– இரா. அரிகரசுதன்
நீண்ட பாலங்கள்
பரவித் தெரிகின்ற நகரம்
சாலைகளில் மின்னுகிறது
பண்டிகையின் வெறுமை
பத்தி விற்றுக் கொண்டிருந்த
பாட்டி கம்பி மத்தாப்பு
வித்துக்கொண்டிருக்கின்றாள்
துவைத்த சுத்தமான உடையில்
நூறு ருபாய் கேட்டு
வயதான தம்பதியினர்
வலித்த கால்கள் திரியும்
தெருக் கடைகள்
ஏழைகளைக் குறிபார்த்து
கைநீட்டும் யாசகர்கள்
வாழ்த்துகளையும் சிரிப்புகளையும்
யாரும் யாருக்கும் கடத்தாத
தெருக்கள்
அங்கேதான்
மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த
வறுமையை
நான் கண்டு கொண்டேன்
அது
சாபத்தை ஓதி எறிந்து
விளையாடிக் கொண்டிருந்தது
எனக்கு பிடிக்காதது என்னவென்றால்
அது ஆணாக இருந்ததுதான்
அதன் கரத்தை வலிந்து பிடித்து
காட்டிக் கொடுத்தேன்
இங்கு பார்
வானில் வெடிக்கும் பட்டாசுகளை
என்றேன்..
சற்றுநேரம் நின்று பார்த்த
அது
மிச்சமிருந்த சாபங்களை
அதன் மீதும் ஓதி எறிந்தது
பின் என்னைப் பார்த்தது.
என்னவென்றேன்?
நன்மைகள் பெருகட்டும் என்றது,
அவ்வாறே, ஆம் என்றேன் நானும்.
Leave a Reply