கோபக் கடலில் பாசத்தீவு

கோபக் கடலில் பாசத்தீவு

  • By Magazine
  • |

கா. திலிபன், தமிழாசிரியர்

உப்பட்டி, பந்தலூர்,

நீலகிரி – 643 241.

அன்புக்குரிய நண்பன் மகிழனுக்கு,

நெஞ்சம் நெருடலுடன் இந்த மடலை எழுதுகிறேன்.

என்னவோ தெரியலடா வீட்டில் நிலைமை மிகவும் கடினமாக இருக்கிறது. அப்பாவின் கண்டிப்பு அதிகமாகிட்டே போகுது எதற்கும், கோபம்..கோபம்… கோபம்.. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. பேசாமல் தனியாக போய்விடலாமா என்ற எண்ணம் கூட தோன்றுகிறது. என் மனக் கவலையை உன்னிடம் சொல்ல தோன்றியது. வாய்ப்பு கிடைத்தால் விரைவில் சந்திப்போம்.

இப்படிக்கு

உன் உயிர் நண்பன் இனியன்.

கடிதத்தை படித்த மகிழன் இனியனுக்கு பதில் மடல் எழுதினான்.

 பீளமேடு,சோபாநகர், கோவை – 641 004.

என் நெஞ்சார்ந்த நண்பன் இனியனுக்கு,

உன் மனக்கவலை என்னையும் உலுக்கியது. ஆனால் நான் உனக்கு ஒரு உண்மையை சொல்ல வேண்டும். என் வாழ்க்கையில் நான் உணர்ந்த மிகப்பெரிய உண்மை, எல்லா குழந்தைகளுக்கும் உண்மையான ஹீரோ தந்தை தான். ஆனால் சிலசமயம் அவர் வில்லனாக தோன்றுவார். அதை யாராலும் மாற்ற முடியாது. பள்ளிக்காலத்தில் நானும் உன்னை போலவே அப்பாவின் கோபத்தால் துன்பப்பட்டவன். ஒரு பென்சிலை தொலைத்து விட்டால் கூட அப்பாவின் முகம் சுருங்கி என்மீது கடுமையாக கோபப்படுவார். இவ்வளவு கோபம் தேவையா? என் அப்பாவிற்கு. பிள்ளைகளை நேசிப்பவர் தான் நல்ல தந்தை என்று எண்ணிய வயது அது. இரவு உறக்கத்திற்கு பிறகு வழக்கம் போல் பள்ளிக்கு சென்றேன். நினைவிருக்கிறதா? அன்று முதல் வகுப்பில் தமிழ்ஆசிரியர், திருக்குறள் நடத்தினார்.

அறத்துப்பாலில் உள்ள, இல்லறவியல் அதிகாரத்தில், மக்கள் பேறு என்னும்

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்டதாய்” என்று தமிழாசிரியர் கூறிய விளக்கம், என் கண் முன்னே நின்றது. இக்குறளின் பொருள் நல்லமகனை பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் போது, அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட, அதிகமான மகிழ்ச்சியை அந்ததாய் அடைவாளாம்.

இந்த குறளின் பொருள் என்னவோ, என் கண்முன்னே என் அம்மாவும், அப்பாவும் காட்சியாகவே தோன்றினர், என்னை அறியாமல் என்கண்கள் கலங்கி நின்றது.

ஒரு குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செல்ல, தந்தை படும்பாடு பெரும்பாடு. வாயைக் கட்டி சம்பாதித்த பணத்தைக் கொண்டு தான் தன் குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டெடுக்க முடியும். தன் பிள்ளைகள் மீது இருக்கும் ஒட்டுமொத்த பாசத்தையும் ஒரு கோபமான பார்வைக்குள் மறைத்து விடுகிறார் என் தந்தை. அவரின் சந்தோசம், வருத்தம், கோபம், கனவு, எல்லாமே அந்தசிறு கூடுதான். கால்கடுக்க உடல்வருத்தி, விடுமுறையின்றி, வேலை செய்து பெற்ற தினக்கூலி பணத்தில் வாங்கி வந்த அந்த சிறு தின்பண்டத்தைத் திமிராகக் கொடுப்பார் மனைவியிடம். அதை ஆசையோடு வாங்கி உண்ணும் குழந்தைகளை காணும் பொழுது, அவர் கண்களில் வெள்ளோட்டம் பாய்ந்து வரும் கண்ணீராக வெள்ளோட்டத்தை தடுக்க முடியாது என்று யார் சொன்னது? அவ்வளவு எளிதாக தடுத்து விட்டார் என்   தந்தை.

