டெங்கு காய்ச்சலுக்கு    – நிலவேம்பு

டெங்கு காய்ச்சலுக்கு    – நிலவேம்பு

  • By Magazine
  • |

– நமது மூலிகை மருத்துவர்

தமிழ் மருத்துவத்திற்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் இனிப்பான செய்தியாக “நிலவேம்பு குடிநீர்” என்ற மருந்தை தந்து பெருமை சேர்த்துள்ளது “நிலவேம்பு”. இது பாரம்பரியமாக தமிழக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது தான். இதன் மகத்துவம் இப்பொழுதுதான் உலகத்திற்கு தெரியவருகிறது.

டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற காய்ச்சல்களுக்கும், காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் சிறந்த மருந்து நிலவேம்பு குடிநீர்.

நிலவேம்பு கசப்பு சுவை உடையது. குறுகிய நீண்ட இலையும், நாற்கோண வடிவ தண்டும், வெண்ணிற சிறு மலரும் கொண்ட கரும்பச்சை நிறமுடைய சிறு செடியே இந்த நிலவேம்பு மூலிகை ஆகும். நிலவேம்பில் இருவகை உண்டு. அவை,

1. நாட்டு நிலவேம்பு

2. சீமை நிலவேம்பு (சூரத்து நிலவேம்பு)

நாட்டு நிலவேம்பு

ஒன்றரை அடி உயரம் வரை வளரும். நம் நாட்டில் கிடைப்பது இதுவேயாகும்.

சீமை நிலவேம்பு

இது மூன்று அடி உயரம் வரை வளரும். ஆனால் செய்கையிலும், குணங்களிலும் இரண்டும் ஒன்றேயாகும்.

மருத்துவத்திற்கு பயன்படும் உறுப்பு

இலை, தண்டு மற்றும் சமூலம்

தாவரவியல் பெயர்

        Andro graphis paniculata

குடும்ப பெயர்

Acanthaceae (ஆடாதோடை குடும்பம்)

வேறு பெயர்கள்

                கிரிசாத்து, சிரட்குச்சி, காண்டகம், கிராதம், கிரியாத்து, நாட்டு நிலவேம்பு.

நிலவேம்பை சிலர் சிறியா நங்கை என்று தவறுதலாக குறிப்பிடுகின்றனர். ஆனால் சிறியா நங்கை என்பது வேறு இனச்செடியாகும்.

வளரிடங்கள்

நிலவேம்பிற்கு பூர்வீகமே தென் இந்தியாவும், இலங்கையும் ஆகும்.

இது உலர்பூமி, பயன்படாத பூமி, சாலை ஓரங்கள், மலை ஓரங்கள் ஆகிய இடங்களில் பரவலாக காணலாம்.

பயிரிடும் முறை

நிலவேம்பை விதைமூலம் பயிர்பெருக்கம் செய்யலாம். இதற்கு சூரியவெளிச்சம் அதிகமாக வேண்டும். இதனை 4 மாதங்களில் அறுவடை செய்யலாம். இது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் ஒன்றாகும்.

குணம், செய்கை (நவீன ஆராய்ச்சியின் படி)

  • காய்ச்சல், உடல்வலி, வாதநோய்கள், தோல்நோய்கள், விஷஜந்து கடிகள் போன்றவற்றிற்கு நல்லது.
  • நோய் எதிர்ப்புசக்தியை உண்டாக்கும்.
  • எய்ட்ஸ் நோய் தாக்கத்தை குறைக்கும். இரத்த வெள்ளை அணுக்களை அதிகப்படுத்தும்.
  • புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் சக்தியும் இதற்கு உள்ளது.
  • கல்லீரலை பாதுகாக்கும்.
  • வைரஸ் காய்ச்சல், சளி, உடல்வலி ஆகியவற்றை குணமாக்கும்.
  • சைனசைட்டிஸ் என்ற பீனிசநோயை குணமாக்கும்.
  • டெங்கு, சிக்கன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சலை குணமாக்கும்.
  • இரத்தக்குழாயில் இரத்தக்கட்டிகள் உருவாதலை தடுத்து இருதய தசையை பாதுகாக்கும்.
  • பக்கவாதநோய் உண்டாகாமல் பாதுகாக்கும்.
  • நீரிழிவுநோயை குறைக்கும்.
  • இரத்தத்தை சுத்தம் செய்து தோல்நோயை குணமாக்கும்.

இதில் அடங்கியுள்ள தாவர வேதிப்பொருள்கள்

முக்கிய வேதிப்பொருள் Andrographolide, Di Terpenoid Lactone ஆகும். இந்த தாவர வேதிப்பொருள்கள் தான் இம்மூலிகையின் கசப்பிற்கு காரணமும், நோய் குணமாக்கும் செய்கைக்கு காரணமும் ஆகும். அதிக கசப்பு சுவையின் காரணமாக இதற்கு “கசப்புகளின் அரசன்” (King of bitter) என்று வேறுபெயரும் உண்டு.

மேலும், Panicolide, Panicolin, Caffeic போன்ற வேதிப்பொருள்களும் உள்ளன.

நிலவேம்பை பயன்படுத்தும் விதம்

மேற்கண்ட செய்கை குணங்களில் குறிப்பிட்ட நோய்களை நீக்க, நிலவேம்பை பொடியாகவோ, சாறாகவோ, கசாயமாகவோ பயன்படுத்தலாம்.

பொடியாக பயன்படுத்தினால் அதன் அளவு ஒருவேளை 1 முதல் 3 கிராம் வரை சாறாக பயன்படுத்தினால் அதன் அளவு ஒருவேளை 5 முதல் 10 மி.லி வரை, தனிப்பட்ட முறையில் கசாயமாக பயன்படுத்தினால் ஒரு வேளை 30மி.லி முதல் 60மி.லி வரை பயன்படுத்தலாம்.

தோல்நோய், நீரிழிவிற்கு நிலவேம்பு

நிலவேம்பை தினமும் காலையில் ஆகாரத்திற்கு முன் 5 முதல் 10 இலை வரை கடித்து சாப்பிட உடலில் உண்டாகும் ஊரல், சொறிசிரங்கு போன்ற தோல்நோய்கள் மாறும். மேலும் நீரிழிவுநோயையும் கட்டுப்படுத்தும்.

பட்டிதொட்டியெல்லாம் பயன்படுத்தி வரும் “நிலவேம்பு குடிநீர்”

நிலவேம்பு, வெட்டிவேர், ராமிச்சம் வேர், சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் வகைக்கு சம அளவு எடுத்து இடித்து சதைத்துக் கொள்ளவும். இதுவே நிலவேம்பு கசாயபொடியாகும். இப்பொடியை 10 கிராம் எடுத்து 320 மி.லி தண்ணீர் சேர்த்து அதனை பாதியாக  வற்றவைத்து, இரண்டு அல்லது மூன்று வேளை குடித்துவர டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா காய்ச்சல் மற்றும் அனைத்துவித காய்ச்சல்கள் தீரும். வாதம், உடல்வலி, நீரிழிவு, பீனிசம் தீரும். மேலும், காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம். 

குறிப்பு

மேற்கண்ட கசாயம் கசப்பாகத் தான் இருக்கும். அரசாங்கத்தின் பரிந்துரைப்படி டெங்குகாய்ச்சல், சிக்கன்குனியா காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட கசாயமும் இதுவேயாகும்.

புண்கழுவ நிலவேம்பு கசாயம்

நிலவேம்பை மட்டும் தனியே எடுத்து நிழலில் உலர்த்தி கசாயமிட்டு சொறி, சிரங்கு மற்றும் நாட்பட்ட புண்களை கழுவி வர அவை விரைவில் குணமாகும்.

நிலவேம்பு ஊறல் குடிநீர்

நிலவேம்பு சதைத்தது 7கிராம், கருவாபட்டை சதைத்தது 1கிராம், கொதித்த தண்ணீர் 150மி.லி. இதனை 6 மணிநேரம் ஊற வைத்து 50மி.லி. வீதம் 3 வேளை குடித்துவர, காய்ச்சல், மூட்டுவலி மாறும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் காய்ச்சலுக்கு கசாயம்

நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, அமிர்தவள்ளி வகைக்கு 10 கிராம், தண்ணீர் 500 மி.லி. சேர்த்து காய்த்து 125 மி.லி ஆக வற்ற வைத்து 20 முதல் 30மி.லி வரை கொடுத்துவர குழந்தைகளுக்கு உண்டாகும் காய்ச்சல் தீரும்.

கவனிக்க வேண்டியவைகள்

நிலவேம்பு பாதுகாப்பான ஒரு மூலிகை ஆகும். ஆனால் அதிக அளவில் பயன்படுத்தும்போது வயிற்றுப்பொருமல், பசிமந்தம், வாந்தி ஆகியன உண்டாகலாம். கருவுற்ற பெண்கள் இதனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் கருச்சிதைவு உண்டாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *