விழியின் மனம் அவ்வளவு ஒரு குளிர்ச்சி அடைந்தது. ஆசிரியை சனாவும் ஒவ்வொரு செயலாக சொல்லி பாராட்டி விட்டு, என் மகளும் மான்விழியை பெருமையாக கூறினாள். மாணவர்கள் என்ன சேட்டை செய்தாலும் உங்களுக்கு கோபமே வராதா என்றார். மற்றுமொரு ஆசிரியை, மூக்கு ஒழுகும் குழந்தைக்கு மூக்கு பிடித்து விடுவது, உணவு வாரி கொடுப்பது, கை கழுவி விடுவது, இதெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. நான் செய்ய மாட்டேன் என்றார்கள்.

   இவ்வாறாக ஒவ்வொன்றாக மாறி மாறி பேசிக்கொண்டு இருந்தார்கள். அலுவலகப் பணியாளரான சுந்தரிக்கு கணவர் இல்லை. இரண்டு மகள்கள் ஒரு மகள் கல்லூரி முடித்து திருமணம் ரெடியான நிலையில் உள்ளார். இளைய மகள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறாள். வேலை பார்ப்பது தனியார் பள்ளி என்பதால் வருமானம் குறைவு. அது மட்டுமல்ல அவர்களுக்கு உறவினர்கள் நிறைய பேர் இருந்த பிறகும், திருமணம் நடத்த யாரும் முன் வரவில்லை. மான்விழி வீட்டில் தன் கணவரிடம் இவர்களின் நிலையினை எடுத்துக் கூறி திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்தனர். உடனிருப்பையும் உடல் உழைப்பையும் கொடுத்தனர். திருமணம் நல்ல முறையில் முடிந்தது. பின்பு மஞ்சு ஆசிரியை,மான்விழியும் கணவர் ஆயிரத்தில் ஒருவர் இந்த நல்ல குணம் யாருக்கும் வராது என புகழ்வார்கள். உங்களுக்கு ஆண்டவர் ஒரு குறையும் வைக்க மாட்டார் எனச் சொல்லும் போது உண்மையாகவே இவர்கள் எங்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளார்கள் என நினைத்து பெருமைபட்டாள் மான்விழி. அலுவலகப் பணியாளர் சுந்தரிக்கு உணவு சமைக்க உடல் ஒத்துழைக்கவில்லை. அதனால் இளைய மகளை விடுதியில் சேர்த்தாள் சுந்தரி. 

     இந்த நிலைமையை கண்டு மான்விழி அவளுக்கு காலை உணவும் மதிய உணவும் தன் உணவு உடனே சேர்த்து சமைத்துக் கொண்டு வந்தார். இரவுக்கான குழம்பும் கொடுத்து அனுப்புவாள். சுந்தரிக்கு மிகுந்த மகிழ்ச்சி உறவினர்கள் யாரும் எட்டிப் பார்ப்பதே இல்லை. திருமணமான மகளும் அவர்களுக்கு தன் உடன் இருப்பைக் காட்ட முன்வரவில்லை. மகளும் தாயானாள் வளைகாப்பு நிகழ்வும் மான்விழியால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மிகச் சிறப்பாக நடந்தது. அவள் அனைத்தையும் ஒரு நாளும் பாரமாக நினைத்து செய்யவில்லை. சக ஆசிரியர்கள் உனக்கு வேறு வேலையே இல்லையா என கூறினாலும் மான்விழிக்கு எதிர்மறை யோசனை வந்ததே இல்லை. சிரித்து விட்டு  கடந்து போய்விடுவாள். இவளுக்கு தெரியாமலேயே இவளால் யோசிக்க முடியாத மனதிலும் நினைக்காத விஷயங்களை கூட இவள் கூறியதாக கூறி இருந்தார் மஞ்சுளா ஆசிரியர். மற்றவர்கள் நம்பும் விதமாக பல பழிகள். இது மான்விழிக்கு சம்பந்தம் இல்லாதது. ஆனால் மான்விழியின் மனதை மிகவும் பாதித்தது. ஆனால் இது எதனால் என்று மான் விழியால் பல நாட்கள் பல மாதங்கள் கடந்த பின்பு தான் உணர முடிந்தது. அவளின் சுற்று வட்டாரத்தை குறைப்பதற்கும், அனைவரும் அவளை தனிமைப்படுத்தவும், வெறுக்கவும் இந்த பொய் புகார்கள். அவள் காதில் வந்த வீண்பழிகள் அனைத்துமே.

   கணித ஆசிரியை சனாவின் மகள் மான்விழியின் வகுப்பு தான். அவள் எப்பொழுதும் மான்விழியையே பற்றி புகழாரம் கொட்டுவாள் என்ற புகழ் கேட்டதும், ஆசிரியர் மஞ்சுளாவால் தாங்க முடியாமல், சனாவிடம் நேரே சென்று, உங்கள் மகளை வகுப்பு மாற்றுங்கள் மான்விழி அவளை கெடுத்து விடுவாள். கெட்ட வார்த்தை பேசி அவளை அடித்தாள் நான் அதை பார்த்தேன் வெளியே உன்னிடம் நடிக்கிறாள் என்றாள். சனாவின் மகள் சனா கேட்ட உடனே மறுத்தாள் இல்லை அம்மா மான்விழி டீச்சர் என்னை அடிக்கவில்லை கெட்ட வார்த்தை பேசவில்லை என்று அழுதாள். ஆனால் சனா மகளின் பேச்சை விட மஞ்சுளாவின் வஞ்சகப் பேச்சை நம்பினாள். மகளை வகுப்பு மாற்றி விட்டு மான் விழியிடம் பேசக் கூடாது என எச்சரித்தார். மான்விழி காரணமறியாமல் ஏன் வகுப்பு மாற்றினீர்கள் என சனாவிடம் கேட்டதற்கு அவளுக்கு அந்த வகுப்பு பிடிக்கவில்லையாம் என மஞ்சுளாவை விட்டுக் கொடுக்காமல் கூறினாள் சனா.

    நாட்கள் செல்லச் செல்ல மஞ்சுளா பல சகுனி வேலைகள் செய்து பலரை மான் விழியிடமிருந்து பிரித்து விட்டார். நாட்கள் பல கடந்து மாதங்களான மாதங்கள் பல கடந்து ஆண்டுகளாயின. இப்போதும் சுந்தரிக்கு உணவு தயாரித்து கொண்டு வருவது மான்விழிதான்.

     சுந்தரி இளைய மகளுக்கு திருமணம் பார்த்தார்கள். இப்போது மஞ்சுளாவின் வேலை இங்கு செயல்பட்டது.  திருமணம் முடிந்ததும் சுந்தரியோ இரு மகள்களோ மான்விழியிடம் பேசுவது இல்லை. மான்விழிக்கு முதலில் மனதில் வேதனை கொடுத்தாலும் ஆறுதலை தானே தேடிக் கொண்டாள். பேசாத காரணத்தை அறிய நிறைய நேரம் ஆகாது. அனைத்துப் பொய் மூட்டைகளும் வெளியே கொண்டு வர முடியும் ஆனால் அதற்கு மனம் வரவில்லை. ஒருவரது பொய்யான பழி எத்தனை பேரை குழப்பி, எத்தனை பேரை நம்ப வைப்பதுடன், தேவையில்லாத மன வேதனையை தரும் என்பது அவர்கள் யோசிப்பதே இல்லை.       இப்போது ஒவ்வொரு ஆசிரியையும் மஞ்சுளா தங்களைப் பற்றி புகழாரத்தை புகழ்ந்து கொண்டார்கள் என ஒவ்வொன்றாக கூறினார்கள். ஒருவர் உன்னை போல் யாருக்கும் நோய் இல்லை என்றும், எப்படித்தான் தாங்குகிறாயோ என்றும், ஒருவரிடம் உன்னை போல் யாருக்கும் கஷ்டம் இல்லை எனவும், ஒருவருக்கு உன்னிடம் எல்லோருக்கும் பொறாமை என்றும், ஒருவரிடம் உன்னை விட அழகி வேறு யாரும் இல்லை என்றும், இப்படி சொன்னவுடன் நாம் நம் நிலையையோ, மற்றவர் நிலையையோ யோசிப்பதே கிடையாது.தன்னிலை மறந்து நம்பி அவர்களுக்கு சிம்மாசனம் கட்டி விடுகிறோம். அனைவர் வாழ்விலும் கஷ்டங்கள் உண்டு. கவலைகள் உண்டு. குழப்பங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித நோய்கள் உண்டு. அதை கடந்து வாழ்வதுதான் வாழ்க்கை. புகழாரம் கொட்டுபவர்கள் கூறுவதை நம்பி ஏமாந்து நிற்க வேண்டாம். ஒவ்வொரு புகழிலும் நம்மை நாம் ஒவ்வொரு படி இழக்கிறோம். ஒருவரது செயலுக்கு பாராட்டலாமே தவிர வஞ்சப்புகழ்ச்சி ஆகாது.பிறர் மீது பழி கூறும் யோசிக்காமல் நம்பிவிடக்கூடாது. குற்றம் செய்யாத புன்னகையுடன் மீண்டும் வலம் வந்தாள் மான்விழி. நம்பியவர்கள் பெறலாம் அழியாபுன்னகையை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *