பேராசிரியர் முளங்குழி பா.லாசர்
பம்பாயில் ஏழை பர்சி குடும்பத்தில் பிறந்த பிக்காஜி பட்டேல், ருஸ்தம் காமா என்பவரை மணந்து கொண்ட காரணத்தால் பிக்காஜி ருஸ்தம் காமா ஆனார்… மேடம் காமா என அழைக்கப்பட்டார். கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று 1902- ஆம் ஆண்டு லண்டன் சென்றார்.
இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக வீரமுடன் போராடினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகிய தாதாபாய் நவுரோஜி பிரிட்டீஸ் பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தபோது அவரது செயலாளராய்ப் பணியாற்றினார்.
1906- ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட எல்லா நாடுகளின் தேசியகொடிகளும் பறக்கவிட்டிருந்தன. அப்போது மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இந்திய நாட்டின் தேசியக்கொடி எது என்று கேள்வி எழுப்பினர். மேடம் காமா அப்போது பச்சை வண்ணச்சேலை அணிந்திருந்தார். முந்தாணை காவிவண்ணத்திலிருந்து சேலையின் ஒருபகுதியை கிழித்து காவி பச்சை வண்ணத்தை இணைத்து இதுதான் எங்கள் தேசியக்கொடி என்று கூறி பறக்கவிட்டார். அந்த மாநாட்டில் இந்திய நாட்டுக்கு பரிபூரண சுதந்திரம் வேண்டுமென்று வீரமுழக்கமிட்டார் மேடம் காமா அன்று. அவர் அமைத்த கொடியில் சில மாறுதல்களுடன் இந்திய நாட்டு தேசியகொடி உருவாயிற்று.
வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியநாட்டு விடுதலைக்காகப் போரிட்ட அனைவருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். விரசவார்க்கார், வ.வே.சு ஐயருடன் இணைந்து வெள்ளையருக்கு எதிராக மறைமுகப் போரில் ஈடுபட்டார். தம் மகனைப் போல் கருதி அன்பு செலுத்திய வீரசவார்க்கரை 1910-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் கைது செய்து விசாரணைக்காகக் கப்பலில் இந்தியா கொண்டு வந்து கொண்டிருந்தனர். பிரான்ஸ் நாட்டின் மார்செயில்ஸ் துறைமுகத்தில் தப்பித்து கரையேறுவேன். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு காருடன் தயாராக நிற்கும் படி மேடம் காமாவுக்கும், வ.வே.சு ஐயருக்கும் வீரசவார்க்கார் தகவல் கொடுத்தார். சொன்னபடி கப்பல் கழிவறைத்தூணை பிடித்து கடலில் குதித்து நீந்தி கரையேறி காரை நோக்கி ஓடினார்.
வெள்ளைக்கார போலீசார் விடாமல் துரத்தினார். வீரசாவார்ககர், வ.வெ.சு ஐயரும் மூன்று நிமிடங்கள் தாமதமாக சென்றனர். வீரசாவார்க்கார் வெள்ளைக்கார போலீசாரால் கைது செய்யப்பட்டார். அன்று மட்டும் காமாவும், வ.வே.சு ஐயரும் சரியான நேரத்தில் காருடன் சென்றிருந்தால் இந்திய நாட்டு விடுதலைப்போர் வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும்.
வீரசவார்க்கர் பிடிபட்டதால் செய்வதறியாது திகைத்து நின்ற மேடம் காமாமும், வ.வே.சு ஐயரும் தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டுக்கதறி அழுதனர்.
வ.வே.சு ஐயர் பாண்டிச்சேரியிலிருந்து விடுதலைப்போரில் ஈடுபட்டபோது அவருக்கு மேடம் காமா அனுப்பிக் கொடுத்த கைத் துப்பாக்கியால் தான் வீரவாஞ்சிநாதன், கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரனாரைப் பல வழிகளில் துன்புறுத்திய ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்றார்.
வெளிநாடு சென்ற அனைத்து இந்தியர்களிடமும் தொடர்பு கொண்டு வெள்ளையருக்கு எதிராக வியூகம் அமைத்துக் கொடுத்து போராடத் தூண்டினார். வெள்ளையரைக் காணும் இடங்களில் எல்லாம் அடியுங்கள், கொல்லுங்கள் என்றார்.
மேடம் காமா பாரிஸ் சென்று அங்குள்ள மக்களிடம் இந்திய நாட்டு விடுதலைப்போர் பற்றி எடுத்துக் கூறி ஆதரவு திரட்டினார். இந்திய நாட்டுக் குடிமகள் என்பதால் முதல் உலக யுத்தத்தின் போது மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலையான பின் 28 ஆண்டுகள் இந்தியா செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மேடம் காமா மனம் கலங்காமல் போராடினார்.
தன் வளர்ப்பு மகள் லட்சுமியுடன் ஜெர்மன் நாட்டின் பெர்லின் சென்ற போது மாபெரும் வீரன் நாஞ்சில் நாட்டு ஜெய்கிந்த் செண்பகராமனை சந்தித்தார். செண்பகராமனும், லட்சுமியும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் காதல் வயப்பட்டனர். 1931 – ஆம் ஆண்டு மேடம் காமா இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். 1934-ஆம் ஆண்டு செண்பகராமன் இறந்தார். நான்கு ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த லட்சுமி கணவன் விருப்பப்படி அவரது அஸ்தியை இந்தியா கொண்டு வந்து கரமனை ஆற்றிலும், நாஞ்சில் நாட்டு வயல்வெளிகளிலும் தூவினார்.
இந்திய நாட்டு விடுதலைக்காகப் போராடியது மட்டுமல்லாமல் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டார். தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் ஆதரவற்ற அனாதைப் பெண்களுக்கு எழுதி வைத்தார்.
1935- ஆம் ஆண்டு தம் 74- ஆம் வயதில் நோயின் காரணமாக இந்தியா திரும்பினார். சிகிட்சை பலனின்றி அவ்வாண்டே பம்பாயில் காலமானார். வட இந்தியாவில், மக்கள் மேடம் காமாவின் விடுதலைக்கான செயல்களைப் பாராட்டி பல்வேறு சாலைகளுக்கு பிக்காஜி ருஸ்தம் காமா சாலை என்று பெயர் சூட்டி அவரைப் பாராட்டுகின்றனர்.
இந்திய அரசு மேடம் காமாவுக்கு 1962- ஆம் ஆண்டு அவர் பெயரில் அஞ்சல் தலை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது.
Leave a Reply