– துவாரகா சாமிநாதன்
“சனியன்…சனியன்..என்னா பாடு படுத்துறான் இவன வச்சு மாரடிக்க முடியல” என்று கத்தினாள் ரோசி. அவள் தொண்டை வற்றும் அளவுக்கு கத்துவதை அங்கு யாரும் கவனித்ததாக தெரியவில்லை.
அப்போதும் துருவன் பெரிய பாத்திரத்தில் ஏதோ போட்டு கலக்கிக் கொண்டிருந்தான். அது கொல கொலவென அவனது கைகளிலிருந்து வழிந்தது.
“ஏங்க உங்களத்தான்..சொல்றது காதில விழல”
“அவன கொஞ்சம் பாருங்க நான் இங்க இட்லி மாவு கரைக்கிறதா வேணாமா” எனறு திரும்பவும் சத்தம் போட்டாள்
டிவியிலும் செல்போனிலும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த துருவனின் ‘டாடி’ பிரேம் திரும்பினார்.
“என்னடி கத்துற..புள்ளன்னா அப்புடித் தான்டி இருப்பான். அதுக்குன்னு சனியன் சனியன்னு எத்தன தடவடி சொல்லுவன்னு” மல்லுக்கு வந்தார் துருவனின அப்பத்தா மங்கலம்.
இவர்களின் எந்த சண்டையையும் கவனிக்காத துருவன் அந்த சட்டியில் இட்லி மாவு, கொஞ்சம் கோதுமை மாவு செம்மண் அள்ளி போட்டு குழப்பி அதை எடுத்து தரையில் பூசினான்.
“டாடி… டாடி… இங்க பாருங்க இது நல்லாயிருக்கா”என்றான் துருவன்.
“ஏண்டா உங்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன் என்னைய டாடின்னு கூப்பிடாத அப்பான்னுதான் சொல்லனும் கேட்டிச்சா”
ஏண்டி புள்ளைக்கிட்ட சொல்லிக் கொடுக்க சொல்லியிருக்கேன்ல. அவன பாரு டாடின்னு திரும்பவும் கூப்பிடுறான்” என்றார் பிரேம்.. “ஏங்க இப்ப அது ரொம்ப முக்கியம்”
கஷ்டப்பட்டு அரைச்ச மாவ கொட்டித் தீர்த்திட்டானே என்று ஆத்திரத்தில் துருவன் முதுகில் ஒன்னு நல்லா விரல் பதிய வைத்தாள் ரோசி. அவளுக்கு தெரியாமலேயே இரண்டாவது பாத்திரத்தில வைத்திருந்ததையும் எடுத்துட்டான்.
அவன் கை வைத்து அள்ளிய இடம் அந்த மாவில் செம்மண் கரைகளாக இருந்தன. அதுவொரு வண்ணத்துப்பூச்சி போல் இருந்தது.
துருவனுக்கு முதுகில் வாங்கி பழகி போச்சு அழாமல் கோபமாக மூச்சை இழுத்து இழுத்து விட்டான். மூஞ்சியை கோணி வைத்தான்.
அங்கே இருந்த கார் பொம்மை எடுத்து எதிர் சுவற்றில் அடித்தான். அது சிதறி விழுந்த கணம் அவளும் கத்தினாள்.
“இது புள்ளையா அப்புடியே கோபம் அவுங்க அப்பன உரிச்சு வச்சிருக்கு படுவா அவனும் அப்புடித்தான் கிடைச்சதெல்லாம் போட்டு நொறுக்குவான்” என்றாள் மங்கலம்.
“சும்மா இரும்மா நீ வேற எரியுறதுல எண்ணெய ஊத்துற” மகன் இப்படி சொன்னதும். மங்கலம் அதற்கு பின் பேசாமல் இருந்தாள்.
“இல்லங்க துருவனை இனிமே இப்படி பண்ணா நான் ஹாஸ்டல்லதான் சேர்ப்பேன்” என்று ரோசி சொன்னதும். பெருங்குரலெடுத்து அழுது கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டான் துருவன்.
ஹாஸ்டல்லன்னு சொன்னா பயப்படுவான். வீட்டை ரெகள கட்டி அடிப்பான். அதனால் அதைச் சொல்லி அடக்கி வைக்கப் பார்த்தாள் ரோசி.
துருவனின் அப்பத்தா அவனை மடியில் அணைத்து கொண்டாள். தலையை கோதிக் கொடுத்தாள். அப்பத்தா கத சொல்லு என்றான். அழுகையை அப்படியே நிறுத்தி விடுகிறது அப்பத்தாவின் வருடல்.
“ஏண்டி புள்ளைய இப்படி பேசாதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்”
“இல்லங்க அவன நாம நல்ல டாக்டருட்ட கூட்டிட்டு போய் காண்பிக்கனும். இல்லன்னா அவ்வளவுதான். என்னால அவன மேய்க்க முடியாதுங்க”
“என்னடா பேசுரிங்க இதுக்கெல்லாமா புள்ளைய ஆஸ்பத்திரிக்கு அதுவும் பைத்திய டாக்டருட்ட கூட்டி போவீங்க” என்றாள் மங்கலம்.
அய்யோ அம்மா நீ வேற அது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்ல. மன நலம் பார்க்கிறவர். கவுன்சிலிங்க் கொடுக்கத்தான் கூட்டிட்டு போறோம். ஏந்தான் எல்லாரும் சேர்ந்து என்ன இப்படி படுத்துறீங்களோ என்று கத்த ஆரம்பித்தான் பிரேம்.
அத்தோடு எல்லாம் அமைதியானது. துருவன் அப்பத்தா மடியில் அழுது கொண்டே தூங்கிப் போனான்.
துருவனின் சேட்டைகள் ஐந்து வயதிலிருந்தே இப்படித்தான் ஆரம்பித்தன. என்னவாக இருந்தாலும் எல்லாவற்றையும் நீரில் கரைத்து, அதை இப்படித்தான் ஏதாவது அள்ளிப் போட்டு குழப்பி அடித்து எங்காவது பூசி வைப்பான். அந்த கோலம் அலங்கோலமாகத்தான் இருக்கும்.
இப்படித்தான் பக்கத்து வீட்டு அருண் பர்த்டே அன்னைக்கு அவனுக்கு வாங்கி வைத்திருந்த கேக்கை கழிப்பறையின் வாசலில் எடுத்து அப்பி வைத்து இரண்டு வீட்டிற்கு பெரிய சண்டையாகி, பிரேம் புது கேக் வாங்கி கொடுத்து அத்தோடு பேச்சு வார்த்தை இன்றி அங்கு போகக்கூடாது என கண்டிசன் போட்டு தடுத்தார்கள்.
அவனின் அப்பா வாங்கி வரும் பொம்மை அனைத்தையுமே உடைத்து அதற்கு மண்ணையும் கோலப் பொடியையும் தண்ணியில கரைத்து பூசி வைப்பான்.
ஒரு நாள் அப்படித்தான் அவர்களின் வீட்டின் அடுப்பில் வைத்திருந்த கஞ்சி பானைக்குள் அங்கிருந்த இலை தலைகளும் தக்காளியையும் கொட்டி, கொஞ்சம் ராகி மாவையும் அள்ளி போட்டு கையை உள்ளே விட்டு அள்ளி விட்டான். சூடு தாங்காமல் கத்தி கையை உதறி விட்டான். அப்போது வந்த அவனின் அம்மா கண்ணில் பட்டு விட்டது.
கண்ணை பொத்திக் கொண்டே வந்து பார்த்தவள் எரிச்சலுடன் அவன் முதுகில் டின் கட்டினாள்.
அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருவருக்கும் செலவு பண்ணி பார்த்து வந்ததை பிரேம் சொல்லிக் காண்பித்துக் கொண்டே இருந்தான். அதுவும் ரோசிக்கு மிக எரிச்சலை தந்தது.
வாடகை வீட்டு கண்டிசன் வேறு பெரிய தலை வலியா இருக்கும் இவனாலேயே பல வீடுகள் மாறிவிட்டார்கள். இப்ப இருக்கிற விட்டுச் சுவர் முழுதும் ஏதாவது கிறுக்கி வைத்திருப்பான். நல்ல வேளையாக இந்த வீட்டு ஓனர் எதுவும் சொல்லல.
“சனியன் சனியன் என் உசிர வாங்கன்னே வந்திருக்கு” என்றாள்.
“அப்ப நீதான் பெரிய சனியனா?” என்று சொல்லி அவனது அம்மாவை கேட்டதற்கும் துருவனுக்கு அடி விழுந்தது. வாய்த்துடுக்கும் அதிகம்.
ஒவ்வொரு நாளும் துருவனின் சேட்டைகள் அதிகமாகின. அதன் முத்தாய்ப்பாக ஒரு நாள் டிவி பெட்டியை ஸ்குருடிரைவர் வைத்து குத்தி நடுவில் ஓட்டை போட்டு அதற்குள் தண்ணீர் ஊற்றி கோலம் போட வைத்திருந்த கலர் பொடியை அள்ளிப் போட்டு கலக்க கையை விட்டதில் கரண்ட் சாக்கடித்து அவனை தூக்கி வீசி விட்டது. சத்தமில்லை.
புகை நாத்தமும், காந்துகிற மாதிரி இருக்குன்னும் மங்கலத்து ஆத்தா வந்து பார்த்தாள். அவள் சத்தம் போட்டதும் கொல்லையில் நின்றவர்கள் எல்லோரும் அலறி அடித்து கொண்டு வந்து புள்ளைய தூக்கி போட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் பிழைக்க வச்சு கொண்டு வந்தார்கள்.
அதற்குள் ரோசிக்கும் பிரேமுக்கும் அவ்வளவு சண்டை. ஏதோ நல்ல காலம் புள்ள பிழைத்துக் கொண்டான். என்னம்மா புள்ள வளர்க்கிற லட்சணம் என்று தெருவில் எல்லோரும் ரோசியை மட்டும் திட்டி தீர்த்தார்கள்.
அவ்வளவு பிரச்சனைகளையும் டாக்டரிடம் சொல்லி முடித்தாள் ரோசி. இப்ப ஆட்டோவில் வரும் போது கூட, அதன் இருக்கையில் பஞ்சை நோண்டி எடுத்திட்டான் சார். அவள் சொல்லிக் கொண்டிக்கும் போதே அங்கிருந்த வண்ணங்களின் குப்பியிலிருந்து கையில் அப்பிக் கொண்டு வந்த வண்ணத்தை டாக்டரின் சட்டை கையில் பூசினான்.
“பாருங்க சார் டேய் இப்ப இந்த பக்கம் வர்றீயா இல்லையா” என்று பிரேம் அதட்டினான்.
டாக்டர் அவர்களை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, துருவனை அழைத்து சில கேள்விகளை கேட்டார்.
“நீ என்னவாக ஆகப் போகிறாய்?” “நானொரு வண்ணம் குழைப்பவனாகப் போகிறேன்”
“என்ன? வண்ணம் குழைப்பவனா? அவன் என்ன செய்வான்?”
“அவனா. அவன் வண்ணங்களை குழைத்து படங்கள் வரைவான்”
“படம் வரைந்து என்ன செய்வான்?”
“படம் வரஞ்சாதான் எல்லாருக்கும் ஹாப்பியை தர முடியும்”
“ஆனா உங்க டாடி மம்மி மகிழ்ச்சியா இல்லையே”.
“அதுதான் அங்கிள் புரியல இத்தன நாள் நான் வரைந்த எந்த படத்தையும் அவங்க பார்க்கவே இல்ல” டாக்டர் அவனை அங்கிருந்த வண்ணங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவன் அதை குழைக்க ஆரம்பித்தான்.
டாக்டர் திரும்பவும் அவர்களை அழைத்து பேசினார். அவர்களில் யாருக்கு ஓவியம் மிகவும் பிடிக்கும் என்று கேட்டார். அப்பதான் ரோசியின் கதையை சொன்னாள்.
அவள் ஓவியத்தின் மீது சிறுவயதிலிருந்தே ஆசை கொண்டிருந்தவள் என்றும். அவள் அம்மாதான் பொண்ணா பொறந்த பொண்ணு இதெல்லாம் சரியா வருமான்னு, அதட்டி அவள் வரைந்த படத்தை தீயிட்டு கொளுத்தி விட்டாள் என்றும். துருவன் வயிற்றில் இருந்தபோது கூட திரும்பவும் நான் எனது ஓவியம் வரையும் ஆசையை நினைவில் கொண்டேன் என்றும் எல்லாவிசயத்தையும் விளக்கினாள்.
“அப்புறம் ஏன் துருவனுக்கு இயல்பாக வந்த அந்த திறனை தடுத்தீர்கள் என்ன நடந்தது”. டாக்டர் கேட்டார்.
இவர்தாங்க பண்ணிய வேலை அவன் ஒரு நாள் ஸ்கூலில் வைத்திருந்த டிராயிங்க் காம்படிசன் போது அங்கிருந்த அனைத்து கலர் பெயின்டையும் குழைத்து கையால் அந்த அறை முழுதும் அடித்து வைத்து விட்டான் என்று சொல்லி அவனோட டீச்சர் கம்பளயின்ட் பண்ணிட்டாங்கன்னு எந்த கலர் பன்ற விசயத்தையும் வாங்கி வர்றதே இல்லை டாக்டர். அதான் புள்ள ஏங்கி போய்ட்டானோ என்னவோ என்றாள் ரோசி
அதற்கு எல்லாம் சேர்த்து இப்ப நீங்க இரண்டு பேரும் அவனோட இரண்டு நாள் இருந்து படம் வரையனும், கலர் பண்ணனும். அவன் என்ன செய்தாலும் அதை பாராட்டனும். அவனுக்கு அதன் மேல் கொள்ளைப் பிரியம் அதனால உங்களுக்கு புள்ள நல்லாக வேண்டும் என்றால் அதை நீங்க செய்துதான் ஆகனும் என்று கண்டித்து சொல்லி விட்டார்.
வரும்போதே. பல வண்ணங்களையும் வண்ணம் தீட்ட தேவையான எல்லாவற்றையும் வாங்கி வந்தார்கள். அவனோடு சேர்ந்து அவனை வரைந்தார்கள்.
Leave a Reply