பூ.வ.தமிழ்க்கனல்
பேராபத்து ஒன்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்க ஒன்றியஅரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அப்பகுதிமக்களைத் தூக்கமிழக்கச் செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 400 சதுரகிலோமீட்டர் (சுமார் 1 லட்சம் ஏக்கர்) பரப்பளவில் மாலிப்டினம் எனும் அரியவகைத் தனிமம் இருப்பதாகவும் அதனை வெட்டி எடுக்க ஒன்றியஅரசு முடிவு செய்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாலிப்டினம் தனிமம் எடுப்பதற்காக, பழநி வட்டத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய நெய்க்காரப்பட்டி, கரடிக்கூட்டம், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்கம் அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பழநி நகரில் உள்ள இடும்பன் மலை, ஐவர்மலை, இரவிமங்கலம் பகுதிகள் வருவதாகத் தெரிகிறது. பழநி நகரின் மையப்பகுதியில் இடும்பன் மலை உள்ளது.
பாப்பம்பட்டி அருகே உள்ள ஐவர்மலை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதி பழநி, கொழுமம் சாலையில் பாப்பம்பட்டிக் கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஐவர்மலை. சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து உள்ளிட்ட பழங்கால இலக்கியங்களில் ‘ஐயிரைமலை” என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இம்மலையில் சுமார் 1,200 வருடங்கள் பழமையான சமணர் சிலை உள்ளது. தற்போது இங்குள்ள சமண சிற்பங்கள் யாவும் சேதப்படாமல் இருக்கத் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் ஐவர்மலையைப் பாதுகாத்து வருகின்றனர்.
பழநி அருகே உள்ள இரவிமங்கலம் பகுதியில் சங்ககாலத்தைச் சேர்ந்த 3 இரும்பு உருக்காலைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரும்பு அச்சு உலைகள், இரும்பை உருக்கத் தேவையான சுண்ணாம்புக் கட்டிகள் இன்றளவும் அந்த இடத்தில் காணப்படுகின்றன. இப்பகுதியில் முதுமக்கள் தாழிகள், எலும்புகள், கலயங்கள், பானைகள், ஓடுகள் போன்றவை உடைந்த நிலையில் வெளிப்படுகின்றன. தற்போது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இந்தச் சின்னங்கள் அருகில் காணப்படுகின்றன. 100 ஏக்கர் பரப்பளவில் நெருக்கமாகவும் மீதமுள்ள 100 ஏக்கர் பரப்பளவில் பரவலாகவும் இச்சின்னங்கள் காணப்படுகின்றன. தவிர, இப்பகுதிகள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை.
மாலிப்டினம் சுரங்கம் அமைக்கப்பட்டால் சாதாரணக் கற்சுரங்கம் மற்றும் கிரானைட்டுச் சுரங்கங்கள் போல் அல்லாமல், தங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சூழல் உருவாகும். சுற்றுச்சூழல் பாதிக்கும் என இப்பகுதிமக்கள் மற்றும் விவசாயிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்திற்குப் பல்வேறு விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒன்றியஅரசு இத்திட்டத்தைக் கைவிட மறுத்தால் போராடத் தயாராக உள்ளதாகவும் விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழுவினர் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றியக் கனிமவளத்துறை மற்றும் மாநிலக் கனிமவளங்கள்துறை அமைச்சர்களுக்குக் கடிதம் எழுதி உள்ளார். சமூக வலைதளங்களிலும் தற்போது இத்திட்டத்தின் ஆபத்துகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாலிப்டினம் என்றால் என்ன?
மாலிப்டினம் என்பது ‘விளி” என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுஎண் 42. மாலிப்டினத்தின் அணுக்கருவில் 54 நியூட்ரான்கள் உள்ளன. பண்டைய கிரேக்க மொழியில் ஈயம் போன்றது என்ற பொருள் கொண்ட மாலிப்டாசு என்ற சொல்லிலிருந்து மாலிப்டினம் என்ற பெயர் தோன்றியது. மாலிப்டினத்தின் தாதுக்கள் நீண்ட நெடுங்காலமாக அறியப்பட்டாலும் மாலிப்டினம் 1778-ம் ஆண்டு கார்ல் வில்லெம் சீலே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1781 -இல் முதன் முதலாகப் பீட்டர் யாக்கோபு எயெல்ம் என்பவரால், தனிமமாகத் தனித்துப் பிரித்து எடுக்கப்பட்டது. மாலிப்டினம் தனித்த நிலையில் ஒருபோதும் இயற்கையில் கிடைப்பதில்லை. தூய மாலிப்டினம் வெள்ளி போன்ற வெண்மையான உலோகமாகும். பொதுவாகத் தூள் நிலையில் இது கிடைக்கிறது. எளிதில் இதைத் தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம். எக்கை விட மிருதுவானதாகக் காணப்படுகிறது. தூய நிலையில் உள்ளபோது இதைப் பளபளப்பாக மாற்ற முடியும். வலிமையான இந்த உலோகம் பாரா காந்தத்தன்மை கொண்டதாக உள்ளது. அனைத்துத் தனிமங்களிலும் இது ஆறாவது உயர்ந்த உருகுநிலையைக் கொண்ட தனிமமாக உள்ளது. மாலிப்டினம் உடனடியாகக் கடினமான மற்றும் நிலைப்புத் தன்மை கொண்ட கார்பைடுகளாக மாறி கலப்பு உலோகங்களை உருவாக்குகிறது. இந்தக் காரணத்திற்காக உலகில் உற்பத்தியாகும் பெரும்பாலான மாலிப்டினத்தின் சுமார் 80 சதவீதம் எக்கு உலோகக்கலவைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கொடைக்கானலுக்கு ஆபத்து
மாலிப்டினம் சுரங்கம் அமைக்கப்பட்டால் திண்டுக்கல் மேற்குப் பகுதியில் உள்ளமக்களின் வாழ்வாதாரத்தின் மேல் கொடியதாக்கத்தை ஏற்படுத்தும். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, அப்பகுதிமக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்படும். கொடைக்கானல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கும். தவிர புவியியலில் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தும். மக்களின் வாழ்நிலை வெகுவாகப் பாதிக்கும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ஒன்றியஅரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி, இப்பகுதிமக்களின் வாழ்வாதாரம், மக்களின் விவசாயம் மற்றும் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் அங்குள்ள பல்லுயிர்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்திட வேண்டும்.
Leave a Reply