அழிவின் விளிம்பில் பாரம்பரிய போர்க்கலை பாதுகாக்க முன் வருமா? அரசு…!

அழிவின் விளிம்பில் பாரம்பரிய போர்க்கலை பாதுகாக்க முன் வருமா? அரசு…!

  • By Magazine
  • |

சிரமக்கலை ஆசான் நாணப்பன் பேட்டி

சிறந்த பாரம்பரிய தற்காப்பு கலைகளுள் சிரமக்கலையும் ஒன்று இந்த கலையை கற்றுக் கொள்வது என்பது மற்ற கலைகளை ஒப்பிடும்போது மிகவும் சிரமமானது என்பதாலோ என்னவோ இந்த கலைக்கு சிரமம் என்று நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆசான்களிடம் காணப்படும் இந்த சிரமக்கலை இன்று பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றாலும் ஒரு சிலரிடம் மட்டுமே இன்றும் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட சிரமமான சிரமக்கலையை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிப்பதை தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் சிரம கலை ஆசான்  நன்மணி திரு.நாணப்பன் அவர்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் பலப்பள்ளம் அருகே உள்ள அவரது வீட்டில் வைத்து புதிய தென்றலுக்காக சந்தித்தோம்.

சிரமக்கலை என்றால் என்ன?

சிரமக்கலை என்பது சிறு கம்பை கொண்டு நம்மை தற்காத்துக் கொள்ளும் ஒரு சிறந்த தற்காப்பு கலை ஆகும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சியும் ஆகும்.

 இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் கண் பார்வை மிகவும் கூர்மை அடைகின்றன. உடல் வலிமை பெறுகிறது. உடல் உள் உறுப்புகள் மிகவும் பலமடைகின்றன இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, நினைவுத்திறன், உடல் வலிமை, அறிவு கூர்மை ஆகிய பலன்கள் கிடைக்கிறது

சிரமகலை தற்காப்புக்கு உதவுமா ?

 சிரமக்கலை என்பது முழுக்க முழுக்க ஒரு சிறந்த தற்காப்பு கலை ஆகும். சிரமகலையை பயன்படுத்தி கம்பினால் தாக்கவும், தடுக்கவும் முடியும். சிரமகலை என்பது வர்மக்கலையினை கம்பினால் செய்யும் முறையாகும். ஆகவே தாராளமாக தற்காத்துக் கொள்ளலாம். மட்டுமல்ல வயதான காலத்தில் கம்பு ஊன்றி நடக்கும் காலத்தில் கூட நம் கையில் இருக்கும் கம்பையே ஆயுதமாக பயன்படுத்தி நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்த சிரமக் கலையில் வர்மக்கலையும் இணைந்துள்ளதா?

சிரம கலையில் உள்ள பயிற்சி முறைகள் அனைத்தும் வர்மக்கலையை ஒட்டியே இருக்கும். ஆனால் வர்மம் என்பது யாரையாவது தாக்குவதற்கான கலை அல்ல அது மருத்துவக் கலை ஆகும். ஆகவே இந்த கலையை பயன்படுத்தி வர்ம தூண்டுதல் முறையின் மூலம் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்த முடியும்.

வாள் சண்டைக்கும் சிரம கலைக்கும் தொடர்பு இருக்கிறதா?

வாள் சண்டையிலிருந்து சிரமக்கலை பிறந்ததா அல்லது சிரமக்கலையிலிருந்து வாள் சண்டை பிறந்ததா என்று நினைக்கும் அளவிற்கு இரண்டு கலைகளுக்கும் மிகுந்த தொடர்பு உள்ளது.

சிரம கலையில் பிரிவுகள் உள்ளனவா? நீங்கள் எந்த பிரிவை பயன்படுத்தி வருகிறீர்கள் ?

மற்ற தற்காப்பு கலைகளைப் போல சிரம கலையிலும் பல பிரிவுகள் உள்ளன நடுவூர் கரை சிரமம், சுவாமிவிளை சிரமம், நாலுகெட்டு சிரமம், முச்சாண் சிரமம், வடக்கன் வழி சிரமம் போன்ற பல முறைகள் உள்ளன மேலும் சில முறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. நாங்கள் நடுவூர்கரை பீமன் வழி, குறு தடி, நடசாரி சிரமம் என்ற சிரம கலையை பின்பற்றி வருகிறோம்.

தாங்கள் சிரம கலையை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?

நான் 15 -வது வயதில் சிரம கலையை பலப்பள்ளம் என்ற பகுதியை சார்ந்த பாலையா வாத்தியார் என்ற ஆசானிடமிருந்து கற்றுக் கொண்டேன் அவர் அவரது தாய் மாமா ராமசாமி ஆசான் அவர்களிடம் இருந்து இந்த கலையை கற்று இருக்கிறார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆடப்படும் செடிக்குச்சு என்ற சிலம்ப கலைக்கும் கன்னியாகுமரியின் சிரம கலைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா ?

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஆடப்படும் செடிக்குச்சி என்ற முறைக்கும் சிரமம் என்ற சிரம கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சிரம கலையில் பயன்படுத்தப்படும் கம்பின் அளவு என்ன ?

சாண் சிரமத்தில் எண் சாண் உடம்புக்கு நான்கு கம்பு என்ற முறையில் நான்கு சாண் அளவு உள்ள கம்புகளை பயன்படுத்தி வருகிறோம்.

சிரம கலையில் எந்த வகையான கம்புகள் பயன்படுத்தப்படுகிறது?

களரி, சிலம்பம் போன்ற மற்ற சண்டைக்கலைகளை போன்று பிரம்பு வைத்து சிரமம் விளையாட முடியாது. இதற்கென்று மஞ்சனத்தி கம்பு , ஈருள்ளிமர கம்பு, துவரங்கம்பு , சந்தன கம்பு, அணஞ்சி கம்பு ,காஞ்சிரம் கம்பு ஆகிய பல்வேறு கம்புகளை கொண்டு இந்த சண்டை கலை ஆடப்படுகிறது.

ஆனாலும் மஞ்சனத்தி கம்பு மிகவும் சிறந்தது ஆகும். இந்த கம்பின் மூலம் விளையாடும் போதுதான் சிரம கலைக்குரிய சிறப்பான சத்தம் வெளி வருகிறது. விளையாடவும் இலகுவாக இருக்கும்.

இந்த கம்புகளை எப்படி தயார் செய்வது ?

இந்த கம்புகளை கிளைகளில் இருந்து வெட்டி எடுத்து பயன்படுத்த முடியாது. ஒற்றைக் கம்பாக தரையில் இருந்து முளைத்து வரும் மரத்தை தேர்ந்தெடுத்து வெட்டி அவற்றை பக்குவப்படுத்தி சிரம கம்பு தயார் செய்ய வேண்டும்.

 சிரமக்கலையில் என்னென்ன விதமான தற்காப்பு பயிற்சி முறைகள் உள்ளன ?

சிரமக்கலையில் இல்லாத முறைகளே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு செறிவு வாய்ந்த கலையாக சிரமக்கலை உள்ளது. நாங்கள் பின்பற்றி வரும் சிரம கலை முறையில் ஒற்றைக் கம்பு முறை 12, அழகு சிலம்பம் என அழைக்கப்படும் இரட்டை கம்பு முறை 12, மூன்று கம்பு முறை12 (ஒருவரிடம் இரண்டு கம்புகளும் மற்றவரிடம் ஒரு கம்பும் இருக்கும்) அப்படி 36 விதமான பயிற்சி முறைகள் உள்ளன.

சிரமகலைக்கு சாஸ்திரங்கள் எதுவும் உள்ளதா ?

 சிரம கலைக்கு என்று தனியாக சாஸ்திரம் உள்ளது அந்த சாஸ்திரங்களிலும் சில பிரிவுகள் உள்ளன. நாங்கள் பின்பற்றி வரும் சிரம கலை சாஸ்திரத்தில் 120 பாடல்கள் உள்ளன. இந்த கலையில் 90 விதமான கம்பு முறைகள் உள்ளதாக சாஸ்திரம் கூறுகிறது.

இந்த கலையில் என்னென்ன சண்டை முறைகள் உள்ளன?

இந்த கலையில் அடி எட்டு, தடை எட்டு, குத்து எட்டு, கோரு எட்டு, கொழு எட்டு, குறி எட்டு, பூட்டு எட்டு, பிரிவு எட்டு, சவுட்டு எட்டு என்று பல சண்டை முறைகள் உள்ளன. மட்டுமல்லாமல் ஓதிரம், கீழ்த்தாரை, மேல் தாரை, புறதாரை, அகதாரை , மேல் உச்சம், கீழ் உச்சம் இடத்தை, வலத்தை, ஒன்று விட்டு ஒன்று , கச்சம் , இந்திதீ, பம்முதல், பதுங்குதல், கோருதல், கொழுவுதல், முக்கோண ஓதிரம், அரக்குவாள், உள்வாள், புறவாள், மேலரக்கு, இடையரக்கு, கீழரக்கு, சுருட்டுவாள் ஆய்ந்த ஓதிரம் ,கடகம் , எறி, சைக்கிள் கம்பு , சூடி, பூட்டு, ஆறுவாள் போன்றவற்றுடன். ஓதிர கடகம்,  குத்தோத கடகம், குத்தடி கடகம், எறி கடகம், உச்சகடகம், இருந்தடி கடகம், வட்ட கடகம், குத்துவட்ட கடகம், (ஆறுவாள் கடகம்), இரட்டை சென்னி கடகம், புறதாரை கடகம், சுருட்டு கடகம், புறதாரை சுருட்டு கடகம், கீழெறி கடகம், (கோரி அடி கடகம்,) குத்திக்கெட்டு கடகம் போன்ற (போர்க்கலை நுட்பங்கள்) மற்றும் 41 விதமான கடகங்கள் என்ற போர்ப்பயிற்சி முறைகள் உண்டு.

சிரமம் என்று இந்த கலைக்கு பெயர் வந்தது எப்படி?

இந்தக் கலை எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பு மிக்கதோ அந்த அளவுக்கு கற்றுக் கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். இந்த கலையைபூஜை போட்டு தட்சணை கொடுத்து முறைப்படி தொடங்கி சுமார் ஆறு சுவடுகள் வரை கற்றுக் கொண்ட பின்னர் தான் முதல் சுவடு புரிய ஆரம்பிக்கும். அது மட்டுமில்லாமல் ஆறு சுவடுகளை பின் சுவடுகளாக கற்றுத் தருவார்கள். அதன் பின்னர் ஆசான் முன்னிலையில் மீண்டும் பூஜை போட்டு தட்சணை கொடுத்து முறைப்படி தொடங்கினால் தான் முன் சுவடு முறைகளை கற்றுத் தருவார்கள் .

இப்படி பல கட்டங்கள் இருப்பதாலும் கற்றுக் கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாலும் இந்த கலைக்கு சிரமம் என்று பெயர் வந்திருக்கலாம் என எனது ஆசான்கள் கூறி உள்ளனர்.

சிரமக் கலை பயிற்சி செய்யும்போது தி தீ என்பது போன்ற சொற்களை சத்தமாக கூறுவது ஏன்?

சிரமம் விளையாடும்போது அடிக்கும் அடிகளின் அளவையும் தீவிரத்தையும் குறிக்கும் விதமாக த, தி, தத், தாம், தித் தீம், தத் தத், தி தீ, இந்தா இது போன்ற சப்தங்கள் எழுப்பப்படுகிறது.

சிரம கலையை தோற்றுவித்தவர் யார் ?

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர் கரையை சேர்ந்த மனுவேல் ஆசான் என்பவர் சிரம கலையை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. அவர் தனது கனவின் மூலம் சிரமக்கலையினை கற்றுக் கொண்டதாக கூறி இருக்கிறார். கனவின் மூலம் கற்றுக் கொண்டதை மாடுகளிடம் விளையாடி பயிற்சி செய்து இருக்கிறார். பின்னர் ஒவ்வொரு இடத்திற்கும் பயணம் செய்து இந்த கலையை பரவச் செய்துள்ளார் என்று எனது ஆசான்கள் கூறியுள்ளனர்.

நீங்கள் சிரம கலையை கற்றுக் கொண்டது எப்படி? அதற்கான காரணம் என்ன?

நான் பாரம்பரியமாக வைத்தியம் மற்றும் அடிமுறை (களரி) ஆகிய குடும்பத்தை சேர்ந்தவன். எனது அம்மாவின் அப்பா (தாத்தா) தாணுவன் வைத்தியர் அவரது தகப்பனார் மிடாலம் கொச்சப்பி வைத்தியர் ஆகியோர் கண் வைத்தியத்தில் சிறந்து விளங்கியுள்ளனர். எங்களது உறவினர்கள் குன்னத்தூர், மிடாலம், பாலப்பள்ளம், கீழ்குளம், செட்டிகுளம், பெருமாங்குழி, திக்கணங்கோடு, திப்பிறமலை, கவியலூர் ஆகிய பகுதிகளில் கண் வைத்தியத்திலும் மற்ற வைத்தியங்களிலும் சிறந்து விளங்கியுள்ளனர்.

மேலும் எனது அப்பாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதாவது எனது அப்பா அப்பு குட்டன் ஆசான், பெரியப்பா புலவர் நாணு குட்டி ஆசான் மற்றும் தாத்தா நீலகண்டன் வைத்தியர் ஆகியோர் அடிமுறை வைத்தியம் போன்றவற்றில் சிறந்து விளங்கியுள்ளனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக எனது நான்காவது வயதிற்கு முன்னரே எனது தந்தை பெரியப்பா, தாத்தா ஆகியோர் இறந்து விட்டனர். ஆகவே அம்மா மற்றும் இரண்டு தம்பிகளை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு இருந்தது.

அதனால் நான் எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்றேன். ஆனாலும் எனக்குள் தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது எனது ஆர்வத்திற்கு எனது அம்மாவும் தாய் வழி மாமாவும் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

ஆகவே எனது 15 -வது வயதில் பாலப்பள்ளம் ராயப்பன் ஆசான், (கொட்டப்பாக்கன் ஆசான்) அவர்களிடமும் பாலபள்ளம் சண்முகம் பிள்ளை ஆசான் என்பவரிடமும் குஸ்தி மற்றும் களரி சுவடு முறைகளை கற்றுக் கொண்டேன். ராயப்பன் ஆசான் ஆந்திராவில் குஸ்தி கற்றுக் கொண்டவர். நான் முதன் முதலில் பொது இடத்தில் விளையாடியது குஸ்தியாகும்.

பின்னர் கூடுதலாக களரி சுவடு முறைகளை புங்கறை தங்கப்பன் ஆசான், மாங்குழி அனந்தன் ஆசான், தலக்குளம் வேலப்பன் ஆசான், ரீத்தாபுரம் மார்ஷல் ஆசான், கடம்பரவிளை ஜான் ரோஸ் ஆசான்,  வெள்ளிகோடு துளசி ஆசான் ஆகியோரிடம் கற்றுக் கொண்டேன். பின்னர் கிள்ளியூர் ராஜ்குமார் ஆசான் அவர்களிடமிருந்து வர்மக்கலையை கற்றுக் கொண்டேன் .

மேலும் ராயப்பன் ஆசான் அவர்களிடம் யோகாசனத்தையும் சாமியார் மடம் கணேசன் என்பவரிடம் ஆன்மீக யோகா பயிற்சி முறைகளையும் கற்றுக் கொண்டேன். மேலும் மத்திக்கோடு சிவகுமார் ஆசான் அவர்களிடம் வர்மம், யோகா முறைகளை கற்றுக் கொண்டேன். மேலும் தெரிசனங் கோப்பு மணி ஆசான், மற்றும் பாலப்பள்ளம் சுவாமி அடியான் ஆசான் என்பவர்களிடமிருந்து வர்மக்கோல் என்ற முறையை படித்தேன் இந்த கம்பு அரை ஜான் அளவு தான் நீளம் இருக்கும். அதில் சுமார் 36 முறைகள் உள்ளன இதில் 64 தட்டு குத்து முறைகள் உண்டு இதில் 34 முறைகள் மிகவும் அபாயகரமானவை ஆகும். இது தற்காப்புக்கும் வர்ம மருத்துவம் செய்யவும் மிகவும் உதவும் முறையாகும்

இந்த நிலையில் சிரம கலை என்று ஒன்று இருப்பதாகவும் அது மிகவும் சிறந்த கலை என்றும் எனது மாமா தெரிவித்ததன் அடிப்படையில் அந்த கலையை கற்றுக் கொண்டேன்.

சிரமக்கலையை தாங்கள் முதன்மையாக வைத்திருக்க காரணம் என்ன?

நான் ஏற்கனவே பல தற்காப்பு முறைகளை கற்றுக் கொண்டிருந்தாலும் சிரமக்கலையை கற்றுக் கொண்டவுடன் எனக்கு அது மிகவும் பிடித்து போனது. இது மிகவும் அருமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் எனக்கு தோன்றியது.என்னை பொறுத்த வரையில் சிரமக்கலை என்பது உண்மையிலேயே ஒரு உயிரோட்டமான கலையாக உள்ளது. ஆகவே சிரமம் கற்றுக்கொண்ட பின்னர் பிரதானமாக சிரமக்கலையினை கற்றுக் கொடுத்து வருகிறேன்.

நீங்கள் கற்றுக்கொண்ட களரி முறைகளில் உங்களுக்கு பிடித்த சுவடு முறை எது?

பொதுவாக எல்லாச் சுவடு முறைகளும் சிறந்த சுவடுகள் தான் சுவடுகளின் உள்ளடக்கத்தை புரிந்து செய்வது மிகவும் சிறப்பானது. மறுபடியும் கூறுகிறேன் சுவடு முறைகள் என்பது ஒன்றே ஒன்றுதான். அடி யும் ஒன்றே ஒன்றுதான் ஆனால் பல்வேறு முறைகளில் சுவடுகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒரு ஆளின் நிலை என்பது ஒரு யானை மிதிக்கும் ஒற்றைக் காலின் அளவு தான் எனவும் எனது ஆசான்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு ஆசான்களிடமும் ஒவ்வொரு விதமான சண்டை பயிற்சி முறைகள் உள்ளன மட்டுமல்லாமல் அவர்களது உடல் மொழிகளுக்கு ஏற்ப இன்னும் வேறுபடுகிறது.

அங்கச்சுவடு 64 என்பது மிகவும் சிறந்த சுவடுமுறையாகும் கற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் இல்லாததால் இந்த சுவடு முறை இப்போது அழிந்து வருகிறது.

ஆனால் நான் அந்த சுவடு முறையை அனந்தன் ஆசான் மற்றும் ராயப்பன் ஆசான் ஆகியோரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். எனது ஆசான்கள் 64 பலா இலைகளை போட்டு எனக்கு பயிற்சி அளித்தனர்.

உங்களது தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருக்க காரணம் என்ன?

நான் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம் மட்டுமல்லாமல் இந்த சிரம கலையை பயிற்சி செய்யும் காலத்தில் ஆயிரக்கணக்கான தடவை பனை மரங்களில் அடித்து பயிற்சி செய்திருக்கிறேன் மட்டுமல்லாமல் கண்ணை கட்டிக்கொண்டு இந்த கலையை விளையாடி இருக்கிறேன். மேலும் எனது அம்மா மற்றும் எனக்கு கற்று தந்த ஆசான்களின் ஆசிர்வாதங்களினாலும் தொடர்ந்து கடினமாக பயிற்சி செய்து வருவதாலும் தனது நிகழ்ச்சிகள் சிறப்பாக இருக்கின்றன.

நீங்கள் எந்தெந்த பொது நிகழ்ச்சிகளில் தற்காப்பு கலை நிகழ்ச்சியை நடத்தி உள்ளீர்கள்?

தமிழக அரசின் சார்பில் புதுடெல்லியில் இரண்டு முறை தற்காப்புகலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறேன். செம்மொழி மாநாட்டிலும் தற்காப்புகலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறேன்.

குமரிசங்கமம் மற்றும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளில் இரண்டு முறை பங்கேற்று தற்காப்புக்கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறேன்.

இது அல்லாமல் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட அரசு நிகழ்ச்சிகளிலும், நூற்றுக்கு மேற்பட்ட தனியார் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் தற்காப்புக்கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறேன்.

மேலும் கேரளாவில் கேரள ராணியின் முன்னிலையிலும், பழசிராஜா பரம்பரையினர் முன்னிலையிலும் பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் தற்காப்பு கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி இருக்கிறேன்.

இந்தக் கலைக்காக தாங்கள் பெற்றுள்ள விருதுகள் பாராட்டுக்கள் சான்றிதழ்கள் என்னென்ன?

எனது சாதனையை பாராட்டி தமிழக அரசு கலை நன்மணி என்ற விருது வழங்கி கௌரவித்துள்ளது. மட்டுமல்லாமல் எனது மகன் ஸ்ரீராமிற்கு கலை இளமணி என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மட்டுமல்லாமல் கலைச் சேவகர், கலைச்செம்மல், கலை பாதுகாவலர் போன்ற பல தனியார் அமைப்புகளின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கலையை தற்போது தங்களிடமிருந்து யாரெல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்?

 இந்த கலையை கேரளாவின் வயநாடு, கண்ணனூர், கோழிக்கோடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்தும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பல தமிழக பகுதிகளிலிருந்தும் பலர் வந்து கற்றுக் கொள்கிறார்கள் மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்களின் காலத்தில் இந்த கலை தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறதே?

வெள்ளைக்காரர்களின் காலத்தில் சிரமக்கலை மட்டுமல்ல போர்க்கலைகள் அனைத்துமே பயிற்சி செய்வதற்கும் பழகுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இது போன்ற போர் பயிற்சிகளை மேற்கொண்டு இந்தியர்கள் வெள்ளையர்களை தாக்கி விடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கையாக வெள்ளையர்கள் இந்த வீர கலைகளை தடை செய்து வைத்ததாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சிரம கலைக்கும் தமிழ்நாட்டின் சிலம்பக்கலைக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் பயன்பாடு என்ன?

சிரம கலை என்பது சிறிய கம்பின் மூலம் நம்மை தற்காத்துக் கொள்ளும் முறையாகும். சிலம்பம்  என்பது நெற்றி அளவு, மூக்கு அளவு ,தொண்டை அளவு போன்ற பெரிய கம்புகளை கொண்டு விளையாடும் முறையாகும்.

இரண்டையும் ஒப்பிடும்போது சிரம கலையின் கம்பைக் கொண்டு செல்வது மிகவும் எளிதானது மட்டுமல்ல ஊன்றுகோலாகக் கூட பயன்படுத்திக் கொள்ள முடியும். மட்டுமல்ல கையில் குடை இருந்தால் கூட அதனை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.  சிலம்ப கலையின் கம்புகளை கொண்டு செல்வது மிகவும் சாத்தியமில்லாத ஒன்று கையாளுவதற்கும் கஷ்டமாக இருக்கும் ஆகவே என்னைப் பொறுத்தவரையில் சிரம கலை சிறந்தது என நினைக்கிறேன். ஏனென்றால் நெடுங்கம்பின் மூலம்  ஒருவர் தாக்கினால் அதனை நெடுங்கம்பின் மூலம் தடுத்து  மீண்டும் மறு தாக்குதல் நடத்துவதற்கு நேரம் ஆகும். சிரம கலையின் மூலம் நெடுங்கம்பினால் தாக்கினால் கூட  எளிதாக தடுத்து மறு தாக்குதல் செய்ய முடியும்.

உதாரணமாக சிரம கலையின் கம்பு ஒரு மாட்டின் வால் எப்படி அந்த மாட்டை தொல்லை கொடுக்கும் ஈக்கள், கொசுக்கள் ஆகியவற்றை எந்த பக்கத்தில் வந்தாலும் சுழற்றி சுழற்றி அடிக்குமோ அது போன்று சிரமகலை கம்புகளை பயன்படுத்தி எதிரி எந்த முறையில் வந்தாலும் தடுக்கவும் தாக்கவும் முடியும். எந்த ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் சிரமக்கலையின் மூலம் கம்பு கொண்டு தடுக்கவும், தாக்கவும் முடியும் என்பது சிரம கலையின் தனி சிறப்பு ஆகும்.

சிலம்ப கலைக்கும் களரி கலைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

களரி என்பது தூய தமிழ் சொல்லாகும் களத்தில் நின்று இந்த வீர கலைகளை பயிற்சி செய்வதால் இந்த கலை களரி என்று அழைக்கப்படுகிறது.

கேரளாவில் இந்த கலை களரி பயிற்று என்று அழைக்கப்படுகிறது பயிற்று என்றால் பயிற்றுவித்தல்  என்று அர்த்தம்.

ஆனால் களரி கலையின் ஒரு பிரிவு தான் சிலம்பம் ஆகும். அதன் இன்னொரு பிரிவு தான் சிரமக்கலை ஆகும். அதாவது தற்காப்பு கலை கற்க செல்லும் மாணவர் முதலில் ஒற்றைச் சுவடு முறையை கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் பிரிவு சுவடு  கைப்போர், கத்தி, வெட்டுக்கத்தி, கந்த கோடாரி, நெடுங்கம்பு வீச்சு ஆகியவற்றையெல்லாம் கற்றுக் கொண்ட பின்னர் தான் சிரமம் கற்றுக் கொடுப்பார்கள். ஏனென்றால் சிரமம் அவ்வளவு ஒழுக்கமான கலை ஆகும் அனைவருக்கும் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். ஆகவே இவ்வளவு ஆண்டுகள்  தொடர்ந்து கற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே சிரமக்கலையை கற்றுக் கொடுப்பார்கள். சிரம கலை கற்றுக்கொள்ள தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டுமே வர்ம கலையையும் சேர்த்து கற்றுக் கொடுப்பார்கள்.

தாங்கள் தற்காப்பு கலை மட்டுமின்றி பிற கலைகளிலும் வல்லவர் என்று கூறப்படுகிறது அதைப்பற்றி கொஞ்சம் கூறுங்கள்?

எனது சிறுவயதில் எங்கள் ஊரில் ஜெயக்குமார் என்று ஒரு அண்ணன் இருந்தார். அவரிடம் சேர்ந்து நாடகம், உடற்பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொண்டேன். அவருடன் சேர்ந்து நாடகங்களில் நடித்துள்ளேன்.

பின்னர் நாகர்கோவிலில் உள்ள நடனச்சாருதா என்ற நடன பள்ளியில் சேர்ந்து பத்து ஆண்டுகள் பரதநாட்டியம் படித்தேன். அந்த பள்ளியை நடத்தியவர் மலையாள நடிகர் சத்யன் அவர்களின் அண்ணன் மகள். அவர் ஒரு சிறந்த நடிகையும் ஆவார். நான் நடனம் கற்றுக் கொண்டிருந்த போது அந்தப் பள்ளியில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியார் அவர்களும் நடனம் கற்றுக் கொண்டிருந்தார்.  எனது பரதநாட்டிய அரங்கேற்றம் மண்டைக்காட்டில் வைத்து நடைபெற்றது. மேலும் நாகர்கோவில், அம்மாண்டிவிளை, தெரிசனங்கோப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடி உள்ளேன்.

நான் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி போன்றவற்றை கற்றுக் கொண்ட பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள பாபு மாஸ்டர் அவர்களிடம் பிரேக் டான்ஸ் கற்றுக் கொண்டேன். மேலும் நந்தன்கோடு வினைய சந்திரன் அவர்களிடம் பரதநாட்டியத்தையும் கற்றுக் கொண்டேன்.

உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி எது ?

நான் சுமார் 27 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் ரியாத் என்ற இடத்தில் வேலை பார்த்தேன். அப்போது எனது நடன திறமையை பார்த்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஓணம் நிகழ்ச்சிக்கு என்னை நடனம் ஆடுவதற்கு அழைத்தனர். நானும் அங்கு சென்று பரதநாட்டியம் ஆடினேன். அங்கிருந்த இந்தியர்கள் உள்பட அனைவரும் எனது நடன திறமையை வெகுவாக பாராட்டி பரிசு வழங்கினர்.

ஆனால் அந்த நாட்டு சட்டத்தை மீறியதாக சவுதி அரேபிய நாட்டின் போலீசார் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அது இந்திய தூதரகத்தின் அனுமதியுடன் நடந்த நிகழ்ச்சி என்பதால் இந்திய தூதரக அதிகாரிகள் தலையிட்டு இந்த வழக்கிலிருந்து எங்களை விடுவித்தனர்.

 இந்த சம்பவத்திற்கு பிறகு அங்கு அவ்வப்போது இது போன்ற இந்திய கலாச்சார நடனங்கள் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் புராதன பரதநாட்டியத்தை வெளிநாட்டில் அதுவும் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடி பரிசு, புகழ் பெற்ற சம்பவம் எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.

தங்களது எதிர்கால திட்டம் என்ன?

அழிந்து வரும்இந்த கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசமாக இந்த பயிற்சியை அளித்து வந்தேன். ஆனால் விரும்பி பயிற்சி கட்டணம் செலுத்தினால் அதை ஏற்றுக் கொள்வேன். இந்த கலை அழிந்து போகாமல் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது முழு லட்சியமாகும்.

ஆகவே மத்திய அரசின் சார்பில் சிரமக்கலையை ஆவணப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அரசு இதுபோன்ற அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்றார் ஆசான் நாணப்பன்.

அழிவின் விளிம்பில் உள்ள இத்தகைய கலைகள் இன்னும் எத்தனை காலம் உயிர் வாழும் என்ற கவலை பாரம்பரிய கலை விரும்பிகளுக்கு உள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் படிப்பு, வேலை, குடும்ப சூழ்நிலை, பண தேவைகள் ஆகியவற்றால் யாருக்கும் நேரமில்லாத சூழ்நிலையில் இந்த கலைகளை கற்றுக் கொள்வது சாத்தியமானதாக இல்லை. கலை நன்மணி திரு.நாணப்பன் ஆசான் அவர்கள் போன்றவர்கள் மூலம் இந்த கலையை மீண்டும் துளிர்க்க வைக்கஇன்றைய மாணவர்கள் முன் வர வேண்டும். கலை நன்மணி திரு.நாணப்பன் ஆசான் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

பேட்டி கண்டவர்

G. ஜெய கர்ணன் இணை ஆசிரியர்,

உதவி :

திரு.R. அஜோய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *