வர்மம் எனும் மர்மக்கலை!

வர்மம் எனும் மர்மக்கலை!

  • By Magazine
  • |

– முனைவர் முல்லைத்தமிழ்

கைமுட்டு வர்மம்

சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான விசபந்த வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைமுட்டு வர்மம் பற்றி அறிவோம்.

இவ்வர்மம் கைமுட்டின் வெளிப்புறக்குழியில் அமைந்துள்ளது. கைமுட்டி வர்மம், புறமூட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது.

“குணமான கைமுட்டுக் குழியிலப்பா

முட்டுவர்மமிதற்கு பேரு”.

                                                                                                                – கலைக்கண்ணாடிச் சூத்திரம்

“ஆகுமே முட்டுக்குழி மேல்பக்கத்தில்

                அடிகொண்டால் கை வீங்கும் களைப்புண்டாகும்

மட்டறிய காதிரைச்சல் மயக்கம் வியர்வை

                முறிவாக முட்டு நொந்துளயும் வீங்கும்

வீறான நரம்பு வலித்த நல்போல் காயும்

                விருவிருத்து கையதுவும் பெருச்சலாகி

மாங்கிஷத்தில் இரத்தமயம் மாறலாகும்

                                மாசமாறில் வரும் முட்டு வாதமென்றே”.

                                                                                                                வர்ம தாண்டவம்-500

“வாங்கியந்த கரமதில் மூட்டுவர்மம்

மகத்தான அடியிடிகள் கொண்டுதானால்

தாங்கியந்த கரமதிலே கூச்சமாகி

தயவாக விருவிருத்து நொந்து வீங்கும்

மாங்குசத்தில் ரத்தமயம் மாறலாகும்

மகிமையான வல்லாரை பிழிந்து தாக்கு

நீங்குமடா தடவி மெள்ள நெட்டி வாங்கி

நிர்ணயமாய் உள்ளுக்கும் கொடுத்திடாயே”.

                                                                                                                வர்மச் சூத்திரம் -136

                “தானான முட்டுவர்மம் கொண்டாலோ

                                தளரும் தேகம் தானிடித்து படபடக்கும்

                மானான வியர்வையுடன் கையும் வீழும்

                                கதகதத்துக் கதறுமடா வலியதனால்

                கானான கழுத்துறையில் கையிதமாய்

                                கணக்கறிந்து சென்னிசெவிக்குற்றி வழி

                வானான வகையறிந்து தடவிசெய்ய

                                அகப்புறச்சூத்திரத்தில் அடங்கும் தானே”.

                                                                                                                                வர்ம திறவுகோல்

 என குறிப்பிடுகிறது. மேலும்,

ஆகு நெறிக்கை முட்டுப்புறம் அசைவுற்றுற

ஏகு எல்லின் மேல்முட்டு வன்மம் என்பவாம்

போகுமஃது கொண்டிடில் பொல்லாங்குறவது

வாகுறு வலிமிஞ்சி வன்மை இழிவாமென்னே!

                                                                                                                – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                எப்போதும் நெறி தவறாது இயக்கமுற்றுக் கொண்டிருக்கும் கைமுட்டின் புற அசைவு பகுதியில் எல்லின் மேல் முட்டுவர்மம் அமைந்துள்ளது. அந்த வர்மத்தில் தாக்கம் கொண்டால் பல்வேறு இன்னல்கள் உருவாவதோடு வலி மிஞ்சி கையின் வலிமையும் குறைந்து விடும் என்பதாம்.

இழிவுறும் வன்மையன்னவாம் தளருமுடல்

அழிவுறும் மயக்கம் வியர்வையும் மட்டுதற

கழிவதாம் காதிரைச்சல் மந்தமும் காயமதால்

வழியறும் கண்ணதன் மயக்கத்தால் என்னே.

                                                                                                – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                கையின் வலிமை குறைவடைவது போன்று உடலும் தளர்ந்துவிடும். உணர்வு அழிவுற்று மயக்கமும் வியர்வையும் தோன்றும். தொடர்ந்து காதின் கேள்வித்திறன் இல்லாதாகி இரைச்சலும் மந்தமும் உண்டாகும். காயம் கொண்ட தன்மை மிஞ்சுவதனால் கண்களின் பார்வையிலும் மயக்கம் தோன்றி இயங்கும் வழியும் அற்று விடும் என்பதாம்.

என்னுறும் விடமஃது ஏறினாப் போல் ஏறும்

மன்னுறும் கழுத்துடன் கையதும் உழையும்

நின்னுறும விறுவிறுப்பு மதமதப்பு என்னவாம்

கொன்னுறுப் கொடுவலியதலான் என்னே.                 

– வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                கைமுட்டு வர்மத்தில் காயம் கொண்டால் விடம் ஏறுவது போன்று கழுத்தும் கையும் உழைச்சல் உண்டாகும். அவ்வாறு ஏறும்போது விறுவிறுப்பும் மதமதப்பும் உண்டாகி வலியால் துன்பமுண்டாக்கும் என்பதாம்.

என்னுறும் ஒத்தடம் பூச்சும் உறுமனல் மணலுப்புமாம்

தொன்னுறும் வகை எனும் கட்டும் தைல ஒழித்தலும்

இன்னுறுமின்னல் இழிந்துறச் செய்முறை மருந்துமகம்

கொன்னுறக் கொண்டுறல் முறையெனும் சால்பே.                                                      

வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                கைமுட்டு வர்மத்தில் காயம் கொண்டால் ஒத்தடமும் பூச்சும் செய்தல் நன்று. மணலுப்பு போன்றவைகளின் ஒத்தலோடும் பண்டைய காலங்களிலிருந்தே கடைப்பிடிக்கப்படும் கட்டுபோட்டு தைலம் விடுதலும் இதனால் உண்டாகும் துன்பங்களை மாற்றும். எனினும் அகமருந்து செய்து முறைப்படி உண்பதே இந்நோயை முழுமையாக தீர்க்கும் முறை எனச் சொல்லப்படுவதாம்.

முட்டுக்கை வன்மம் முழங்கும் தைலமதால்

தொட்டுப் பழந்தூசிக் கட்டித்தாரை தன்னை

இட்டும் கொடுத்திடுகிலிதமாம் உள்ளினகம்

மட்டுப்படுத்தும் மருந்தினிகொள்ளும் வழிகேள்      

    – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                கைமுட்டு வன்மம் கொண்டால் அதனை தீர்க்கும் தைலமதை பாதிக்கப்பட்ட இடத்தில் பழந்துணியினால் சுற்றி நனைத்துக் கொடுத்துக்கொண்டே இருக்க நலமுண்டாகும். எனினும் அதன் குற்றங்களைத் தீர்க்கும் மருந்துகள் உண்ணும் வழிமுறைகளை கேளுங்கள் என்பதாம்.

முட்டுவன்மம் கொண்டால் நல்மருந்தொன்று

தொட்டால்வாடிப் பிரண்டை நல்சீந்திலொடும்

தட்டான் கொட்டோசைத் தனி அமுக்கூரமாம்

விட்டிடாதே திறிகடுகோடோமம் நல்மதுரமாமே           

  – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                முட்டுவர்மம் கொண்டால் உண்பதற்கு சிறந்த மருந்தொன்று தொட்டால் வாடி, பிரண்டை, சீந்தில், வெள்ளைக்குன்றிவேர், அமுக்கூரம், திறிகடுகு, ஒமம், அதிமதுரமுமே.

மதுரமொடும் திற்பிலியின் மூலம் நல்கோட்டம்

அதிர முறுமானை நெருஞ்சில் நற்பாவுடனெடு

உதிரமுறும் வேங்கைப்பட்டை விளாம்பட்டையொடு

சதிரமுறும் சமனெடையாய்  பொடித்தெடே

                                                                                                                வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

                மதுரம், திறிபிலியின் மூலம், கோட்டம், யானை நெருஞ்சில், பறங்கிப்பட்டை, வேங்கைப்பட்டை, விளாம்பட்டை இவைகளை சம எடையாய் பொடித்து எடுத்துக் கொள்ளே.

பொடியாய்ப் பொடித்ததனை தூசிதனிலரித்து

வடிவாய்த்தேனில் வாங்கியே நேரமதுமூன்று

துடியாய்த் தினம் உண்டு உண்டு வந்திடில்

கொடியதாய் பற்று பிணிமுற்றுமறும் பாரே.              

  – வர்ம யோகச்சூத்திரம்

விளக்கம்

பொடியாய் பொடித்து துணியில் அரித்து தேனில் தினம் மூன்று நேரம் மறவாமல் தொடர்ந்து உண்டு வந்தால் கைமுட்டுவலி மற்றும் பற்றி வரும் பல பிணிகளும் மாறும் என்பதாம் என வர்ம யோகச்சூத்திரமும் குறிப்பிடுகிறது.

இவ்வர்மத்தில் ஊக்கமாய் அடியிடிகள் கொண்டால் கையில் கூச்சமுண்டாகி செயலிழந்ததுபோல் ஆகிவிடும். அளவுக்கு மிஞ்சிய வலியினால் வியர்வை, விருவிருப்பு, படபடப்பு, தளர்ச்சை, மயக்கம், ஜன்னி போன்றவைகள் உண்டாகும். கையில் வீக்கமுடன் இரத்தக்கட்டும் உண்டாகும்.

இவ்வர்மத்தை இளக்குவதற்கு கழுத்துறை வழியே கை வரை நீரோட்டமாய் தசைவழி தடவி, அடங்கல்களை தூண்டி பாதிப்படைந்த இடத்தில் கட்டிட்டு எண்ணெய் போட்டு வரவும். தொடர்ந்து வலி இருக்குமானால் ஒற்றடம், பற்று, பாளம் போன்றவைகளோடு அகமருந்தும் செய்துவர சுகமுண்டாகும் என அனுபவ வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வர்மத்தில் தாக்கம் கொண்டவர்களுக்கு பின்னாட்களில் இரத்தம் குறைந்து கை தசை சூம்புதல், அடிக்கடி கை கோச்சல், கைவலி, கரவாதம், தீராத கோபம் போன்ற பல பின்விளைவுகளில் ஏதேனும் ஒன்றோ பலவோ ஏற்பட வாய்ப்பு உண்டு என வர்ம சுவடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வர்மத்தை தூண்டுவதற்கு பெருவிரல், மூவிரல், மொழி இவைகளால் செய்யப்படும் அழுத்தல், தூண்டல், அதிர்த்தல், அமத்தல் போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கைமுட்டு வர்மத்தை தூண்டும்போது தசைநோய்கள், கழுத்துவலி, உடல்வலி, விருவிருப்பு, விறைப்பு, ஒருபக்க தலைவலி, தோள்பட்டை வலி, பல் வலி, காக்கை வலி, முழங்கை வலி, திடீரென பேச இயலாமை, காதுமந்தம், தொண்டை கரகரப்பு இவைகள் படிப்படியாக குணமாகும் என அனுபவமிக்க வர்ம வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *