“ஆட்டுக்குட்டி என்ற நூலை வெளியிட்டுள்ளார் கவிஞர் குமரி ஆதவன். இந்த நூலில் அநியாயங்கள், அறியாமைகள், மூடநம்பிக்கைகள் அவற்றின் மூலம் மனித சமுதாயம் அடைந்து வரும் துன்பங்கள் அந்த துன்பங்களை கூட கடவுள், சாதி, மதம் என்ற பெயரால் ஆதரிக்க கூடிய மனிதர்கள் என்ற வகையில் மனித சமூகத்தில் நிலவி வரக்கூடிய சீர்க்கேடுகளை சுமார் 73 கவிதைகள் மூலமாக வெளிக் கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர்.
‘’நம்பிக்கையை மெச்சினோமென்று
அசரீரி சொல்ல
அநியாயமாய்ப் பலியானது
ஆட்டுக்குட்டி
அருகில் நின்ற
தாய் ஆட்டின் அலறலில்
காடு அதிர்ந்தது
கடவுள் வரவில்லை
அசரீரி கேட்கவில்லை’ என்பது போன்று பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கிறது பல கவிதைகள்.
ஒரு வகையில் நாம் வேர்களை இழந்து விட்டோம். வாழ்வியலுக்கான அழகியலை அறுத்து விட்டோம். வாழ்க்கைச் சூழல்களின் மாற்றங்களினால் நமது சுவாசத்தையே இழந்து விட்டோம். ஓடையும், பாறையும், காக்கா, குருவிகளும் ஞானத்தை இயல்பிலே மனிதர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தது. அந்த ஞானத்தின் வெளிச்சத்தை அணைத்து விட்டு, வேகமான சூழலில் வாழ்க்கையின் ரசனையை இழந்து விட்டோம் என்னும் கூறுகளை ‘ஆட்டுக்குட்டியின் அலறல்’ சொல்லுகிறது. ஒருவனை மனிதனாக யார் வளர்த்திருக்க முடியும்? அவன் சிறுபருவத்து வாழ்க்கையின் பிடி நிலைகளின் வேர்கள் எங்கு பதியமாகும்? நீர்நிலைகள் கொடுத்த வாழ்வியல் கொண்டாட்டங்களை இன்றைய நவீன யுகம் கொடுக்கவில்லையே! கூடி களிக்கவும், மீன்கள் பிடிக்கவும், உழவு மாடுகளை குளிப்பாட்டி மகிழவும் மனிதர்களுக்காக நீர் நிலைகள் கிடந்தன. ஒரு காலத்தில் அங்கெல்லாம் மனிதர்களின் வேர்கள் மண்ணோடு பதிந்தன.
Leave a Reply