                ஒரு நாள் பக்கத்து வீட்டு ராஜபாண்டி, ஏம்னே ஏன் இப்படி ஓடிஓடி வேலை செஞ்சி என்னன்னே பண்ண போற?என்றார். அதற்கு என் தந்தை, எல்லாம் என்பசங்களுக்குத் தான்… எப்படியாவது படிக்கவச்சு கரை சேர்த்துட்டோம்னா என பெருமூச்சு விட்டு, நான்பட்ட கஷ்டமெல்லாம்அவங்கபடக் கூடாது என்றார்.

                ஆனால் ஒரு பென்சிலைத் தொலைத்துவிட்டு வந்ததற்கு அப்பாவுக்கு ஏன் இப்படி கோபம் வந்ததுன்னு இப்போதான் புரியுது ஒரு பென்சில் வாங்குற காசு அப்பாவின் தேநீரை மிச்சப்படுத்தியது தான் உழைப்பில் தழைத்த அவர் எடை என்னவோ 50-தான், ஆனால் அசால்டாக தூக்குவார் 80 கிலோ எடையுள்ள வெங்காய மூட்டையுடன் தன்குடும்ப சுமையும் சேர்த்து.

ஒரு நாளில் பலமுறை குளித்திருப்பார் வியர்வையில். கண்களால் பார்க்க முடியாத கஷ்டத்தை அம்மா ஒரு இரவில் கண்டுபிடித்துவிடுவார், கைகால் வலியால் தூக்கத்தில் படும்பாட்டை. எத்தனைநாள் இந்தபோராட்டம்.

ஒரு வழியாக நானும் கல்லூரியில் சேர்ந்து விட்டேன். தந்தையின் இளமைக் காலமெல்லாம் முடிந்து இறுதிகாலத்தில் இருக்கும் பொழுது தன் பிள்ளைகளுக்கு நாம்தானே ஹீரோ என்ற எண்ணத்துடன் தன் முதுமையை மறைக்க நடிப்பார். ஆனால் என்ன செய்வது அறியாத வயதில் கஷ்டப்படாத மாதிரியும், கோபத்தில் வில்லனாகவும், நடித்த நடிப்பு இப்ப ஏனோ? என்னுடைய வளர்ச்சியினால் பயனில்லாமல் போனதோ? ஆனால் நானும் அதை கண்டும் காணாமல் இருப்பது போல நடிக்க கற்றுக் கொண்டேன்.

ஓடி ஆடி வேலை செய்த மனுசன், ஒரு பயணத்தில் என்னை கண்டுவிட்டு ஊர்திரும்பும் போது பேருந்தில் ஏறமுடியாமல், அவர் தவிக்கும் பொழுது அவரின் வயதின் முதிர்ச்சி தெரிய தொடங்கியது. அதைக் கண்டு என்கண்கள் கலங்கி நின்றது. அவரைப் போல நானும் கண்ணீரின் வெள்ளத்தை அடக்கி நின்றேன். என் அம்மாவை காணும் பொழுது ஒருகணம் யோசித்தேன். அவரும் ஒருகாலத்தில் அம்மாவின் மடியில் உறங்கியவர் தானே! ஒவ்வொரு தந்தையும் திருமண வாழ்க்கைக்கு பிறகு, தன்குடும்பத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்து தன் வாழ்க்கையை கழிக்கின்றனர். அதை அறியாத வயதில் எத்தனை முறை அவர்களை காயப்படுத்தினோமோ? இறைவா இதை புரிவதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதே, என்னை நான் நல்லவன் என்று கூறத்தகுமோ? இதனை நான் எவ்வாறு ஈடுகட்டுவது, பயணத்தின் முடிவில் உள்ளது போல் உள்ளதே இந்த வாழ்க்கை,

எனக்கு ஒரு வரம் வேண்டும் எனில், இன்னும் என்தந்தையுடன் சில காலம் வேண்டும் என்று கேட்பேன், ஆனால் “என் கடவுளே என் தந்தையாக” இருக்கும் பொழுது நான் என்ன செய்வது? சில வினாக்களுக்கு விடையே இல்லை.

“என் அருமை நண்பா தந்தையை நேசி” கண்ணாடியின் ஒருபுறத்தை மட்டும் காண்பதால் அதன் மறுபக்கம் தெரிவதில்லை.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

மகிழன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *