நாளைக்கு என்ன என்பது யாருக்குத் தெரியும்?

  • By Magazine
  • |

– ஓஷோ

சீனாவில் சிறந்த ஒரு கதை இருக்கிறது.

ஓர் அரசனுக்கு தன் பிரதம மந்திரி மேல் கோபம் வந்து விட்டது. என்னவோ செய்துவிட்டான். எனவே அவனுக்கு அரசன் மரணதண்டனை விதித்தான். அரசனின் ஆணைப்படி மரணதண்டனை விதிக்கப்பட்டவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பது ஒரு வழக்கமாக இருந்தது. தண்டனை நிறைவேற்றப்பட ஒரு நாள் இருக்கும் போது அரசன் அவனிடம் போக வேண்டும். என்ன ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். மரண தண்டனை பெற்றவனுடைய கடைசி ஆசை நிறைவேற்றி வைக்கப்படும்.

இந்த பிரதம மந்திரி சாதாரணமானவன் அல்ல, பல வருடங்கள் அரசனுக்கு தொண்டு செய்தவன். அவனுக்கு மிகவும் நெருக்கமானவனும் கூட. ஆனால் எங்கோ என்னவோ நடந்து விட்டது. எனவே அடுத்தநாள் காலை அவனுக்கு மரணதண்டனை. அரசன் அதற்கு இருபத்து நான்கு மணி நேரத்துக்கு அவனை பார்க்க வந்தான். அந்த மந்திரி தைரியமானவன். பல போர்க்களங்களை பார்த்தவன். ஆனால் அரசன் வந்த போது அவன் அழுது கூப்பாடு போட ஆரம்பித்தான். கண்களில் நீர் வழிந்தோடியது. அரசன் சொன்னான்.

எவ்வளவு தைரியமானவன் நீ ! நீ இப்படி அழுவதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நாளைக்கு காலையில் தூக்கில் தொங்கப் போகிறாய். அதற்காக இவ்வளவு அழுகையும் ஆர்ப்பாட்டமுமா? மரணத்தைக் கண்டு பயமாக இருக்கிறதா என்ன? அவன் சொன்னான். அது இல்லை அரசே! மரணத்தை கண்டு நான் பயப்பட்டதே இல்லை. இது வேறு விஷயம். ஆனால் எதற்கு அதைச் சொல்லிக் கொண்டு? விட்டு விடுங்கள். அதைச் செய்ய இனி நேரம் இல்லை. அரசனுக்கு ஆவல் வந்து விட்டது. என்ன விஷயம்? என்னிடம் சொல். உன்னுடைய கடைசி ஆசையைத் தான் நிறைவேற்ற வந்திருக்கிறேன். என்னிடம் சொல்லி விடு. நீண்ட நாட்கள் அரசாங்கத்துக்குச் சேவகம் செய்திருக்கிறாய். உன்னுடைய ஆசை என்னவென்றாலும் நிறைவேற்றி வைக்கிறேன். சொன்னால் போதும்.

அவன் சொன்னான், சரிதான். நீங்கள் வற்புறுத்தினால் சொல்கிறேன். பெரிய கதை. நான் சிறுவனாக இருந்த போது பெரிய குருவோடு இருந்தேன். அவர் பெரிய ஞானி. அவரிடம் நிறைய ரகசியங்கள் இருந்தன. ஒரு ரகசியத்தை நான் கற்றுக் கொண்டேன். அந்த ரகசியம் என்னவென்றால் ஒர் அரிய வகை குதிரை இருக்கிறது. அதற்கு பறக்கக் கற்று கொடுக்கலாம. வாழ்நாள் முழுக்க அந்த வகை குதிரையை தேடிக் கொண்டியிருந்தேன். கிடைக்கவே இல்லை. ஆனால் விதியின் விளையாட்டைப் பாருங்கள். நீங்கள் ஏறி வந்திருக்கும் குதிரை தான் சரியான குதிரை. ஆனால் நாளைக் காலை நான் உயிரோடு இருக்க மாட்டேன். அந்தக் கலை அப்படியே என்னோடு இல்லாமல் போய் விடும். அந்த ரகசியத்தை மனிதர்கள் தெரிந்து கொள்ளவே முடியாது. அதனால் தான் எனக்கு இத்தனை அழுகை.

அரசன் சொன்னான். குதிரை பறக்குமா? எத்தனை நாட்கள் வேண்டும் உனக்குஈ? அதற்கு கொடுப்பதற்கு? அரசனுக்கு அக்கரை வந்து விட்டது. இந்தக் குதிரை பறக்க முடியும் என்றால் பிரம்மாதமாக இருக்கும். ஒப்பிட்டுச் சொல்ல வேறு எந்தக் குதிரையும் இருக்காது. வேறு எந்த அரசனும் அப்படிப்பட்ட குதிரை தன்னிடம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அவன் உன் தண்டனை பற்றி மறந்து போ. எவ்வளவு காலம் ஆகும் என்று அதைச்சொல்.

அவன் சொன்னான் ஒரு வருடம் ஆகும். அரசன் சரியென்றான். அதனால் என்ன? ஒரு வருடம் நீ முயன்று பார். குதிரை பறக்கிறது என்றால் உன்னை தூக்கில் போட மாட்டேன். அது மட்டும் இல்லை. என் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன். என் ராச்சியத்தில் பாதி உனக்குத்தான். ஆனால் குதிரை பறக்கவில்லையென்றால் உன்னைத் தூக்கில் போட்டு விடுவேன். எப்படியும் ஒன்றும் பாதகமில்லை. வெளியோ வா. குதிரையை பிடித்துப் போ.

அவன் குதிரையை பிடித்துக் கொ£ண்டு வீட்டுக்குப் போனான். அவனுடைய மனைவியும் குழந்தைகளும் அழுது கொண்டிருந்தார்கள். அதுதானே அவனுடைய கடைசி நாள். அடுத்த நாள் கணவன், தந்தை செத்துப் போவான். ஆனால் அவனைப் பார்த்த போது அவர்களுக்கு அவர்களுடைய கண்களையே நம்ப முடியவில்லை. குதிரை மேலேறி வருகிறானே! கனவு தான் காண்கிறோமா என்று நினைத்துக் கொண்டார்கள். என்ன விஷயம் என்று கேட்டார்கள். எப்படி அவனால் வரமுடிந்தது.

அவன் கதையைச் சொன்னான். மனைவி மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள். நீ ஒரு முட்டாள். அப்படி எந்த வித்தையும் உனக்குத் தெரியாது என்று எனக்கு தெரியும். பொய் சொல்லிருக்கிறாய். பொய் சொன்னதும் சொன்னாயே! ஏன் ஒரு வருடம் என்று சொன்னாய்! ஐம்பது வருடம் என்று சொல்லியிருக்கலாமே! இருபது வருடம் என்றாவது சொல்லியிருக்கலாமே! ஒரு வருடம் சீக்கிரம் ஓடிப் போய் விடும். அந்த ஒரு வருடமும் அடுத்த வருடத்தை நினைத்து நினைத்துச் செத்து கொண்டிருப்போம். நீ செத்துத்தானே ஆக வேண்டும்.

அவன் சொன்னான் பயந்து போகாதே! ஒரு வருடம் என்பது நீண்டகாலம். அரசன் செத்துப் போகலாம். நான் செத்துப் போகலாம். கடைசியில் இந்தக் குதிரை கூட செத்து போகலாம். அதனால் கவலைப்படாதே. கவலையே வேண்டம்… ஒரு வருடம் என்பது நீண்ட காலம். நாளை என்ன என்பது யாருக்குத் தெரியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *