தமிழ் நாடகத்தந்தை சங்கரதாசு சாமிகள்

தமிழ் நாடகத்தந்தை சங்கரதாசு சாமிகள்

  • By Magazine
  • |

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால், ‘நாடக உலகின் இமயமலை’ என்று புகழப்பெற்ற சங்கரதாசுசாமிகள் தமிழ் நாடகத்தந்தை என்றும் போற்றப்படுகிறார்.

புதுநெறி
இவர் நலிந்து கிடந்த நாடகத் தமிழுக்கும்இசைதமிழுக்கும் புதுநெறி வகுத்தவர். கூத்துமரபில் இருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடகத்தை அரங்கமரபிற்கு ஏற்ப முறைகளை உருவாக்கியதோடு மட்டுமின்றி தெருக்கூத்துகளையும் புதுப்பித்தவர்.

தமிழ் நாடக வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப்பயிற்சி அளித்தார்.சங்கரதாசுசாமிகள், தூத்துக்குடியில் தமிழ்ப் புலமைமிக்க தாமோதரன்-பேச்சியம்மா தம்பதியருக்கு மகனாக 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் சங்கரன்.
தந்தையிடமே தொடக்கக் கல்வி கற்ற சங்கரதாசுசாமிகள், தண்டபாணி சாமிகளிடம் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தார். 16 வயதில் சொந்தமாகக் கவி புனையும் ஆற்றலைப்பெற்றார். தூத்துக்குடி உப்பு பண்டசாலையில் சில காலம் கணக்கராகப் பணியாற்றினார். 24-ஆவது வயதில் பணியைத் துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார். முதலில் நடிகராகவும்பின்னர் நாடக ஆசிரியராகவும் சங்கரதாசுசாமிகள் புகழ்பெற்றார்.வள்ளிவைத்தியநாதஐயர், அல்லி இராமேசுவர ஐயர் ஆகியோரின் நாடக சபைகளில் சில காலம் ஆசிரியராக இருந்த சங்கரதாசுசாமிகள் பின்னர் வேலுநாயரின் சண்முகானந்த சபையில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது பம்மல் சம்மந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்துக்குப் பாடல்களை எழுதினார்.

சமரச சன்மார்க்கநாடகசபை என்ற சொந்த நாடகக்குழுவைச் சிலகாலம் நடத்தினார். அப்போது இக்குழுவில் பயிற்சி பெற்ற எஸ்.ஜி.கிட்டப்பா (கே.பி. சுந்தராம்பாளின் கணவர்) பிறகு நாடக உலகில் இணையற்ற புகழ் பெற்று விளங்கினார்.

சங்கரதாசுசாமிகளின் காலத்தில் நாடகக் குழுக்கள் பெரும்பாலும் சிறுவர்களைக் கொண்டே நடத்தப்பட்டன. சிறுவர்களாக இவரிடம் பயிற்சி பெற்ற பலர் பிற்காலத்தில் நாடக உலகிலும்திரை உலகிலும் புகழ்பெற்றனர்.
யதார்த்த நடிப்பு டி.கே.எஸ்.சகோதரர்கள், நவாப்இராச மாணிக்கம், எம்.ஆர்.இராதா, யதார்த்தம் டி.பி. பொன்னுச்சாமி,கே.சாரங்கபாணி ஆகியோர் சங்கரதாசுசாமிகளிடம் பயிற்சி பெற்றவர்கள் தான்.
அக்காலத்தில் அவர் எழுதிய பாடல்களைப்பாடாத நாடகக் கலைஞர்களே இல்லை என்று கூறலாம். சங்கரதாசுசாமிகள் சனீசுவரன், எமன், இராவணன். இரணியன் கதாபாத்திரங்களில் நடித்தார்.

சாவித்திரி நாடகத்தில் எமன் பாத்திரத்தில் இவர் நடித்ததைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்குக் கர்ப்பம் கலைந்ததாம். நளதமயந்தி வேடத்தில் சனீசுவரன் வேடத்தில் சங்கரதாசுசாமிகள் நடிப்பு தத்ரூபமாக அமைந்தது. இரவு முழுவதும் நடித்து முடித்துவிட்டு விடியற்காலையில் அங்குள்ள ஆற்றுக்குச் சென்று வேடத்தைக்களைய முற்பட்டார். அப்போது அதைப் பார்த்த ஒரு பெண் மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் வேதனை அடைந்த சங்கரதாசுசாமிகள் நாடகத்தில் நடிப்பதை விட்டு விலகி ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். தமிழ்நாட்டில் நாடகக் கலை நலிவடைந்த காலத்தில் 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதித் தயாரித்தார்.


மதுரை வீரன்
அபிமன்யு சுந்தரி, அரிச்சந்திரா, குலேபகாவலி, சத்தியபாமா சாவித்திரி, நல்லதங்காள், பவளக்கொடி, வள்ளி திருமணம், வீரஅபிமன்யு, மதுரை வீரன் உள்ளிட்ட நாடகங்கள்குறிப்பிடத்தக்கவை. இந்நாடகங்கள் அவருக்குப் புகழையும் பெருமையும் தேடித்தந்தன. இதில்பெரும்பாலான நாடகங்கள் திரைப்படங்களாகஎடுக்கப்பட்டன.
சேக்சுபியரின் நாடகங்களையும் அக்காலத்தில் மொழி பெயர்த்துள்ளார். நாடகத்திற்காக முழுவதும் அர்ப்பணித்த அவர் அதற்காகத் திருமணம் செய்து கொள்ளவில்லை. அக்காலத்தில் அவர் எழுதிய பாடல்களைப் பாடாத நாடகக் கலைஞர்களே இல்லை என்று கூறலாம்.

தமிழ் நாடகமேடைக்குத் தனது அசாத்திய உழைப்பின் மூலம் பெரிய அளவில் மரியாதையை ஏற்படுத்தித் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து கலைப்பணியாற்றினார். அக்காலத்தில் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்துக்குச் செல்வதற்குப் போக்குவரத்து வசதி கிடையாது. மாட்டு வண்டியில் தான் கலைக்குழுவினருடன் பயணம் செய்வார். நாடகம் இரவு 10 மணிக்குத் தொடங்கும் என்றால் கொட்டகை வாசலில் 7:30 மணிக்கு வேட்டு வெடிப்பார்கள். மூன்று முறை வேட்டு வெடிக்கும். இச்சத்தம் சுற்றியுள்ள 8 மைல் தூரத்தில் உள்ள மக்களுக்குக் கேட்கும். இச் சத்தத்தைக் கேட்டுக் கூத்துமேடையில் நாடகம் நடக்கிறது என்று நினைத்து அதைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள். மின் விளக்கு வசதி இல்லாத அக்காலத்தில் ‘பெட்ரோமாக்சுவிளக்கு’ மூலம் நாடகத்தை நடத்துவார்.
ஒரே இரவில் ஒரு நாடகத்தை முழுமையாக எழுதி முடிக்கும் திறமை இவருக்கு இருந்தது. அவ்வை சண்முகம் கதாநாயகனாக நடித்த அபிமன்யு சுந்தரி என்ற நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்தார். 4 மணி நேரம் நடக்கும் இந் நாடகத்துக்குத் தேவையான உரையாடல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களையும் அவர் எழுதியது அவரது திறமையைப் பறைசாற்றும்.

55 ஆண்டுகள் வாழ்ந்து நாடகக் கலைக்கு அரும்பணியாற்றிய சங்கரதாசு சாமிகள் இறுதிக் காலத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.1922-ஆம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி புதுச்சேரியில் இறந்து விட்டார். அவர் உடல் புதுவை கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள நடிகர் சங்கத்தில் இருக்கும் கலையரங்கத்துக்கு ச்சங்கரதாசுசாமிகள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்குக்குச் சங்கரதாசுசாமிகள் அரங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக நாடகத் துறைக்குச் சங்கரதாஸ் சாமிகள் கலைத்துறை எனப் பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *